Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : வருத்திச்சி

மீனவ பெண்களில் வருத்தச்சி என்று சிலர் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வருத்தச்சி யார்? கதையின் மூலம் சொல்கிறார், அரவிந்த்குமார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
varutheche - Sunday special story - aravinkumar

அரவிந்த்குமார்

Advertisment

நெஞ்சு திடுக்கென்றது. உடம்பு கொஞ்சம் தூக்கிவாரி போட்டது. முழிப்பும் வந்து விட்டது. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்த ராமாயி, எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து தலையில் கையை வைத்துக் கொண்டாள். தலை பாரமாக இருந்தது. அதிகாலை 2 மணி இருக்கும்.

ஏதோ ஒரு கெட்ட கனவு, வழக்கம் போலத் தான். யாரோ துரத்திக் கொண்டு வருகிறார்கள், மூச்சிரைக்க ஓடிக் கொண்டே இருக்கிறேன். ஏதோ உயரமான இடத்தில் இருந்து தூக்கி வீசுகிறார்கள். எவ்வளவு நேரம் என்பது தெரியாமல் கையை காலை உதறியபடி விழுந்து கொண்டே இருக்கிறேன். இதுதான் கொஞ்சநாளாகவே கனவாக வந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நாள் என்பது, கணவன் திலகர் ஜெயிலுக்கு போனதில் இருந்து இப்படித்தான்.

கண்களை கசக்கி பாயில் படுத்திருந்த மூன்று குழந்தைகளையும் பார்த்தாள். மூத்தவன் தமிழ்வாணன் 4-வது படிக்கிறான், அப்படியே அவன் அப்பாவை போல, உருவத்துலயும் சரி, வாயை கோணி கோணி பேசுவதிலும் சரி. சின்னவன் தமிழ்மணி வாயை பிளந்தபடி, வலதுகாலை அண்ணன் தொடை மீது தூக்கி போட்ட நிலையில் படுத்துக் கொண்டிருந்தான். மூணாவது பொண்ணுதான் பொறக்கணும்னு கடவுள வேண்டி பொறந்தவ தமிழ்மொழி, இன்னும் கூட விரல் சூப்பிக்கொண்டு திரிகிறது. இன்னும் கொஞ்ச மாசத்துல பள்ளிக்கூடத்துல சேர்க்கணும், இப்போ பால்வாடிக்கு போறா. தூக்கத்தில் கூட விரல் சூப்பிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது.

இப்படி மூணு புள்ளைங்கள ஒத்தையில பார்த்துக்க சொல்லிட்டு ஜெயிலுக்கு போய்விட்ட கணவன் திலகனின் முகம் கண்ணுக்குள் வந்து போனது. அவன் என்ன பண்ணுவான், செய்யாத தப்புக்கு, தண்டனை அனுபவிக்கிறான், இந்த கஷ்டம் என்னிக்கி ஓயுமோ, என்னிக்கு இந்த வீடு, வீடா தலையெடுக்குமோ என்ற யோசனை மீண்டும் தலைவலியை உண்டாக்க, தலையை உதறிக் கொண்டு, கொண்டையை முடிந்து கொண்டு எழுந்தாள் ராமாயி. அவளின் சத்தம் கேட்டு வாசலில் படுத்திருந்த மாமியார் கிஷ்ணம்மாவும் முழித்து, "எழுந்திட்டியா? டயம் என்னா?" என்றாள். "மணி ரெண்டாச்சு அத்தை, இப்போ போனா தான் சரியா இருக்கும்" என்றாள். "சரி, சரி, நான் புள்ளைங்கள பார்த்துக்கிறேன். நீ போய்ட்டு வா?" என்றபடி மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள் கிஷ்ணம்மா.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி திருவொற்றியர் தேரடி பக்கத்துல வீடு. தனி வீடாதான் பார்த்து வச்சி இருந்தான் திலகர். நல்ல சம்பாத்தியம் வேற. காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல போட் நல்லா ஓட்ற ட்ரைவர் யாருனு கேட்டா, எல்லாரும் திலகர்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு தொழில்ல ஒரு சுத்தம். பைபர் ஓட்டுனாலும் திலகர் தான் ட்ரைவர், லாஞ்சு போட் ஓட்டினாலும் திலகர் தான் ட்ரைவர். அந்த அளவுக்கு ஒரு போட்-க்கு எவ்ளோ டீசல் வேணும், எவ்ளோ ஐஸ் வேணும், எத்தனை பேர் வேலைக்கு வேணும், எந்த சீசன்ல, எந்த இடத்துல மீன்பாடு கிடைக்கும், இப்படி எல்லா விஷயத்தையும் நுனிவிரல்ல வச்சி இருப்பான். அதனாலேயே வருஷாவருஷம் திலகரை தங்களோட போட்-க்கு வேலைக்கு எடுக்க முதலாளிங்க மத்தியில அவ்ளோ கிராக்கியா இருக்கும். அவனுக்கும் வருஷாவருஷம் அட்வான்ஸ் பணம் ஏத்திக் கொடுத்துகிட்டே இருந்தாங்க. வாங்குற பணத்தை அவனும் எந்த தீஞ்செலவும் பண்ணாம, பொண்டாட்டி ராமாயி கிட்ட கொடுத்துடுவான். அப்படி வந்த பணத்துலதான் தேரடி பக்கத்துல அந்த வீட்டை ஒத்திக்கு எடுத்தது.

எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது. போன வருஷம் லாஞ்சு போட் எடுத்துக்கிட்டு 10 நாள் தங்கலுக்கு போனாங்க. திலகர், சந்துரு, வாசு, டைமண்ட், பாஸ்கர் அப்புறம் சேகர். காசிமேட்டில் ஆரம்பித்து வடக்காக ஆந்திராவின் கிருஷ்ணாம்பட்டிணத்தை தாண்டி நடுக்கடல் பக்கமா போனாங்க. போகும் போதே டைமண்ட் உடன் திலகருக்கு சண்டை. வழக்கம் போல, ரெண்டு மதுபாட்டில்களை டைமண்ட் மறைத்து கொண்டு வந்ததும், அதனை திலகர் பார்த்ததும் தான் சண்டைக்கு காரணம். இந்த சண்டை நடக்கும் போது 100 நாட்டிக்கல் மைல் (அதாவது 200 கிலோ மீட்டர் தொலைவு) தூரத்திற்கு கடலுக்குள் சென்று விட்டிருந்தனர். கரைவலையை பிரித்து விட்டுக் கொண்டே செல்லச் சொல்லி இருந்தான் திலகர். ஒரு கையில் மதுபாட்டிலும், மறுகையில் வலையை பிடித்துக் கொண்டே வந்த டைமண்ட் கடலுக்குள் தவறி விழ, வலைக்குள் சிக்கிக் கொண்ட அவனை, உயிரற்ற சடலமாகத் தான் தூக்க முடிந்தது.

கடலுக்குள் தொழிலுக்கு செல்கிறவர்கள் யாராவது உயிரிழந்தால், அந்த போட்-டின் ட்ரைவர் தான் அதற்கு முழுபொறுப்பு. கொலைவழக்காகத் தான் அது பதிவு செய்யப்படும். உண்மை என்னவென்று உடன் இருந்தவர்கள் சொன்னாலும், சட்டத்தின் பார்வையில் அது சீராக சிலபல வருஷங்கள் ஆகிவிடும். அப்படி திலகர் சிறைசென்ற பிறகு, முதல் சில மாதங்கள் இருக்கிற பணத்தை வச்சி குடும்பத்த சரிபண்ணி பார்த்தா ராமாயி. ஆனால் ஒத்தி முடிந்த காரணத்தால் தேரடி வீட்டை காலி பண்ண வேண்டியதாகி விட்டது. அதுக்குப்பிறகு காசிகுப்பத்துக்கு வந்துட்டா. வயிறுனு ஒண்ணு இருக்கே, அதுக்கு ஏதாச்சும் பண்ணணுமே, அப்போதான் வருத்திச்சியாக போக முடிவெடுத்தாள்.

ஆம்பளைக்கு பாடு கடல்ல, பொம்பளைக்கு பாடு கரையில... விடிய, விடிய நடுக்கடல்ல வலை மேல கண்ணு வெச்சிக்கிட்டு காத்திட்டிருக்க ஆம்பளைங்க கொஞ்சம் கண்ணயற வேண்டாமா? அதா கரைக்கு வந்ததும், அவங்க மீன வருத்திச்சி கிட்ட கொடுத்திடுவாங்க. அடுத்து தொழிலுக்கு போவதற்காக வலைகளை காய வைப்பதும், அறுந்த பகுதிகளை தைப்பதும் என்று அவர்கள் அதில் இறங்க, பிடித்து வந்த மீன்களை பக்குவமா வெலை பேசி வித்து தர்றது தான் வருத்திச்சிங்க வேலை. இது ஒண்ணும் அவ்ளோ லேசுபட்ட வேலையில்லை. டீசல் போட்டு, ஐஸ் வாங்கி, கூலி கொடுத்து ஒருமுறை தொழிலுக்கு போறதா இருந்தா ஆயிரக்கணக்குல ஆகும். மீன் கெடைக்கிறத பொறுத்துதான் லாபமா? நட்டமா? என்பது. அப்படி கொள்ளை, கொள்ளையா முதல் போட்ற முதலாளிக்கு நட்டம் வராம? அதேசமயம் மீன்வியாபாரிகள் தலையில் பாரத்தை சுமத்தாம ரெண்டு பேருக்கும் பொதுவா, வெலை பேசி விக்கணும் வருத்திச்சி.

ஜனவரி பொறந்ததும் ஒரு போட்-க்கு இவ்ளோனு பொங்க காசு கொடுக்கணும். அப்படி கொடுத்துட்டா, அந்த வருஷம் முழுசும் அந்த போட்-க்கு அவங்க தான் வருத்திச்சி. அந்த போட்-ல புடிக்கிற எல்லா மீனையும் வெல பேசி விக்கிற உரிமை, இந்த வருத்திச்சிக்கு தான். வேற யாரும் கேக்க முடியாது. பணம் கம்மியா இருக்கிறவங்க ஒரு போட்-க்கு வருத்திச்சியா இருப்பாங்க. இருக்கப்பட்டவங்க, நாலஞ்சு போட்-க்கு பணம் கொடுத்து வருத்திச்சியா இருப்பாங்க. அவங்களுக்கு எல்லா நாளும் தொழிலு இருக்கும். அப்படித்தான் ராமாயியும். தேரடியில் இருந்து வீட்டை காலி பண்ணும்போது கிடைத்த ஒத்தி பணத்தை வைத்து 4 போட்-க்கு பொங்க காசு கொடுத்தாள். அன்றிலிருந்து காசிமேட்டு கடற்கரையில் கால்பதிக்க ஆரம்பித்தாள்.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து குளித்து கடற்கரைக்கு வந்தால், 3 மணியளவில் கடலில் இருந்து கரைக்கு படகுகள் திரும்பும். அதற்குள்ளாக மீன் வாங்க வருபவர்கள் ஒவ்வொருவராக வரத்துவங்குவார்கள். தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி, ஆவடி, வெள்ளவேடு, சத்தியவேடு, வில்லிவாக்கம் இப்படி வெளியூர்ல இருந்து ஆட்கள் மீன்பாடி வண்டியை எடுத்துக்கிட்டு வர்ற சத்தம், அலையோட சத்தத்தையே அடக்கிடும். ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொரு மீனுங்க கெடைக்கும். கானாங்கெளுத்தி, மத்தி, கவளை, நவரை, மடவை, காரப்பொடி இதெல்லாம் எல்லா சீசன்லயும் வர்றதால பெரிசா வெல போகாது. ஆனா, வவ்வால் அதுலயும் வெள்ளை வவ்வால் நல்ல வெல போகும். கொடுவா, வஞ்சிரம், ஓரா, சூரை, சுதும்பு, படங்கான், திருக்கை, சுறா, பாறை, தேங்காப்பாறை, பச்சை இறால், வெள்ளை இறால் இதெல்லாம் தட்டுப்பட்ற அன்னிக்கு நல்ல வியாபாரம் நடக்கும்.

கடந்த ஒரு வாரகாலமாகவே சரியான அளவு வியாபாரம் இல்ல ராமாயிக்கு. வஞ்சிரத்துக்கு பதிலா அரைகோலா மீனே வந்துட்டு இருக்கு. பார்க்குறதுக்கு வஞ்சிரம் போலவே இருக்கும். ஆனா, சதை சப்புன்னு இருக்கும். ருசியே இருக்காது. விலையும் பெரிசா போகாது. "இன்றாவது நல்ல பாடு இருக்கணும் ஆண்டவா, கையில நாலு காசு சேர்த்தாதான், கேசு என்னாச்சுனு வக்கீல கேக்க முடியும். அம்மா, முத்துமாரி, எங்கள காப்பாத்துமா" என்று பெருமூச்சோடு மனதுக்குள் வேண்டியபடி படகுக்காக காத்து நின்றாள் ராமாயி. ரத்த சூரை மீனை பிளந்து பார்த்தால் செக்கக் செவேலென்று இருக்கும். அதனை காயவைத்து தான் மாசிக்கருவாடு செய்வார்கள். அந்த ரத்த சூரையைப் போல, பொழுது பொலபொலவென்று சிவந்து விடிய ஆரம்பித்தது. தூரத்தில் கேசவன் போட் தெரிய ஆரம்பித்தது. இன்னிக்கு நல்லா வியாபாரம் ஆனாதான் உண்டு. ஏனென்றால் நாளையில் இருந்து மீன்பிடி தடைகாலம் ஆரம்பிச்சுடும். அப்புறம் 45 நாளைக்கு லாஞ்சு போட் கடலுக்கு போக முடியாது. பைபர் போட் போகலாம். ஆனால் லாஞ்சு போட் போயிட்டு வரும்போது ஆகுற வியாபாரம் பைபர் போட் போகும் போது ஆகாது.

கடலையும், மீனவங்களையும் தெரிஞ்சு இருந்தா இந்த கவர்மெண்ட் மீன்பிடி தடைகாலம்னு ஒண்ணு கொண்டு வருமா? என்று மீனவர் சங்கத் தலைவர் பாரதி அண்ணன் அன்னிக்கு பொலம்பிக்கிட்டு இருந்தார். பொதுவா ஆறும், கடலும் கலக்குற முகத்துவாரத்துல தான் சேறு மண்டும். அங்க தான் மீனுங்க முட்டையிடும். இன்னிக்கு எந்த ஆறாச்சும் உருப்படியா இருக்கா. கொசஸ்தலை குப்பையா போயிடுச்சு, நல்லதண்ணி ஓடை நாசாமா ஆயிடுச்சு, அடையாறும், கூவமும் சாக்கடையா மாறிடுச்சு. பழவேற்காட்ல ஆரம்பிச்சு கோவளம் வரை கடற்கரைல கால வைக்க முடியுதா? எண்ணூர்ல கொட்ற கழிவுங்க மனுசங்களாலேயே மோந்து பாக்க முடில, அப்புறம் எப்படி மீனுங்க கரைக்கு வரும். துறைமுகத்தை விரிவுபடுத்துறோம், விரிவுபடுத்துறோம்னு நோண்டிகிட்டே இருந்தா கடல்ல சேறு சேறுமா? எப்படி சேறும்? சேறு இருந்தா தானே, மீன்கள் முட்டையிடும். அதுக்கும் சுவாசிக்க நல்ல காத்து வேணாமா?

வெளிநாட்டில் வீணா போன கப்பல, நடுக்கடல்ல மூழ்கடிக்கிறான், எதுக்கு பல வருஷத்துக்கு அப்புறம் அப்படி மூழ்குன கப்பல், மீன்களோட இனப்பெருக்க மையமா மாறும்னு அவனுக்கு தெரிஞ்சு இருக்கு. ஆனா, இங்க இருக்குற கவர்மெண்ட்டு ஒரு செங்கல்லையாச்சும் கடல்ல போட்டுச்சா, போடல, அதுக்குப் பதிலா, மீனவர்களை கடலுக்கு போக வேணாம்னு சொல்லுது. ஜோடியா சுத்தற மீன புடிக்கிறது தான் மீனவனோட வேலையா? கெடையாது. எந்த சீசன்ல, எந்த மீன் மாட்டுது, எந்த மீன்களுக்காக இனப்பெருக்க காலம்னு ஏதாச்சும் வெளிப்படையா சொல்லுதா இந்த கவர்மெண்ட், அதையும் சொல்லாது. காரணம், வெளிநாட்டுக்காரன் அந்த சீசன்ல மீன்பிடிக்கணும், உள்நாட்டுக்காரன் கரையில் உக்காந்துகிட்டு வேடிக்கை பாக்கணும், இதுதான் கவர்மெண்டோட எண்ணம். அன்று பாரதியண்ணன் படகில் ஏறி நின்று கொண்டு கத்தி பேசிக் கொண்டிருந்தது இதெல்லாம். என்னமோ, நம்ம நல்லதுக்கு சொல்றாருன்னு புரியுது. ஆனா நம்மால என்ன பண்ண முடியும், நம்ம கதையே என்ன ஆகும்னு தெரியலேயே என்று நொந்துக் கொண்டாள் ராமாயி.

இன்னிக்கு 45 நாள் என்பது நாளை 75 நாள் ஆகும், அப்புறம் 100 நாள் ஆகும். அப்படியே படிப்படியா மீனவன கடலுக்குள் கால் வைக்க முடியாம பண்றதுதான் இந்த திட்டத்தோட நோக்கம் என்று சொன்ன அண்ணன் பாரதியின் வார்த்தைகள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன. திலகர் ஜெயிலுக்கு போய் ஒரு மாசம் ஆகி, ஒரு வருஷம் ஓடி விட்டது. என்னிக்கி வெளில வருவானோ, எவ்ளோ நாள் ஆகுமோ என்ற சிந்தனைதான் ராமாயின் மண்டைக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.

ஓய், ஓய் என்று குரல் எழுப்பியபடியே கட்டுமரத்தில் இருந்து குதித்தான் தனசேகர். கேசவன் போட்-டில் வேலைக்கு செல்பவர்களிலேயே அவன்தான் சின்ன பையன். எதுக்கெடுத்தாலும் கேலி, கிண்டல் தான். "நீ வருத்தமா இருக்குறதால வருத்திச்சியா, வருத்திச்சியா இருப்பதால வருத்தமா இருக்கியா?" ராமாயியை பார்க்கும் போதெல்லாம் தனசேகர் கிண்டல் செய்வது இப்படித்தான். அவன் குரலை கேட்டு கட்டுமரம் அருகில் சென்ற ராமாயி, கூடையில் எடுத்து வரப்பட்டிருந்த மீன்களை பார்த்ததும், "அம்மா தாயே முத்துமாரி எங்களை காப்பாத்திட்டம்மா" என்று தெய்வத்திற்கு நன்றி சொன்னாள் ராமாயி. காரணம், வெள்ளை வவ்வால், படுவஞ்சிரம், முயல்பாறை, தாழை இறால் என்று எல்லாமே நல்ல விலை போகக் கூடிய மீன்களாக இருந்தது. அன்னக்கூடையில் அள்ளிய மீன்களை கரையோரமாக கொண்டு வந்து வைத்து ஏலம் போட ஆரம்பித்தாள். வஞ்சிரம் ஒரு கூடை ஆயிரம், ஆயிரம், ஆயிரம் என்று சொல்லி துவக்கி வைத்தாள். வந்திருந்த வியாபாரிகள், மீன்களை பார்த்து விட்டு அவர்களும் விலை கேட்க துவங்கினர்.

ரெண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய்க்கு அன்று வியாபாரம் நடைபெற்றது. ராமாயின் பங்கு மட்டும் 6 ஆயிரம் ரூபாய். இன்னும் தனியா அவளுக்கென்று எடுத்து வைத்துக் கொண்ட முயல்பாறை மீன்களை விற்றால் அது இன்னும் ரெண்டாயிரம் கிடைக்கும். இன்று நல்ல பொழுதாக விடிந்திருக்கிறது. ஈரம்படிந்த நோட்டுக்களை சுருட்டி, இடுப்பின் புடவை மடிப்பில் மீண்டுமொருமுறை சுருட்டினாள். தூரத்தில் பார்த்தபோது, தள்ளுவண்டியில் விற்கப்பட்ட ஐஸை சின்னவன் தமிழ்மணியும், தமிழ்மொழியும் சப்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. "எங்கடா, எதுக்கு வந்தீங்க கல்லோரத்துக்கு, பெரியவன் எங்கடா" என்று கத்திக் கேட்டபடியே பிள்ளைகளை நோக்கி நடக்கத் துவங்கினாள் ராமாயி. "அண்ணா இன்னும் எழுந்துக்கலமா? ஆயா கூட தூங்கிட்டு தான் இருக்கு" என்று தங்கை தமிழ்மொழியை இடுப்பில் தூக்கி வைத்திருந்த தமிழ்மணி கூறினான்.

நடந்து சென்று குழந்தையை வாங்கிக் கொண்ட ராமாயி, திரும்பி தனசேகரிடம் டேய் வீட்டுக்கு வாடா சாப்பிட என்றாள். சரிக்கா, நீங்க போங்க நான் வலையை காய வச்சிட்டு வர்றேன் என்றான். அப்போது கடற்கரையில் சிறிய சலசலப்பு. எல்லோரும் திகைத்து கரையை நோக்கி வேகமாக ஓடவர ஆரம்பித்தார்கள். ஏய், ஏய் என்று அலறல் சத்தம் கேட்டது. முதலில் ஒன்றுமே புரியவில்லை. வழக்கத்தை காட்டிலும் அலை ஏறி வந்து படகின் பக்கவாட்டை அறைந்தது. கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் அட்டைப்பெட்டிகளை போல தூக்கி எறியப்பட்டன. என்னவென்று யோசிப்பதற்கு முன்னதாகவே கன்னத்தை மாறி, மாறி அறையும் வாத்தியாரைப் போல அலைகள் அடுத்தடுத்து ஏறி மணலை தாண்டி வந்தது. திகைத்தவர்கள் எல்லோரும் அலறியபடியே கரையை நோக்கி ஓட துவங்கினார்கள். ராமாயியும் குழந்தைகளை கையில் பிடித்தபடி ஓடினாள். எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகம் எடுத்தும் பலனில்லை. பின்னால் வந்த ஒரு கும்பல் தமிழ்மணியை இடிக்க அவன் தடுக்கி விழுந்தான். ஐயோ என் புள்ளை என்று கத்தியபடியே அவனை வாரி எடுக்க குனிந்தாள் ராமாயி. பனைமரம் அளவுக்கு ஒரு அலை வந்து அவர்களை அப்படியே வாரி சுருட்டியது.

காசிமேடு கடற்கரை அப்படியொரு சம்பவத்தை பார்த்ததே இல்லை. ஒட்டுமொத்த கடற்கரையே பல்லாயிரம் மணல் துகளாக சிதைந்து விட்டது. பேரலை அடித்து ஓய்ந்தபின் மீன்களை விட அதிகமாக செத்து கிடந்தனர் மீனவர்கள். அதோ பிளந்து கிடக்கும் படகின் சாய்ந்து கிடக்கும் கொடிமரத்தின் அருகே இடுப்பில் சுருட்டுப்பட்ட புடவையை பிடித்தபடி மல்லாந்து வானைத்தை பார்த்தபடி விழுந்து கிடந்தாள் ராமாயி. அவள் கண்களிலும், மூக்கிலும் முற்றாக மணல் நிறைந்திருந்தது. ராமாயியின் உடலை தேடிக் கண்டைந்த கிஷ்ணம்மாவும், தமிழ்வாணனும் அலறிய ஒலி அவளுக்கு கேட்க வாய்ப்பில்லை. இனிமேல் தூக்கத்தில் கெட்ட கனவு கண்டு ஓட வேண்டிய அவசியம் ராமாயிக்கு இல்லை.

கதாசிரியர் அரவிந்த் குமார் ஊடகவியலாளர்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment