தென்காசி பக்கத்துல ஆலங்குளத்துல பொறந்துட்டு பொழப்புக்காக மெட்ராஸ் வந்த பலகோடி பேர்ல ஆறுமுகமும் ஒருத்தர். சின்ன வயசுல திடகாத்திரமா இருந்தப்போ மிண்ட் தெருவில் அவர் பார்க்காத வேலையில்ல. நல்ல ஆறடி உயரத்திற்கு கருகருனு இருந்ததால லோடுமேன் வேலைக்கு ஆறுமுகத்தை தான் கூப்பிடுவாங்க. கூலியை சேமிப்பாக்கி கந்தக்கோட்டம் கோயில் வாசல்ல கொஞ்சநாள் பழக்கடை ஒன்றை வைத்துப் பார்த்தார். அப்புறம் தம்புச்செட்டி தெருவில் ஒரு பாத்திரக்கடை வைத்து பார்த்தார். என்னமோ அவர் உழைக்கத் தயாரா இருந்தாலும், கையில் காசு மட்டும் நிற்கவேயில்லை. இதனாலேயே மனைவி வடிவுக்கரசியிடம் எப்போதும் வாங்கிக் கட்டிக்கொண்டே இருப்பார்.
ஆறுமுகத்தின் அவ்ளோ பெரிய உருவத்தின் அருகில் பொடிதாக தெரிவார் வடிவுக்கரசி. ஒடிசலான தேகம். தெத்துப் பல் வேறு. பேசினால் மூக்கில் இருந்து தான் குரல் ஒலிக்கும். ஆனாலும் வடிவு என்றால் ஆறுமுகத்திற்கு கொஞ்சம் பயம்தான். "என்னத்த வேல பாக்குற, அவனவன் என்னன்னமோ பண்ணி எப்பிடி எப்பிடியோ ஆய்ட்டான், உப்புக்கு துப்பில்ல ஊறுகாய்க்கு பதம் இல்லனு ஒரு பொழப்பு" என்று நீட்டி முழக்கி வடிவு பேச ஆரம்பித்தால் ஆறுமுகத்தின் எல்லா நாடிநரம்பும் ஒடுங்கி விடும். குத்த வைத்து கன்னத்தில் கைவைத்து அமைதியாகி விடுவார்.
இவ்வளவு குத்தல் பேச்சு பேசினாலும் காசு சேர்ப்பதில் வடிவை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி சிறுக சிறுக சேர்த்த பணத்தில் மணலியில் இரண்டு கிரவுண்டு இடம் வாங்கிப் போட்டாள். அவளே முன்னின்று ஓட்டு வீடு ஒன்றை பார்த்து பார்த்து கட்டினாள். வீடு முழுக்க கொய்யா, தென்னை, மாமரம், கத்திரிக்காய், கறிவேப்பிலைச்செடி என்று பார்த்து பார்த்து நட்டு வைத்தாள். "ஆத்திரம் அவசரத்துக்கு யார்கிட்டயும் போய் கைநீட்டி நிக்க வேண்டாம், கீரையை கிள்ளினோமா, கத்திரிக்காய வதக்கினோமா, கஞ்சி குடிச்சிட்டு கவுரமா வாழலாம்.. இதுங்களா கொடுத்துட்டு எப்போ திருப்பி தருவேனு வந்து நிக்காதுங்க" என்று வேலியில் படர விட்டிருந்த பாகற்கொடியின் பக்கத்தில் நின்று கொண்டு படபடவென்று பொரிந்து தள்ளுவாள் வடிவு.
மணலிக்கு வந்தபிறகு திரும்பிய திசையெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகளாக இருந்தது. படிப்பில்லாத ஆறுமுகத்திற்கு அங்கெல்லாம் எந்த வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான் பழைய பாத்திரங்களை, பழைய பேப்பர்களை வாங்கி விற்க தொடங்கினார் ஆறுமுகம். சௌகார்பேட்டைக்கு போய் மொத்தமாக பேரிச்சம் பழம், அவல், எள்ளுருண்டை, சோன் பப்டி ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்வார். அவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து சேக்காடு, எடைபாளையம், எலந்தசேரி, பழவரம், குதிரைக்குட்டை என்று தன்னால் முடிந்த அளவு மணலியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாபாரம் செய்ய துவங்கினார்.
டெல்லிபாபு பிறந்தது கூட அவர்கள் மணலிக்கு குடியேறிய பிறகுதான். அந்த சமயத்தில் வீட்டின் வாசலிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தத் துவங்கினாள் வடிவு. பீடி, சிகரெட், தேன்மிட்டாய், இஞ்சி மொரப்பான், பிஸ்கெட் பிறகு வெங்காயம் தக்காளி என்று அதனையும் சேர்த்துக் கொண்டாள். கடையில் அமர்ந்து கொண்டு வியாபாரத்தை பார்க்கவா என்று ஒருநாள் மெதுவாக கேட்டார் ஆறுமுகம். "வீட்டுக்கு ரெண்டு சம்பாத்யம் இருந்தா நல்லா இருக்கும்னுதானே நானே வந்து கடையில ஒக்கார்றேன். அது புரியல உனக்கு, ஓடியாடி வேலை செய்ற வயசுல, புட்டத்தை தேச்சிக்கிட்டு ஒக்காந்துகிட்டு என்ன பண்ண போற, அவல் வித்தா அசிங்கமா இருக்கோ" என்று கொட்டித் தீர்த்தாள். மறுபேச்சு இல்லாமல் சைக்கிளை தள்ளிக் கொண்டு புறப்பட்டார் ஆறுமுகம்.
ஏனோ வடிவுக்கு யாரிடமும் அமைதியாக பேசி பழக்கமில்லை. விருந்து வீட்டுக்கு போனாலும் ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட்டு விட்டு உப்பு கொஞ்சம் கூட இருந்து இருக்கலாம் என்பாள். பாயாசம் கொடுத்தால் சர்க்கரை விக்குற விலைக்கு இப்படியா அள்ளி கொட்டுவாங்க என்று அதற்கும் ஒரு அங்கலாய்ப்பு காட்டுவாள். நயா பைசா என்றால் கூட கணக்கு தான். அதனாலேயே வடிவு சீட்டு பிடித்தால் அவளிடம் போடுவதற்கு எல்லோரும் பயப்படுவார்கள். ஏலம் முடிந்தவுடன் எண்ணி பணத்தை வைத்து விட வேண்டும். அதேவேளை ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு அந்த இடத்திலேயே பணத்தை பைசல் செய்து விடுவாள் வடிவு. இவ்வளவு கறார் காட்டுவதால் வடிவிடம் சீட்டு போடுவதற்கு யோசிக்கவும் செய்வார்கள், சொன்னால் சொன்னபடி பணத்தை தருவதால் அவளிடமே சீட்டு போடவும் முன்வந்தார்கள்.
டெல்லிபாபு வளர, வளர அவன் படிப்புக்கு ஆகும் செலவை தனியே நோட்டில் எழுதி வைத்து வந்தாள் வடிவு. ஒருநாள் அந்த நோட்டை எடுத்துப் பார்த்த ஆறுமுகம் கோபத்தோடு வடிவை நோக்கி வந்தார்.
"என்ன புள்ளைக்கு பால் வாங்குன கணக்குல இருந்து ஸ்கூல் பீஸ் கட்டியது வரைக்கும் இருக்கு" என்று கேட்டார்.
"ஏன் பால்காரன் சும்மாவா பால் ஊத்துனான். ஸ்கூல்ல இனாமாவா சேத்துக்கிட்டாங்க எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்குல்ல. நாளபின்ன எனக்கு என்னா செஞ்சீங்கன்னு வந்து நின்னா நோட்ட எடுத்து மூஞ்சில எடுத்து விசிறி எறிய மாட்டேன்" என்றாள்.
"அவன் நம்ம புள்ள அவனுக்கு செலவு பண்ணதுக்கா நாம கணக்கு பாக்கணும்" என்று கவலையோடு கேட்டார்.
"தாயா புள்ளையா இருந்தாலும், வாயும் வயிறும் வேறதான். எல்லாத்துக்கும் கணக்கு பாத்துதான் ஆகணும்" என்றாள். சொன்னதோடு நில்லாமல், ஸ்டூல் எடுத்து போட்டு அதன்மீது ஏறி பரணில் இருந்த பழைய வயர்கூடை ஒன்றை எடுத்தாள். அதில் பழுப்பேறி போய் இருந்த மூன்று நோட்டுக்களை எடுத்து ஆறுமுகத்திடம் கொடுத்து "பிரிச்சுப் பாரு" என்றாள். அதில் கல்யாணம் ஆன தேதியில் இருந்து மணலியில் வீடு கட்டி வந்தது வரை தேதிவாரியாக பணம் எழுதப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ந்து போனார் ஆறுமுகம்.
"இந்த நிலமும், வூடும் பறந்து வந்து உன் கையில வுழுந்துச்சுன்னு நெனக்கிறியா? காசு, அவ்வளவும் காசு. நீ உழைச்சது தான். ஆனா எவ்ளோ உழைச்ச, எவ்ளோ சேத்தனு உனக்கு தெரியுமா? எனக்கு தெரியும். என் மனசுல இன்னும் எழுதாம நெறய கணக்கு இருக்கு, அதையெல்லாம் எழுதுனா நல்லா இருக்காதுனு எழுதாம இருக்கேன். நீ இதுவரை எவ்ளோ சாப்பிட்ட, அதுக்கு எவ்ளோ ஆகியிருக்கும்னு என் மனசுக்குள்ள ஒரு கணக்கு இருக்கு தெரியுமா? சம்பாரிச்சதுல முக்காவாசி நீ துண்ணே தீத்துருக்க, மிச்ச சொச்சத்த புடிச்சு வச்சித்தான், இந்த சொத்த நான் காபந்து பண்ணி இருக்கேன், புரிஞ்சிக்கோ, பொண்டாட்டியா அதையெல்லாம் எழுதக் கூடாதுனு எழுதாம இருக்கேன்" என்றாள்.
அதற்கு பிறகு ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வடிவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பார், தட்டை ஒருமுறை பார்ப்பார். சிலசமயம் சாப்பிடுவார், பலசமயம் எழுந்து போய் விடுவார். "உனக்கு பசிச்சா நீ சாப்பிடு, சின்ன புள்ள இல்ல ஊட்டிவிட, வெளிய போய் ஓட்டல்ல தின்னாலும் காசு கொடுத்து தான் ஆகணும்" என்று சொல்லிவிட்டு தட்டை எடுத்து சாப்பாடு போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பிப்பாள். சாப்பிடும் போது வடிவின் தட்டு அருகே சின்ன டம்ளர் ஒன்றில் தண்ணீர் இருக்கும். இடது கையில் சிறிய ஊசி இருக்கும். தட்டில் இருந்து சிந்தும் உணவுப் பருக்கைகளை கையில் உள்ள ஊசியால் குத்தி, டம்ளரில் அலசி அதனை வலது கையால் உருவி சாப்பிடுவாள்.
டெல்லிபாபு பலமுறை தலையில் அடித்துக் கொள்வான், "என்னம்மா இவ்ளோ கேவலமா சாப்பிட்ற, கீழே விழுறத போய் எடுத்து சாப்பிட்ற, ரொம்ப மட்டமா பண்றம்மா" என்று கோவப்படுவான்.
"நீ சம்பாரிச்சு கொண்டு வந்தாலும் இப்படி கீழ விழுறத எடுத்து தான் சாப்பிடுவேன். ஏன்னா அது உழைப்பு, சம்பாத்யம், லட்சுமி, புரியுதா? புரியலனா எழுந்து போ, வாங்கி கட்டிக்காத" என்பாள்.
அதனாலேயே அம்மாவிடம் ஒட்டாமல் மெல்ல மெல்ல அப்பா பக்கம் திரும்பினான் டெல்லிபாபு.
படித்து முடித்ததும் தண்டையார்பேட்டையில் உள்ள டேப்லட் இண்டியா கம்பெனியில் வேலை கிடைத்தது. டெல்லிபாபு முதல்மாத சம்பளம் வாங்கி வந்த அன்று வாசலில் வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார் ஆறுமுகம். வடிவு கையில் சில புகைப்படங்களை வைத்து ஒன்று மாற்றி ஒன்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அப்பா, அப்பா" என்று ஆறுமுகத்தின் காலில் டெல்லிபாபு தட்ட, ஹாஹ்ஹா என்று கண்விழித்து எழுந்து "சொல்லுப்பா, என்ன விஷயம்" என்றார். கையில் வைத்திருந்த டேப்லட் இண்டியா என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த ஆரஞ்சு நிற கவரை அப்பாவின் கையில் கொடுத்தான் டெல்லிபாபு. "என்னோட முதல் மாத சம்பளம்பா" என்றான். "என்னப்பா என்கிட்ட கொடுக்குற, அம்மாகிட்ட கொடு, அவதானே வீட்ட பார்த்துக்குறா? எனக்கு என்ன தெரியும்?" என்று கவரை கையில் வாங்க யோசித்தார். அதுவரை புகைப்படங்களை பார்த்து வந்த வடிவு நிமிர்ந்து மகனை பார்த்தாள். அம்மாவை பார்க்க தயங்கி தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். "வேலைக்கு போறப்போ பஸ்சுக்கு என்கிட்ட காசு வேணும், ஆனா சம்பளத்த மட்டும் அப்பன்கிட்ட கொடுப்பியோ?" என்றாள். "உன் பணம் ஒண்ணும் எனக்கு வேணாம், ஆனா அதை என்ன பண்ணுவேன்னு என்கிட்ட சொல்லு பார்ப்போம்" என்றாள்.
கோபத்துடன் திரும்பி அம்மாவை பார்த்த டெல்லிபாபு, "மொத மாசம் சம்பளம் என்பதால அப்பாவுக்கு புது வேஷ்டி சட்டை வாங்கி கொடுப்பேன். உனக்கு ஒரு புடவை வாங்கி கொடுப்பேன். எனக்கு ரெண்டு புது பேண்டும் செருப்பும் வாங்குவேன். பழைய வாட்ச் அறுந்து போச்சு, புதுசா வாங்குவேன். வீண் செலவு ஒண்ணும் பண்ண மாட்டேன். எனக்கும் கணக்கு வழக்கு தெரியும்" என்று படபடவென்று கத்தினான்.
அமைதியாக எழுந்து நின்ற வடிவு, "உங்க அப்பாக்கிட்ட 7 வேஷ்டி, 9 சட்டை, 2 லுங்கி, 5 துண்டு, 4 நிஜார், 2 ஜோடி செருப்பு, கல்யாணத்துக்கு எடுத்த பட்டு வேஷ்டி கூட இன்னும் அப்படியே தான் இருக்கு. என்கிட்ட 12 புடவை, 6 ஜாக்கெட், 3 பாவாடை இருக்கு. உன்கிட்ட என்ன இருக்குணு உனக்கு தெரியுமோ, தெரியாதோ எனக்கு தெரியும். இப்பிடி இருக்குற பொருளையே இன்னொன்னு வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு வீண்செலவு பண்ண மாட்டேன்னு சொல்ற. இதா உன்னோட படிச்ச கணக்கு வழக்கா?" என்று கேட்டாள்.
இதைக்கேட்டு அரண்டு போனான் டெல்லிபாபு. சத்தியமாக அதுவரை தன்னிடம் எத்தனை சட்டை, பேண்ட்டு இருக்கிறது என்று அவனுக்கு தெரியாது. முதல்வேலையாக வீட்டுக்குள் சென்று மரபீரோவில் இருந்த தன்னுடைய ஆடைகளை எடுத்து எண்ணத் துவங்கினான். அதற்கு பிறகு ஒருநாளும் அம்மாவிடம் சம்பள கவரை கொடுக்கத் தவறியதில்லை டெல்லிபாபு.
இந்த சமயத்தில் தான், தூரத்து உறவான சண்முகம் அண்ணாச்சியின் மகள் தெய்வானையை டெல்லிபாபுக்கு பார்த்து கட்டி வைக்க முடிவு செய்தாள் வடிவு. சமையல் மாஸ்டர் வெள்ளையப்பன் கொடுத்த மளிகை பட்டியலை தலைமுதல் கால்வரை படித்த வடிவு, தன் இடுப்பில் சொருகி இருந்த வேறொரு பட்டியலை மாஸ்டரிம் கொடுத்தாள். "இத்தனை பேருக்கு தான் கல்யாண பத்திரிகை கொடுத்து இருக்கு, இத்தனை பேர் தான் வருவாங்க, இத்தனை பேருக்கு சமைக்க இவ்ளோ பொருட்கள் போதும், இதுல பாதி எங்க வீட்ல இருந்து நானே எடுத்துட்டு வந்துடுவேன், மீதிய மட்டும் வாங்குனா போதும்" என்றாள். மண்டபத்தின் வாசலில் கட்டுவதற்கு வீட்டில் இருந்தே இரண்டு வாழை மரங்களை வெட்டி வந்தாள். தன் கையாலே தைத்த தைஇலையை சாப்பிடுவதற்கு பரிமாறி புரட்சி செய்தாள். கிட்டத்தட்ட ஒருமாதகாலம் இரவெல்லாம் தைஇலை எதற்கு தைக்கிறாள் என்று யோசித்த ஆறுமுகத்திற்கு கல்யாண தினத்தன்று தான் விடைகிடைத்தது.
கல்யாண பந்தியிலேயே தெய்வானைக்கு தெரிந்து விட்டது, தான் எப்படிப்பட்ட வீட்டில் வாழப்போகிறோம் என்று. டெல்லிபாபுவிடம் குறை என்று எதுவும் சொல்ல முடியவில்லை தான், அவனும் தன் அம்மாவின் மேல் கோவமாக உள்ளவன் தான். ஆனாலும் வடிவுக்கரசியின் பேச்சை மீறி அவனாலும் எதுவும் செய்யமுடியவில்லை. தெய்வானையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கல்யாணத்திற்காக ஓட்டுவீட்டை தளம் போட்டு மாற்றிக் கட்டியிருந்தாள் வடிவு. ஆனாலும் டெல்லிபாபுக்கும், தெய்வானைக்கும் தனியாக அறை என்று ஒன்று இல்லை. இரவானால் ஆறுமுகமும், வடிவும் வெளியில் படுத்துக் கொள்வார்கள். கூடுதலாக ஒரு அறை கட்டினால் நன்றாக இருக்கும் என்று ஒருநாள் மாமியாரிடம் தெய்வானை கேட்க, "அதற்கென்ன தாரளமாக கட்டிக்கொள், யார் வேண்டாம் என்றார்கள்" என்று கூறிவிட்டாள். அதனையே வீம்பாக எடுத்துக் கொண்ட தெய்வானை, மாமியாரிடமே லட்ச ரூபாய்க்கு ஏலச்சீட்டு போட்டாள். மருமகள் என்றும் பார்த்ததில்லை, மகன் என்றும் பார்த்ததில்லை வடிவு, ஏல தினத்தன்று காசை எண்ணி வைத்துவிட வேண்டும் அவளுக்கு.
ஒருமுறை ரஜினியின் புதுப்படத்திற்கு போகவேண்டும் என்று தெய்வானை ஆசைப்பட மவுண்ட் ரோடில் உள்ள தேவி தியேட்டரில் இரவுக்காட்சிக்கு இரண்டு டிக்கெட் எடுத்து வந்தான் டெல்லிபாபு. வேலைக்கு அரைநாள் லீவு சொல்லிவிட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்து, "என்ன சீக்கிரம், என்ன விஷயம்" என்றாள் வடிவு. "சினிமாவுக்கு போகப் போறோம்மா, அதா லீவுப் போட்டேன்" என்றான். "வீட்டுக்கு எதிரிலேயே மீனாட்சி தியேட்டர் இருக்கு, அதுக்கு எதுக்கு லீவு போடணும், வேலைக்கு போய்ட்டு சாவகாசமா வந்தாகூட படத்துக்கு போலாமே" என்றாள். "இங்க இல்லம்மா, நாங்க மவுண்ட் ரோடு போக போறோம்" என்றான். "அங்க வேற படம் ஏதாச்சும் ஓடுதா? மீனாட்சில ஓடுற படும் ஓடுதா?" என்று கேட்டாள் வடிவு. முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்ட டெல்லிபாபு, "இங்கயும் அந்தபடம் தான் ஓடுது, ஆனா என்னமோ ஆசைப்பட்டேன் அங்க போகணும்னு" என்றான். "எந்த தியேட்டர்க்கு போனாலும் இருட்டாக்கிட்டு ஒரே படத்த தான் காட்டப் போறான். அதுக்கு எதுக்கு அங்க போகணும., இங்கயே போகலாமே" என்று மீண்டும் கேட்டாள் வடிவு. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற டெல்லிபாபு, "நாங்க எங்கயும் போகல" என்று டிக்கெட்டை கிழித்து போட்டான். "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, டிக்கெட் பணம் வீணா போச்சா" என்று அலுத்துக் கொண்டே வெளியே நடந்தாள் வடிவு.
இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று தெய்வானை ஒற்றைக்காலில் நிற்க, தானும் மனம் வெறுத்துப் போன டெல்லிபாபு தனிக்குடித்தனம் பார்த்துக் கொண்டு கிளம்பினான். தண்டையார்பேட்டை அருகிலேயே குந்தாளம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கிருந்தே வேலைக்கு போய் வர ஆரம்பித்தான். ஒரேமகன் வீட்டை விட்டு வெளியேறியது கண்டு மனம் பதைத்து போனார் ஆறுமுகம். மனைவியிடம் பேசிப்பார்க்க, "நானா போகச் சொன்னேன். அவன் போனான் கொழுப்பெடுத்து, அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற" என்று சொல்லிவிட்டாள். ஆனால் அன்றிரவு விடிய விடிய அழுது கொண்டிருந்தாள் வடிவு. இரண்டுமுறை தூக்கம் கலைந்து பார்த்தபோது கூட, வடிவு தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது தெரிந்தது. பொழுது விடிந்ததும் ஆறுமுகத்தின் கையில் ஒரு துண்டு சீட்டை கொடுத்தாள் வடிவு. அதைப் பார்த்து அதிர்ந்து போன ஆறுமுகம், சைக்கிளை எடுத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க தண்டையார்பேட்டை வந்து சேர்ந்தார்.
மூச்சு வாங்க, வாங்க வந்து நின்ற அப்பாவை பார்த்ததும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை டெல்லிபாபுவுக்கு. தெய்வானை கூட பதறிப் போய் சொம்பு நிறைய தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து "குடிங்க மாமா" என்றாள். அதனை வாங்கி மடக், மடக்கென்று குடித்து ஏப்பம் விட்டு அமர்ந்தார். "என்னப்பா ஆச்சு, ஏதாச்சும் பிரச்னையா? அம்மாவுக்கு ஏதாவது ஆகிடுச்சா" என்று அடுக்கடுக்காக கேட்டான் டெல்லிபாபு. ஒன்றும் பேசாமல் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த துண்டு சீட்டை எடுத்து மகனிடம் கொடுத்தார் ஆறுமுகம். அதனை வாங்கிப் பார்த்தான் டெல்லிபாபு. அதில் இந்த மாச ஏலச்சீட்டு தள்ளுபோக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் என்று வடிவின் கையெழுத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.