Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : கடைசி சொத்து

சிலப்பதிகாரத்தில் கோவலன் கொல்லப்பட யார் காரணமாக இருந்திருப்பார் என்பதை தன்னுடைய அபார கற்பனை சக்தியால் விவரிக்கிறார், ஆசிரியர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sunday short story - aravind kumar

publive-image

Advertisment

அரவிந்த் குமார்

ஆசிரியர் விளக்கம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முக்கியமானது சிலப்பதிகாரம். அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளாய், பலநூறு அறிஞர்களால் வெவ்வெறு விதமாக உரை சொல்லப்பட்டுள்ளது. வால்மீகி ராமாயணத்தை, தமிழுக்கு தக்கவாறு மாற்றியுள்ளார் கம்பர். ராமாயண கதாபாத்திரமான அகலிகையை தன்னுடைய பார்வையில் சாபவிமோசனம் என்று சிறுகதையாக எழுதியுள்ளார் புதுமைப்பித்தன். அந்த முன்னோடிகளை மனதில் தொழுது, அவர்கள் கொடுத்த தைரியத்தில், சிலப்பதிகாரத்தை என் கற்பனையில் கோவலன் - கண்ணகிக்கு நடந்தவற்றை அவர்களின் தந்தையின் பார்வையில் சிறுகதையாக எழுதியுள்ளேன். சிலருக்கு இது பிடிக்கலாம், பலருக்கு இது பிடிக்காமல் போகலாம். சிலப்பதிகாரத்தில் கை வைக்க நீ யார்? என்ற கேள்விக்கு மேற்சொன்ன உதாரணங்களே பொருந்தும்.

.....................................................................................................

மாசாத்துவனின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. எழுநிலை மாடத்தில் குளிர்நிலவின் கீழ் நின்றிருந்த போதும், அவன் நெஞ்சு சுரந்த தீ அணைந்தபாடில்லை. பெருமைமிகு புகார்நகரின் உயர்குடி தனவணிகன், ஒட்டுமொத்த புகாரின் தரைவழி வணிகத்தை கட்டுக்குள் வைத்திருப்பவன். பகல்நேர சந்தையான நாளங்காடியிலும், இரவு நேர சந்தையான அல்லங்காடியிலும் அவனின்றி ஓரணுவும் அசையாது. ஆனாலும் யவன நாடுகளின் சீர்மிகு பொருட்கள் பட்டினப்பாக்கத்தின் வீதிகளில் புரளக் காரணமாகும் கடல்வணிகர்கள் மீதுதான் சோழனுக்கு காதல். அதனாலேயே அவர்களுக்கு முதல்மரியாதை. துணிகளை விற்கும் அறுவை வீதிகளில் விரிக்கப்படும் சீன தேச பட்டுத் துகிலின் மீது சோழ அந்தப்புர பெண்களுக்கு அளவுகடந்த மோகம். இதனால் எளிதில் அரண்மனைக்குள் புகும் வாய்ப்பும், அதிகாரமும் கடல் வணிகர்களான நாவிகர்களுக்கு அதிகம். தரைவழி வணிகர்களான சாத்துவர்களைக் காட்டிலும் கடல்வழி வணிகர்களான நாவிகர்களிடமே அதிகம் கதைகேட்க அமர்கிறான் சோழன். செல்வத்தால் உயர்ந்து நின்றாலும் இந்த நாவிகர்கள் முன் சற்று பின்தங்க நேரிடுகிறதே என்ற சிந்தனை நாள்தோறும் மாசாத்துவனை மனம் பதையச் செய்தது. குறிப்பாக நாவிகர்களின் தலைவனாக விளங்கும் மாநாய்கன் கண்ணில் விழுந்த மணலாக உறுத்திக் கொண்டே இருக்கிறான்.

வணிகர்களுக்கே உரிய நயமான பேச்சு, கடல் கடந்த பயணங்களால் கிடைத்த அனுபவங்கள், ரோம தேசத்தின் ருசிமிகு திராட்சை ரசத்தை மொத்தமாக வைத்திருக்கும் அங்காடி ஆகியவற்றால் புகார் நகர பெருவணிகரில் அவனுக்கு முதலிடம், அடுத்த இடம் மாசாத்துவனுக்கு. நாளங்காடி சதுக்க பூதத்திற்கு இடும் படையலில் அந்தணர், அரசர், வேளிர் என்ற வரிசையில் மாநாய்கனுக்கு அடுத்தே மாசாத்துவன். படையிலிடும் விழாவின் போதும், சோழனின் எண்பேராய குழுவின் போதும் மாநாய்கனை, மாசாத்துவன் சந்திப்பதுண்டு. பெரிய பழக்கம் இல்லாவிட்டாலும் ஊரின் இருபெரும் தனவணிகர்கள் என்பதால் முகமன் கூறிக்கொள்வதும், ஒன்றாக தாம்பூலம் தரிப்பதும் வாடிக்கை. ஒருநாளும் மாசாத்துவனை குறைத்து நடத்தியதில்லை மாநாய்கன். அதற்கான சிந்தனையும் அவனிடம் எழுவில்லை. ஆனாலும் மன்றக்கூட்டங்களில் மாநாய்கனுக்கு எழும் வாழ்த்து பேரொலிகள் மாசாத்துவனின் மனதை குடைவதை அறிந்ததில்லை மாநாய்கன். மாசாத்துவனும் குணத்திலோ, செல்வத்திலோ குறைந்தவனல்ல. ஆனால் மாநாய்கனை கண்டால் மட்டும் பாழாய்போன பொறாமை மட்டும் விடாமல் பற்றிக்கொண்டு அவனை பாடாய்படுத்தியது. அந்த நினைப்புடனே தான் தலையை உலுக்கியபடி மாடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

எழுநிலைமாடத்தின் விளிம்பில் கையூன்றி நிழல் வீசிக்கிடக்கும் தோட்டத்தை உற்று நோக்கினான். அங்கே வசந்த மண்டபத்தில் நீருற்று அருகே தன்னிலை மறந்து யாழிசைத்துக் கொண்டிருந்தான் மகன் கோவலன். வியாபார குடும்பத்தில் பிறந்தாலும் அதில் ஈடுபாடில்லாமல் இசையென்றும், கலையென்றும் சொல்லித் திரிந்து கொண்டிருந்த கோவலன் குறித்து மாளாத்துயர் உண்டு மாசாத்துவனுக்கு. இன்று அந்த துயரே, மனவிடுதலைக்கு காரணமாக மாறியது. ஆம் கோவலன் தான், தன் துயர்களின் மருந்தென உணர்ந்தான் மாசாத்துவன். எதுகொண்டும் வீழ்த்த இயலா மாநாய்கனை சம்பந்தி ஆக்கி தனக்கு தலைவணங்க வைப்பது ஒன்றே வழியென கண்டான். அந்த நினைவு வந்ததுமே, மனக்கண்ணில் புகார் நகரின் அவையில் நெஞ்சுயர்த்தி மாசாத்துவன் முன்னால் நடக்க, அவன் பின்னால் மாநாய்கன் நடப்பது போன்ற சிந்தனை வந்து சென்றது. இதுவரை இருந்த பித்துறு நிலைமாறி சித்தம் தெளிந்தது போல் படியிறங்கினான் மாசாத்துவன். இதுவேதும் தெரியாமல், துளைந்து துளைந்து இசையில் தொடஇயலா பண் ஒன்றை தேடிக்கொண்டிருந்தான் கோவலன்.

மறுநாள் உற்றார், உறவினர் புடைசூழ பட்டினப்பாக்கத்தின் பெருநிலை மாளிகை ஒன்றில் வாசம் செய்த மாநாய்கன் இல்லம் தேடி சென்றான் மாசாத்துவன். ரத்தினம், முத்து, பவளம், வைரம், தங்கம் என ஒவ்வொரு தாம்பாளத்திலும் அணிஅணியாய் ஆபரணங்களை குவித்து இளம்பெண்கள் நீண்டவரிசையில் ஏந்திவர, யானை மீது சாமரம் வீச கோவலனை அமரவைத்து வந்து பெண்கேட்டதால் வியந்து போனான் மாநாய்கன். மகள் கண்ணகியின் மணவிழா குறித்து எண்ணியதுண்டு, அது இத்தனை விரைவில் கைகூடும் என்று மாநாய்கன் நினைத்துப் பார்க்கவில்லை. அகவை பன்னிரெண்டில் அடியெடுத்து வைத்த கண்ணகிக்கு தகுந்த வரன் பார்க்க வேண்டும் என்ற இல்லாளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே வந்து நின்றான் கோவலன். ஊர்மன்றில் விழாவெடுத்து ஒட்டுமொத்த புகாருக்கும் உணவளித்து முதுபார்ப்பான் மூட்டிய தீயை வலம் வந்து கண்ணகியின் கரம்பிடித்தான் கோவலன். கண்ணீர் திரையிட்டு கண்ணகியை மாநாய்கன் தாரைவார்த்த பொழுதில் மாசாத்துவனின் மனதில் ஓர் நிம்மதி மூண்டதை யாரறிவார்.

மணமுடித்த கையோடு கோவலன்-கண்ணகியை தனிமனைப்படுத்தினான் மாசாத்துவன். வாணிகம் செய்ய வீதிக்கும் வந்தவனில்லை. இல்வாழ்வின் சிக்கல்களை எதிர்கொண்டவனுமில்லை கோவலன். அழகான இளம்பெண், அகவை பதினாறு எனும் இளமை பெருகும் காலம், இவையெல்லாம் ஒன்றுதிரள அவளருகில் சென்று பொன்னொத்த அவள் முகத்தையும், சங்கையொத்த அவள் கழுத்தையும், நறுமணம் வீசும் அவள் கூந்தலையும் நுகர்ந்து கரும்பென்றும், தேனென்றும் வர்ணித்தான். செவிநுகர பண்ணிசை என்று வினவினான், மௌனத்தையே பதிலாக தந்தாள் கண்ணகி. விரல் சொடுக்கி யாழெடுத்து பாலைப்பண் ஒன்றை நிரவு என்றான், தந்தி கம்பிகளை அப்போது தான் அறிந்தாள் கண்ணகி. இளமையின் வேகத்திற்கு ஈடுகொடுக்காத கண்ணகியின் வயதும், கலையின் அருமையை ருசிக்க முடியாத அவளின் நிலையும் கோவலனுக்கு இயலாமையை ஏற்படுத்தியது.

மறுநாள் தந்தை மாசாத்துவனை சந்தித்த கோவலன், தான் ஆடற்கலையை ரசிக்க விரும்புவதாகவும் ஆயிரம் கழஞ்சு பொன்வேண்டும் என்று வந்து நின்றான். காலில் தீட்டிய செம்பஞ்சு குழம்பின் சுவடு கூட அற்றுப்போகாத நிலையில் கணிகையர் இல்லம் ஏகும் மகனை உற்றுப் பார்த்தான். மருகன், மனையாளை நீங்கி, தலைக்கோலி வீட்டிற்கு சென்றான் என்ற செய்தி கேட்டால் மாநாய்கன் முகம் எவ்வாறு போகும் என்று ஒருகணம் எண்ணினான் மாசாத்துவன். சிந்தையில் தெரிந்த இருமை அவன் முகத்தில் படர்ந்தது. எண்ணிப் பார்க்காமல் பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தான்.

யாழிலும், குழலிலும், பறையிலும், துடியிலும், முழவிலும், எக்காளத்திலும் எந்த நுண்ணிசையை எண்ணி எண்ணி ஏங்கினானோ கோவலன், அந்த இசையே உருவாய் வந்து நின்றாள் மாதவி. அல்லியம், கொடுகாட்டி, பாண்டரங்கம், கடையம் என பதினோரு வகை கூத்துக்களை நெளிந்து நெளிந்து ஆடினாள். அடுக்கடுக்காய் தொடுத்துவைத்த மாலையணிந்து சுழன்று சுழன்று ஆடிய மாதவி, தன் கழுத்தினின்றும் கழற்றி அதை கூட்டத்தை நோக்கி வீசினாள். தங்கள் கழுத்தில் வந்து விழாதா என்று ஏங்கிப்போய் பலர் நிற்க, அது கோவலனின் கழுத்தில் வந்து விழுந்தது.

மாலையுடன் திகைத்து நின்ற கோவலனை பார்த்தாள் மாதவி. வண்டை தேடிவந்த பூ அது. மாதவியின் எழில்முகத்தை எண்ணியபடியே கணிகையர் வீதியை வலம்வந்தான் கோவலன். மாதவிக்கு விலைபேச அவள் தாய் சித்திராபதி, மாதவியின் பச்சை மாலையை சந்தையில் காட்டி, அதனை அதிக விலைகொடுத்து வாங்குவோர் அடையலாம் மாதவியை என அறைகூவல் விடுத்தாள். மாசாத்துவனிடம் பெற்று வந்த அத்தனை பொன்னையும் கொடுத்து மாதவியின் முன்னின்றான் கோவலன். அவன் வேண்டி வந்தது என்னவோ, அது அத்தனையும் அள்ளித் தந்தாள் மாதவி. யாழெடுத்து மீட்டு என்றான் இடைஒசிந்து மீட்டினாள். குழலெடுத்து பண்ணிசை என்றான் உதட்டோரம் ஈரம் கசிய இசைத்தாள். தாளக்கட்டுக்கு மாறாமல் பாதமெடுத்து ஆடு என்றான் அவன் நாடி நடுங்க, நெஞ்சு விம்ம ஆடித்தீர்த்தாள்.

நாள் மறந்தான், வாரம் மறந்தான், மாதம் மறந்தான், தந்தையை மறந்தான், கரம் பிடித்த கண்ணகியை மறந்தான். ஏன் தன்னையே மறந்தான். கணிகையர் வீதியே கோவிலென, கட்டுடல் மாதவியே தெய்வமென சிறைபட்டான் கோவலன். வெளிக்காற்று படாமல் வளர்க்கப்பட்ட மகள் கண்ணகி, தனிமனையில் தனிமைப்பட்டு நிற்கிறாள் என்பதை அறிந்த மாநாய்கன் மனம் வெதும்பினான். கனகமகளால் அடைந்த கவலை வணிகத்தில் நிலைகுலைவை ஏற்படுத்தியது. வீதிக்கு செல்வதை வெறுத்த மாநாய்கன், இருகை கூப்பியவனாய் மாசாத்துவனை அணுகினான். தோதகத்தி மரத்தில் செய்த சாய்நாற்காலியில் கால்நீட்டி அமர்ந்திருந்த மாசாத்துவன் முன்பு, தொய்ந்த தோளோடு வந்து நின்றார் மாநாய்கன்.

'எப்படி இருக்கிறீர் மாசாத்துவரே?'

'ஆ, இருக்கிறேன் மாநாய்கரே, நலத்திற்கு குறைவில்லை'

"ஆனால், என் மகள் நலமில்லை. கோவலன் இல்லம் திரும்பவில்லை என்று அறிந்தேன்"

'நானும் கேள்விபட்டேன், இளமையின் முறுக்கு அப்படித்தான் இருக்கும். போக போக சரியாகிவிடும், கவலை கொள்ளாதீர்கள்'

இந்த வார்த்தையை கேட்ட மாநாய்கன் பொன்சரிகை துண்டை வாயில் பொத்தி குலுங்கினான். தன்முன்னால் குமுறி அழும் மாநாய்கனின் உருவத்தை இரண்டு கண்களிலும் நிரப்பிக் கொண்டான் மாசாத்துவன். இந்த நொடிக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் என்று எண்ணத்தோடு பெருமூச்சு ஒன்றை விடுத்தான்.

"நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் தொழில் இருக்கிறது. அதற்கான ஒரே வழிமரபு கோவலன் தான் என்ற எண்ணம் தான் எனக்கு சற்று ஆறுதலை தருகிறது மாசாத்துவரே. இன்று கணிகையர் வீதியில் கிடந்தாலும், நாளை நீங்கள் தொழிலில் கைகொடுத்து தூக்கி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த துக்க நாட்களை கடத்துகிறேன்" என்று ஆசுவாசத்துடன் கூறினார்.

இறுமாந்து கிடந்த மாசாத்துவனின் நெஞ்சு, மாநாய்கனின் இந்த வார்த்தைகளை கேட்டு துணுக்குற்றது.

"என்னது, நான் இருக்கிறேன், என்னுடைய சொத்துக்கள் கோவலனுக்கு கிடைக்கும் என்ற எண்ணம், உனக்கு நிம்மதியை தருகிறதா? அப்படியானால் இன்னும் நீ முழுமையாக தாழவில்லையா என்முன்னால்?" என்று மனதிற்குள் கறுவினான் மாசாத்துவன்.

"சீக்கிரம் இந்த சிக்கலுக்கு தீர்வு காணுங்கள் மாசாத்துவரே, கண்ணின் மணியென வளர்த்த கண்ணகியின் ஓய்வறியா கண்ணீருக்கு விடைதாருங்கள்" என்று கூறிவிட்டு நீர்கூட அருந்தாமல் விடைபெற்றார் மாநாய்கன்.

மாநாய்கன் உதிர்த்த வார்த்தைகள் மனதிற்குள் வண்டாய் குடைந்தது. "என்ன செய்வது? என்ன செய்வது?" என்று வாய்விட்டு அரற்றியபடியே சுண்ணாம்பு மிகுவது கூட தெரியாமல் தாம்பூலம் தரித்தார்.

ஒருகணம் இந்த ஆற்றாமையும், கோவமும் எதற்கு என்ற எண்ணம் வந்தது. மறுகணம் அதனால் கிடைத்த இனம்புரியா உவகை உள்ளத்தை நிறைத்தது. இரண்டு எண்ணங்களுக்கு இடையே சிக்கிய பாக்காய் தலையை பிடித்தபடி அமர்ந்து கொண்டார் மாசாத்துவன்.

ந்தையின் உளச்சிக்கல்கள் ஏதும் அறியாமல் எல்லையில்லா இன்பப்பெருவெளியில் திளைத்துக் கொண்டிருந்தான் கோவலன். இந்திர விழாவையொட்டி புகாரின் கடற்கரையில் மாதவியோடு எது அலை. எது அவள் என்று பிரித்தறியா வண்ணம் இரண்டற கலந்து இன்பம் துய்த்தான் கோவலன். கணிகையர் குலம் என்பதை மறந்து கணவன் இவன்தான் என கோவலனை மனதில் வரித்த மாதவி, வேறுயாரையும் சிந்தையிலும் தொடாமல் வசியப்பட்டு நின்றாள். எது அளவு கடக்கிறதோ, அதுவே ஆபத்து. இது காதலுக்கும் பொருந்தும். கடற்கரை விளையாட்டின் மிகுதியில் மாதவியை சீண்டியும் வர்ணித்தும் கோவலன் பாட, பதிலுக்கு மாதவி பாடிய பாடலில் தவறான பொருள் கற்பித்துக் கொண்டான் கோவலன். பரத்தையர் குடும்பத்தை சேர்ந்தவள்தானே என்ற சிந்தனை ஒருநொடி வந்து சென்றது. உடனே கையுதறி, கடற்கரை மண்ணுதறி, காதலின் சிந்தனையுதறி மாதவியை பிரிந்து வீடுநோக்கி திரும்பினான்.

மாநாய்கன் வந்து சென்றது குறித்து நிலையில்லா சிந்தனையில் உழன்று கொண்டிருந்த மாசாத்துவன் முன்பு மார்பு முழுவதும் சந்தனமும், தோளில் மாலையுமாய் கலங்கிய கண்களுடன் வந்து நின்றான் கோவலன்.

"என்ன கோவலா? என்ன ஆயிற்று" என்று வினவினார்.

"மாதவியை பிரிந்து விட்டேன். புதுமனை புகலாம் என எண்ணுகிறேன். வணிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன்" என்று விடையிறுத்தான்.

இருக்கின்ற ஒட்டுமொத்த சொத்தையும் கோவலனிடம் வழங்கிவிட்டு நிம்மதியாக இருந்துவிடலாம் என்ற எண்ணம் ஒருநொடி மேலெழுந்தது.

ஆனால் மறுகணம் "எனக்கு இன்னும் வாழ்வில் நம்பிக்கை இருக்கிறது" என்ற மாநாய்கனின் வார்த்தை செவிக்குள் முள்கம்பியாய் குத்தியது.

கோவலனுக்கு செல்வத்தை வழங்கினால், இருண்டு கிடக்கும் மாநாய்கனின் முகம் மீண்டும் மலர்ந்து விடும் என்ற சிந்தனையே மாசாத்துவனை தொய்வடையச் செய்தது.

இப்போதைக்கு கோவலனிடம் பொய் கோபம் காட்டி வீட்டை விட்டு வெளியேற்றுவோம். மாநாய்கன் சித்தம் கலங்கி என்னிடம் ஓடிவந்து அடைக்கலம் புகும்போது கோவலனை அழைத்துக் கொள்வோம் என்று மனதிற்குள் திட்டம் தீட்டினான் மாசாத்துவன்.

உடனே முகத்தில் கடுமை கூட்டிக்கொண்டு, "எதற்கு உனக்கு செல்வம் தரவேண்டும் கோவலா? மீண்டும் பரத்தையர் வீதியில் படுத்து மகிழவா? ஒட்டுமொத்த சொத்தும் உனக்குத் தான் என்ற எண்ணத்தில் தானே இப்படியெல்லாம் பிடிப்பின்று நாள்கடத்துகின்றாய், கடைசி சொத்தின் துளிப்பொன் கூட உனக்கு தரப்போவதில்லை" என்று கோவத்துடன் கூறிவிட்டு மாளிகைக்குள் சென்று மறைந்தார்.

மின்னல் தாக்கியது போன்ற சொற்களால் நிலைகுலைந்து போனான் கோவலன். தந்தை சொல்வதிலும் உண்மை உள்ளதே, இதுநாள்வரை நான் என்ன செய்து விட்டேன். என்னை நம்பி சொத்துக்களை தருவதற்கு என்று எண்ணியபடியே கண்ணகியைத் தேடிப் போனான். கோவலன் பிரிந்த நாள் முதலாய் இருளடைந்த முகமும், தோளெலும்பு தெரியும் உடலுமாய் மாறியிருந்தாள் கண்ணகி.

"இனி புகார் நகரில் நான் பிழைக்க முடியாது. தந்தை செழிப்புடன் வாழும் ஊரில் நான் கையேந்தி நிற்க முடியாது யாரிடமும். மதுரைக்கு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன், கிளம்பு" என்றான். இருவரும் புகார் நீங்கினர்.

கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு புறப்பட்டதை அறிந்து மாசாத்துவரை ஓடோடி வந்து சந்தித்தார் மாநாய்கர்.

"நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தானே இத்தனை நாட்கள் பொறுத்திருந்தேன். நீங்களும் கைவிட்டு விட்டீர்களே" என்று கலங்கினார்.

"என் மகள் கொடும்பாலையை எப்படி கடப்பாள். மதுரை மாநகரில் எப்படி பிழைப்பாள்" என்று வாய்விட்டு அழுதார்.

மாநாய்கனின் நிலைகண்டு, மார்கழியின் காவிரி போல் குளிர்ந்தது மாசாத்துவனின் நெஞ்சம்.

இதுபோதும், இனி ஆயுளுக்கும் இந்த நொடிகளை நினைவுர்ந்தே வாழ்ந்துவிடலாம் என்று நெஞ்சுநிறைந்தான் மாசாத்துவன்.

மூக்கை உறிஞ்சியபடி, "எல்லாவற்றையும் இழந்து நின்றாலும் எங்கள் குலச்சொத்தான காற்சிலம்பு அவர்களை கரையேற்றும்" என்றார் மாநாய்கர்.

"வாழ்வின் இன்னல் நேரும் கடைசி நொடியில் இந்த காற்சிலம்புகளை நினைவில் கொள் என்று என்மகளிடம் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளேன்" என்று கூறியபடியே சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார் மாநாய்கர்.

ஆ... வென்று கத்தியபடியே பற்களை கடித்தபடி எழுந்த மாசாத்துவன் அருகில் நின்ற தூணை பலங்கொண்ட மட்டும் ஓங்கி குத்தினார். "அவனுடைய நிம்மதியை பறிக்கலாம் என்று எண்ணுந்தோறும் என்னுடைய நிம்மதி சென்று கொண்டே இருக்கிறதே, அவன் மீண்டும், மீண்டும், நம்பிக்கை சொற்களை உதிர்த்தபடியே இருக்கிறானே, ஐயோ" என்று அரற்றினான்.

ஏவலாளை அழைத்தான் மாசாத்துவன். "மதுரை மாநகருக்கு விரைந்து செல். அங்கு என் நண்பர் வஞ்சிப்பத்தன் உள்ளார். ஆயிரம் பொற்கொல்லர்களுக்கு அதிபதி. அவருக்குத் தெரியாமல் மதுரையில் யாரும் ஆபரணங்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. அவரிடம் சென்று விற்பனைக்கு என்று யாராவது சிலம்பை கொண்டு வந்தால், அதற்கு சிக்கல் ஏற்படுத்தி விடுங்கள் என்று நான் கூறியதாக கூறு" என்றான்.

நெஞ்சு தடதடக்க ஒருவேகத்தில் முடிவெடுத்து சொல்லியும் விட்டான். மாசாத்துவனின் ஆணைக்கு கீழ்பட்டு குதிரையை எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி புறப்பட்டான் ஏவலாளி.

தான் செய்தது சரியா. இதனால் விளையப்போவது என்ன என்பது தெரியாமல் மனம்கலங்கி குழம்பி நின்றான் மாசாத்துவன்.

மாசாத்துவனின் தூது கிடைத்தது வஞ்சிப்பத்தனுக்கு. அதேநேரத்தில் கண்ணகியின் காற்சிலம்பை விற்று அதன்மூலம் மதுரை மாநகரில் புதுவாழ்வு தொடங்கலாம் என்று வஞ்சிப்பத்தனிடம் வந்து நின்றான் கோவலன். காற்சிலம்பை கையில் ஏந்தி வந்து நின்றவனை ஏற இறங்க பார்த்தான் வஞ்சிப்பத்தன்.

நண்பன் மாசாத்துவனின் குறிப்பு நினைவுக்கு வந்தது. இதேவேளையில் பாண்டிய தேசத்தின் ராணியின் சிலம்பு களவு போனதும் நினைவுக்கு வந்துபோனது. எப்படியாவது சிக்கல் ஏற்படுத்தி விடுங்கள் என்ற மாசாத்துவனின் வேண்டுகோளை இவ்வாறு தான் தீர்த்து வைக்க முடியும் என்று முடிவுக்கு வந்தவனாய் அரண்மனைக்கு தகவல் கொடுத்தான் வஞ்சிப்பத்தன். களவுபோன காற்சிலம்பு கிடைத்து விட்டதாகவும், களவாளியை தான் பிடித்து விட்டதாகவும் கூறி பாண்டிய மன்னனை காணச் சென்றான்.

மதுரை மாநகரில் இது நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில், நிலை கொள்ளாது தவித்த மாசாத்துவன் மனம் வெதும்பி நடைபயின்றான். சிலம்பால் கோவலனுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடுமோ, மாநாய்கனை வீழ்த்தப் போய் தன் குலக்கொடிக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினான். அந்த எண்ணம் அவனை பாடாய்படுத்த இனி ஒரு போதும் தாமதிக்க முடியாது என்று எண்ணி ரதமேறி தானே மதுரைக்கு புறப்பட்டான்.

அதற்குள் மதுரையில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. கோவலன் படுகொலை செய்யப்பட்டான். கோபமுற்ற கண்ணகி பாண்டிய அவையில் காற்சிலம்பை உடைத்து தன்னுடையவை மாணிக்கங்கள் என்று நிரூபித்தாள். மனம் நொந்த பாண்டியன் உயிரிழக்க, பாண்டிமாதேவியும் உயிர்நீத்தாள். சினமடங்கா கண்ணகி மதுரைக்கு தீ வைக்க ஓங்கி உயர்ந்தது நெருப்பு.

புழுதி பறக்க, நெஞ்சு தடதடக்க வந்து சேர்ந்தான் மாசாத்துவன். நடந்தவற்றை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டான். அவன் நெஞ்சில் எரிந்த பொறாமைத் தீ, ஏதோ ஒரு வடிவில் மதுரையை கொழுந்து விட்டு எரியச் செய்தது. மாநாய்கனின் கடைசி சொத்தான காற்சிலம்பு, தன்னுடைய கடைசி சொத்தான கோவலனை கொண்டு போய் விட்டதை உணர்ந்தான். எஞ்சிய ஆயுள் முழுக்க எரிந்து கொண்டே இருந்தான் மாசாத்துவன்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment