Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : வேதகிரியின் சங்கு

தவிமிருந்து பெற்ற குழந்தையை, தவறாக நினைத்து அப்பா திட்டியதால், அந்த குழந்தை எங்கிருந்து உதயமானதோ அங்கேயே தன்னை மாய்த்துக் கொண்டது என்பதை விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vedhakiri Sangu - Sunday special short story

அரவிந்த்குமார்

Advertisment

ஈகை ரத்தினாபுரம் என்று சொன்னால் நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் ஈமோடு என்று சொன்னால்தான் அந்த ஊருக்கு வழிகாட்டுவார்கள். பேச்சுவழக்கில் ஈகை ரத்தினாபுரம் என்பது ஈமோடாக மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டது. திருக்கழுகுன்றம் மலையில் இருந்து பார்த்தால் முதலில் தெரிவது முள்ளிகுளத்தூர். அதனையொட்டி பரந்து விரிந்த ஏரியை பனைமரங்கள் காவல்காக்க சுற்றிலும் புகை மண்டிய குடிசை வீடுகள் தெரிவது தான் ஈகை ரத்தினாபுரம்.

ஏரிக்கரை சரிவில் ஓட்டமும், நடையுமாக ஓய், ஓய் என்று மாடுகளை விரட்டியபடி வந்து கொண்டிருந்தான் மகாதேவன். நீ என்ன கத்துவது, நான் என் இஷ்டப்படி தான் நடப்பேன் என்று அவன் குரலை கண்டுகொள்ளாமல் அசைபோடுவது போல மெதுவாக நடைபோட்டன மாடுகள். "சொல்லிட்டே இருக்கேன், நடக்குதுங்களா பாரு, ஏய், சொன்னா கேக்க மாட்ட" என்று வாலை பிடித்து முறுக்கினான். பக்கத்தில் இருந்த செவலை ஒன்று வாலை சுழற்றி மகாதேவனின் இடுப்பில் அடித்தது. ஏற்கனவே புழுதி படிந்திருந்த வேட்டியில் சாணி அப்படியே ஒட்டிக் கொண்டது. "சரிதான், இன்னிக்கு வீட்ல என்ன கெடைக்கப் போகுதுனு இதுங்க சொல்லுது போல" என்று சிரித்தபடியே மாடுகளை ஆத்துப்படுத்திக்கிட்டே மேட்டு ஈகையை தாண்டி, பள்ள ஈகை வழியாக நத்தம் கரியச்சேரிக்குள் கால்பதித்தான்.

கொட்டாங்குச்சியை கவிழ்த்தாற்போன்று பனையோலைகள் வேயப்பட்ட குடிசை. நன்றாக இடுப்பை வளைத்து குனிந்து தான் உள்ளே போக முடியும். வாசலில் இடதுபக்கம் திண்ணை, வலதுபக்கம் சாணிமெழுகிய மண்சுவர் மறைப்பு. அதுதான் சமையல்கட்டு. ஊதாங்குழலால் மூச்சை இழுத்து பிடித்து அடுப்பில் மூன்று முறை ஊதினாள் கல்லியம்மா. மரத்துண்டு ஈரமாக இருந்ததால் புகைமூட்டம் வலுவாக எழுந்தது. ஆசாரி கிட்ட கேட்டு வாங்கி வந்த வால்தூள் எடுத்து அடுப்பில் போட பக்கென்று சத்தத்துடன் நெருப்பு பற்றிக் கொண்டது. வேகவைத்த பலாக்கொட்டைகளை கொதிக்கின்ற குழம்பில் போட்டு தட்டு எடுத்து அதனை மூடிவிட்டு வெளியே வரவும், மகாதேவன் மாடுகளை ஓட்டியபடி வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது.

"போனா போன இடம், வந்தா வந்த இடம், நேரம் காலம்னு ஒன்னு கெடையாது, இன்னிக்கு சீக்கிரம் வந்து சேரு, நெறய வேல இருக்குனு சொன்னேன்ல, மாடு மாதிரி மண்டைய மண்டைய ஆட்டின, இவ்ளோ நேரம் கழிச்சு வந்து நிக்குற" என்று இடுப்பில் கைவத்து நின்றபடி பொரிந்து தள்ளினாள் கல்லியம்மா.

கள்ளு குடிச்சிட்டு மல்லாந்துட்டியா? என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

தோளில் இருந்த இரண்டு பனங்குலையை கீழே தொப்பென்று போட்டு, "ஏய் சத்தியமா இல்ல. கரை முழுக்க விழுந்து கெடந்தது, அதான் எடுத்துட்டு வந்தேன், நான் எந்த கள்ளையும் குடிக்கலமா" என்று கல்லியம்மாவின் தலையில் சத்தியம் செய்வது போன்று மடாரென்று அடித்தான்.

"அதானே பார்த்தேன், விடிஞ்சா கோயிலுக்கு போகணும்ன்ற நெனப்பு இல்லாம போச்சோனு பயந்துட்டேன்" என்று அவனை இடதுகையால் தள்ளிவிட்டு பனங்குலையை தட்டிப் பார்த்து விட்டு "ரெண்டு நாள் கழிச்சி மூட்டம் போட்டா பழுத்துடும்னு நெனக்கிறேன்" என்று சொல்லியபடியே திண்ணையில் ஒதுக்கி வைத்தாள். அப்படியே வாசலில் இருந்து நாலெட்டு தொலைவில் வேப்ப மரத்தடியில் செங்கற்களை நிற்க வைத்து களிமண்ணும், சாணியும் கலந்து பூசிய கோழிக் கூண்டுக்குள் குனிந்து பார்த்தாள். ஒண்ணு, ரெண்டு என்று வாய்விட்டு எண்ணியபடி "எல்லா சரியா இருக்கு" என்று வாய்விட்டுக் கூறியபடியே பின்னால் மாட்டுத் தொழுவத்திற்கு போனாள். அதற்குள் ஓட்டி வந்த மாடுகளை தொழுவத்தில் சவுக்கு நீட்டுகளில் கட்டிக் கொண்டிருந்தான் மகாதேவன்.

"யோவ், செனை மாட்டை நடுவுல வுடாத, மத்ததங்க முட்ட போகுது, இந்த மூலையில் கட்டு" என்று கயிறை தூக்கி போட்டு மாட்டின் வாலை தூக்கி பின்புறத்தை பார்த்தாள். இழுத்து பார்த்தால் கம்பி பதத்திற்கு சளி போன்று ஜவ்வாக ஏதோ வழிந்து கொண்டிருந்தது. "நாளக்கி இன்னேரம் கன்னு ஈனும்னு நெனக்கிறேன், அங்கம்மா சீம்பால் கேட்டிருந்தா, அவள வர சொல்லணும்" என்று சொல்லியபடியே மாட்டின் முதுகை லேசாக வருடி விட்டாள்.

"இந்த வூட்ல, கோழி அடைகாக்குது, மாடு செனைதட்டி நிக்குது, எனக்கு தான் ஒண்ணும் வாய்க்க மாட்டேங்குது, என்ன பாவம் பண்ணேனோ, எல்லார் வாயிலயும் விழுந்து எழுறேன், சீம்பால் வாங்க வர்றாளுங்க, புள்ளைய கண்ணுல காட்ட மாட்றாளுங்க, என் வூட்லயும் ஒரு புள்ளை இருந்தா, இப்படிலா பண்ணுவாளுங்களா" என்று கண்கலங்கினாள். "என்ன கல்லிமா, இப்படியே சொல்லிட்டு இருந்தா, நமக்குனு நேரம்-காலம் வரணும், நம்மளையும் ஆத்தா-அப்பன்னு சொல்ல புள்ளங்க இந்த வாசல் முச்சூடும் நெறஞ்சி கெடக்கதா போகுதுங்க" என்று ஆதுரமாக அவள் தோளை தடவினான். சற்று நேரம் அமைதியாக நின்றவள், மூக்கை இழுத்து உறிஞ்சி மோப்பம் பிடித்து, "கொழம்பு கொதிச்சிடுச்சி போல, இறக்கினா சரியா இருக்கும்" என்று வேகமாக அடுப்பை நோக்கி ஓடினாள்.

கருங்கல் பாவிய தட்டிகளால் மறைக்கப்பட்ட தடுக்கில் நின்றபடி குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தான் மகாதேவன். பக்கத்தில் அமர்ந்த அவனுடைய அம்மா ஏகாத்தாவிடம், "நானும் கல்லிம்மாவும் நாளைக்கு காலையிலேயே கோயிலுக்கு போறோம் , நீ மாடுகளுக்கு மறக்காம தண்ணி காட்டிடு, மேய்ச்சலுக்கு விட வேணாம், வைக்கோல் இருக்கு, அது போதும்" என்று சொல்லியபடியே பலாக்கொட்டை குழம்பை துவையலோடு சேர்த்து வரகு அரிசி சோற்றில் குழைத்து சாப்பிட்டான். "டேய், உன்னையும் நாந்தா வளர்த்தேன், இந்த மாடுகளையும் நாந்தான் வளர்த்தேன், எங்கிட்டயே சொல்றியா, உருப்படியா கோயிலுக்கு போயிட்டு வாங்க, அடுத்த வருஷமாச்சும் இந்த வூட்ல கொழந்த சத்தம் கேக்கட்டும்" என்று அதட்டல் போட, சத்தமின்றி சாப்பிட்டு எழுந்தான் மகாதேவன்.

பாத்திரங்களை ஒழித்துவிட்டு நேரத்தோடு படுக்கைக்கு வந்த கல்லியம்மா, "வூரு பேசுறதவிட உங்கம்மா பேசுறதுதான் ரொம்ப வலிக்குது" என்று சுவரை பார்த்து ஒருக்களித்து படுத்தாள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கூரையையும் அதனை தாங்கி பிடிக்கும் பனைமர துண்டுகளையும் பார்த்தவாறு மெல்ல தூங்கி போனான்.

கல்லியம்மா உலுக்கிய பிறகுதான் அசதியில் தூங்கி போனது உறைத்தது. அதற்குள்ளாக குளித்து முடித்து தயாராகி இருந்தாள் கல்லியம்மா. "எழுந்து குளிச்சிட்டு வாய்யா, இப்போ கௌம்பினா தான் சரியா இருக்கும்" என்று அவசரப்படுத்தினாள். வாரிசுருட்டி எழுந்து தபதபவென்று ஓடி, ரெண்டு குவளை தண்ணிய தலையில் கொட்டிக் கொண்டு வேட்டியை எடுத்து கட்டி தயாரானான். கோயில் குளத்தில் முங்கிய பிறகு மாற்றிக்கொள்ள ஆளுக்கொரு துணியை மஞ்சப்பையில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். வாசலில் போட்டிருந்த கோலத்தை மிதிக்காமல் எட்டி கால்வைத்து நடந்தனர் இருவரும். சுருக்கென்று நடந்தால் அரைமணி நேரத்தில் போய்விடலாம் கோயிலுக்கு.

வழிநெடுக எதுவும் பேசாமல் நேராக திருக்கழுகுன்றம் மலையடிவார கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தை வந்தடைந்தனர். கோயிலுக்குள் போகாமல் சங்கு தீர்த்த குளத்தின் கரையில் இருந்த நந்தியை வலம் வந்தனர். மகாதேவன் கரையில் அமர்ந்து கொள்ள படித்துறையில் கால்வைத்து இடுப்பளவு நீருக்குள் சென்றாள் கல்லியம்மா. நிமிர்ந்து மலையுச்சியை பார்த்தாள். கண்களில் நீர் வழிய "வேதகிரீஸ்வரா, என் பிரச்னை என்னனு உனக்கு தெரியாதாப்பா? குளத்துக்கே சங்கு பொறக்க வைக்கிற, என் வயித்துல ஒரு புள்ளைய தரக்கூடாதா? உன் பேரையே வைக்கிறேன்பா?" என்று சொல்லி முங்கி எழுந்தாள். கரையில் அமர்ந்திருந்த மகாதேவன் ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணத் துவங்கினான். விடாமல், மூச்சு முட்ட முட்ட முங்கி எழுந்து கொண்டிருந்தாள் கல்லியம்மா. 108 ஆகிடுச்சும்மா என்று மகாதேவன் குரல் கொடுக்க, தலை லேசாக சுற்ற, கண்களில் நீர் கோர்த்து எரிய, நீருக்குள் வெளிவந்த கல்லியம்மாளுக்கு சமநிலைக்கு வர சிலநிமிடங்கள் ஆனது.

ஈரம் சொட்ட, சொட்ட புடவை காலிடுக்கில் சிக்கி சரசரவென்ற ஒலி எழுப்ப கரையேறிய கல்லியம்மாளை தொடர்ந்து மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்தான் மகாதேவன். இரண்டு பேரும் கோயிலின் பதினாறு கால் மண்டப தூண்களுக்கு நடுவே உடைமாற்றி வெளிவந்து மலையேற துவங்கினர். நெட்டுக்குத்தாக இருந்த ஒவ்வொரு படிக்கட்டிலும் குனிந்து தொட்டு நெற்றியில் ஒற்றியபடி மேலேறினர். 502 படிக்கட்டுக்களையும் ஏறி முடிக்க ஒருமணி நேரத்திற்கும் மேலானது. மூலவர் வேதகிரீஸ்வரர் - சொக்க நாயகியை தரிசனம் செய்துவிட்டு கழுகு பாறையருகே வந்து அமர்ந்தனர். இரண்டு பேருக்கும் மூச்சு வாங்கியது. நெற்றியில் வழிந்த வியர்வையில் திருநீறும், குங்குமமும் கலந்து மூக்கின் மீது ரத்தக் கோடாக காட்சியளித்தது. வட்டமிடப் போகும் கழுகுக்கு படைப்பதற்காக ஒரு கிண்ணத்தில் எண்ணெய், ஒரு கிண்ணத்தில் தண்ணீர், ஒரு கிண்ணத்தில் சீயக்காய் தூள், ஒரு கிண்ணத்தில் பொங்கல் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். அப்போது வானில் விர்ரென வட்டமடித்தபடி இரண்டு கழுகுகள் தோன்றின. வெய்யில் கண்களை கூச செய்ததால் புருவத்தின் மேல் கைகளை குவித்தபடி மேலே அண்ணாந்து பார்த்தாள் கல்லியம்மா. அப்போது மிக தாழ பறந்த கழுகின் நிழல் அவள்மேல் படர்ந்து சென்றது. படபடப்பாக வெலவெலத்துப் போன கல்லியம்மா, "என் புள்ளை சங்கு போல வெள்ளையா பொறப்பான், கழுகை போல வாழ்க்கைல ஒசரத்துக்குப் போவான்" என்று சொன்னாள். ஆமாம், ஆமாம் என்பது போல தலையாட்டினான் மகாதேவன்.

அடுத்த வருஷம் சங்கு தீர்த்த மேளா நடக்குறப்போ அழகான ஒரு ஆம்பள புள்ளைய பெத்தா கல்லியம்மா. ஊரே கண்ணு வைக்குற அளவுக்கு கொழுகொழுனு, முட்டை முட்டைக் கண்ணா, வெள்ளை வெளேர்னு அப்படி ஒரு அழகு. கல்லியம்மாளையும், மகாதேவனையும் கையில் புடிக்க முடில. சொந்தத்துல இருக்குற எல்லாரையும் கூப்பிட்டு கெடா வெட்டி விருந்து போட்டான். சித்திரை குளக்கரை பிள்ளையார்க்கு 108 தேங்காய் உடைச்சான். 3 மாத கைக்குழந்தைய தூக்கிட்டு திருக்கழுகுன்றம் மலையேறி போய் சன்னதி வாசலில் குழந்தையை தரையில் கிடத்திய கல்லியம்மா, "நீ சொன்ன வாக்க காப்பாத்திட்ட, நான் சொன்ன வாக்க காப்பாத்துறேன்னு குழந்தையின் காதில் வேதகிரி, வேதகிரி, வேதகிரி" என்று மூன்று முறை சொன்னாள். குழந்தை மலர சிரித்தது.

எவ்வளவுக்கெவ்வளவு வேண்டி பொறந்த கொழந்தையோ, அதுக்கு பலமடங்கா ஏண்டா இப்படி வந்து பொறந்து தொலைச்ச என்று திட்டாத நாள் கிடையாது வேதகிரிய. சேட்டை என்றால் அப்படி ஒரு சேட்டை. முதல் 5 வருடங்கள் வேதகிரியின் கால் தரையில் பட்டதே கிடையாது. மகாதேவனோ, கல்லியம்மாளோ, ஏகாத்தாளோ, தெருவில் உள்ள யாரோ ஒருவரின் தோளில் தான் வேதகிரி வலம் வருவது. ஆனால் அதற்கு பிறகு வேதகிரியை யாரும் பிடிக்க முடியவில்லை. வேப்பமரத்தின் உச்சியில் பார்க்கலாம், ஏரிக்கரையில் உள்ள பனைமரங்களின் உச்சியில் பார்க்கலாம், ஏரிக்கரையின் வழுக்குப்பாறையில் இருந்து நீருக்குள் சர்ரென்று பாயும்போது பார்க்கலாம், மாடுகளை ஓட்டிவரும்போது அதன்மீது சவாரி செய்யும் போது பார்க்கலாம். அவன் கால் இப்போதும் தரையில் படுவதில்லை. பள்ளிக்கூடம் அனுப்பினாலும் அங்கும் அவன் தங்கவில்லை. வாத்தியாருக்கு போக்கு காட்டிவிட்டு எங்காவது ஓடிவிடுவான். ஒவ்வொரு ஆண்டும் வாத்தியார் கையில், காலில் விழுந்து அடுத்த வகுப்புக்கு தேற்றி வந்தார்கள் மகாதேவனும், கல்லியம்மாவும். "5-ம் வகுப்பு வரை நான் பாஸ் பண்ணி விட்டுட்டேன், 6-ம் வகுப்பில் இருந்து இப்படி தூக்கி போட்றது நடக்காது. தயவு செய்து அடக்கி ஒடுக்கி படிக்க வைங்க" என்ற வாத்தியாரின் அறிவுரை வேதகிரியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வழக்கம் போல் அலப்பறைகள் தான் அவன் வாடிக்கையாகி போனது.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சங்கு தீர்த்த மேளா அடுத்த மாதம் நடக்கப் போவதாகவும், அதற்காக ஊர்க்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்துக் கொண்டே வேன் ஒன்று ஊருக்குள் வர, அதன் பின்னால் சிறுவர்கள் கூட்டம் படையெடுத்தது. அதற்கு தலைமை தாங்கியது வேதகிரி தான். கும்பாபிஷேகம் குறித்து கோயில் அச்சிட்ட மஞ்சள் மற்றும் ரோஸ் நிற துண்டு அறிக்கைகளை வேனில் இருந்தவர்கள் தூக்கி எறிய, அதனை பிடிக்க சிறுவர்களுக்குள் போட்டா போட்டி. அன்று மாலையே ஏரியில் சிறுவர்கள் முங்கி, முங்கி சங்கு எடுப்பது போல் பாவனை செய்தார்கள். பெரிய கல் ஒன்றை கரையில் இருந்து ஏரிக்குள் எறிந்து, அதனை முங்கி எடுப்பது தான் சங்கு என்று பந்தயம் கட்டி விளையாடினார்கள். எல்லாமுறையும் கல்சங்கை எடுத்தது வேதகிரி தான்.

அன்றும் அப்படித்தான் காலையில் கிளம்பிய வேதகிரி, பள்ளிக்கும் செல்லவில்லை என்று தகவல் வர அவனை தேடப் போனான் மகாதேவன். ஏரிக்கரையின் அருகே கள்ளுக்குடித்துக் கொண்டிருந்த சிலர், சுள்ளிகளை ஒடித்து தீமூட்டி பனம்பழத்தை சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் அமர்ந்து அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வேதகிரி. கூடவே கூட்டாளி சுகு. ஒருமணி நேரம் தீயில் வெந்த பனம்பழத்தை பிளந்து உள்ளிருக்கும் நார் பகுதியை இழுத்து சுவைத்த வேதகிரி கண்சொக்கி பனைமரத்தில் சாய்ந்தான். "டேய் உங்க வீட்ல தேடப் போறங்கடா, போடா, பனம்பழம் சாப்பிட்டல்ல, இடத்தை காலிபண்ணு" என்று கள் குடித்துக் கொண்டிருந்த ஒருவன் சொல்ல, போவதாக மண்டையை ஆட்டிய வேதகிரி, பனம்பழத்தை நல்ல நார் வரும்வரை இழுத்து இழுத்து சுவைத்து அதன் சுவையில் அப்படியே பனைமரத்தின் கீழ் சாய்ந்தான்.

ஒருபக்கம் கள் பானை, மறுபக்கம் நாராக விரிந்த பனம்பழம், அரைமயக்கத்தில் வேதகிரி, தூரத்தில் இருந்து இதனை பார்த்து மகாதேவனுக்கு ஆத்திரம் வெறிகொண்டு வந்தது. ஆளுயரம் விளைந்திருந்த காட்டாமணக்கு செடியை வேரொடு பிடுங்கி வேதகிரியை நோக்கி ஓடிவந்தான். "இந்த வயசுலயே கள்ளு குடிக்கிறயா? ஒத்த புள்ளையாச்சேனு செல்லம் கொடுத்து வளர்த்தா? இப்படி பண்ணுவியா?" என்று மடார், மடாரென்று கண்மண் தெரியாமல் வேதகிரியை வெளுத்து வாங்கினான் மகாதேவன். இதைப்பார்த்த வேதகிரியின் கூட்டாளி சுகு, கையில் இருந்த பனம்பழத்தோடு ஓட்டம் பிடித்தான்.

கள் குடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் பானைகளை தூக்கி போட்டுவிட்டு ஓடிவந்து மகாதேவனை தடுத்தனர். "என்ன மகாதேவா, சின்ன புள்ளைக்கு கள்ள ஊத்தி கொடுப்போமா? எங்களுக்கு புத்தியில்ல? உன் புள்ளை சேட்டை பண்ணுவானே தவிர, தப்பு தண்டா பண்ண மாட்டாம்பா? இது உனக்கு தெரியாதா? நாங்களும் தானே வேதகிரியை தூக்கி வளர்த்து இருக்கோம்?" என்று ஆள் ஆளுக்கு வேதகிரியை தடுக்க, அவ்வளவு அடி வாங்கியும் ஒரு வார்த்தைக் கூட பதில் பேசாமல், தோள்பட்டையில் பிரம்படி பட்டதால் கொஞ்சம் ரத்தம் கசிந்ததையும் பொருட்படுத்தாமல் மகாதேவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வேதகிரி. பிறகு விறுவிறுவென்று ஏரியின் மறுகரை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான். "டேய் நில்லுடா, நில்லுடா அப்பா தெரியாம அடிச்சிட்டேண்டா" என்று மகாதேவன் பின்னால் ஓடினான். ஆனால் நிற்காமல் கால் தரையில் படுகிறதா, இல்லையா என்பது தெரியாத அளவுக்கு கண்முன்னே நடந்து மறைந்தான் வேதகிரி.

சற்றுநேரம் என்ன செய்வது என்று தெரியாமல் வீடுவந்த மகாதேவன் நடந்ததை சொல்ல பத்ரகாளியானாள் கல்லியம்மா. "எம்புள்ள குடிப்பானா? எம்புள்ள குடிப்பானாயா? சீ, இதை சொல்ல வெக்கமா இல்ல? அவன் மேல ஒரு மாசு படாதுயா? என்னனு நெனச்ச என் புள்ளைய? எப்படி நீ அடிக்கலாம்?" என்று ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாள். இதைப்பார்த்து மகாதேவனே ஒருகணம் வெலவெலத்து விட்டான். கத்தி முடித்து ஆத்திரம் அடங்கி திண்ணையில் முதுகை சாய்த்து விசும்பினாள் கல்லியம்மாள். அவள் அருகில் சென்று ஆறுதல் சொல்ல தயக்கமாக இருந்ததால் மகாதேவன், வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். "என்னமோ தப்பா நெனச்சி அடிச்சிட்டான், பெத்த புள்ளைய அடிக்க அப்பனுக்கு உரிமை இல்லையா? விடு, வேதா எங்கயும் போய் இருக்க மாட்டான், ராவுக்கு வூடு வந்து சேருவான் பாரு" என்று ஆறுதலாக கூறினார் மகாதேவனின் அம்மா ஏகாத்தா.

அன்றிரவு ஊரடங்கிய பின்னரும் வேதகிரி வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தகவல் தெரியவர, ஆள் ஆளுக்கு ஈகை ரத்தினாபுரம் முழுவதும் தேடினர். வழக்கமாக அவன் செல்லும் ஏரிக்கரை, நண்பர்கள் வீடு என்று எல்லா இடத்திலும் தேடியாகி விட்டது. நேரம் ஆக, ஆக மகாதேவனுக்கும், கல்லியம்மாளுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. "ஊரெல்லாம் சுத்துவானே தவிர, வீட்டுக்கு வராம இருந்தது இல்லையே எம்புள்ள, இன்னிக்கு எங்க போனானு தெரியலேயே" என்று புலம்பியபடியே தெருவுக்கும், வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்தாள் கல்லியம்மா. நேரம் கடந்ததே தவிர வேதகிரியை காணவில்லை. மூவரும் ஒருபொட்டு கண்ணயராமல் தலையில் கைவைத்து கொண்டிருந்தனர். பொழுதும் விடிந்தது. தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடச் சொல்லி மாடுகள் கால்களை மாற்றி மாற்றி வைத்து அரற்றின. கோழிகள் கூண்டுக்குள் இருந்த கதவை அலகால் கொத்தின. கால்களால் மண்ணில் சீண்டி, சீண்டி குரல் எழுப்பின. வேதகிரி ஆசைப்பட்டு சந்தையில் இருந்து வாங்கி வந்து முயல்கள் மரகூண்டுக்குள் எகிறி எகிறி குதித்தன. அவைகளை திறந்து விடவும் திராணியின்றி மகாதேவனும், கல்லியம்மாளும் முடங்கி கிடந்தனர்.

அப்போது கூரைக்கு மேலே மிக உயரத்தில் வானில் வட்டமடித்தது இரண்டு கழுகுகள். இதனைப் பார்த்த கல்லியம்மாள் பதறியடித்து எழுந்து "ஐயோ என் புள்ளைக்கு என்ன ஆச்சு, ஏதாச்சு, எதுவும் ஆகிடக் கூடாது ஆண்டவனே" என்று அலறியபடி ஓட்டம் எடுத்தாள். இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் அரைமயக்கத்தில் இருந்த மகாதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலைவிரி கோலமாய் ஓடும் கல்லியம்மாளைப் பின்தொடர்ந்து ஓடினான். " எங்க போற கல்லிம்மா, ஏய் நில்லு, நில்லு" என்று மகாதேவன் கத்தியதை பொருட்படுத்தாமல் சரளைக்கற்கள் காலை இடறுவது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள் கல்லியம்மா. முள்ளிக்குளத்தூர் தாண்டி நேரே திருக்கழுகுன்றம் நோக்கி செல்லும்போதுதான் மகாதேவனுக்கு கொஞ்சம் புரிய தொடங்கியது. அதற்குள் இரண்டு பேரும் ஓடுவதைப் பார்த்து பின்னால் ஊரில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். ஒருசிலர் இருசக்கர வாகனத்திலும், ஒருசிலர் சைக்கிளிலும், இன்னும் சிலர் மொத்தமாக மாட்டு வண்டியிலும் ஏறியபடி வரத் துவங்கினர்.

வேகமாக ஓடிய கல்லிம்மா அப்படியே தொபுக்கடீர் என்று திருக்கழுகுன்றம் சங்கு தீர்த்த குளத்தில் குதித்தாள். இடுப்பளவு நீரில் அங்கும் இங்குமாய் கைகளால் துழாவி வேதகிரி, வேதகிரி என்று அரற்றினாள். பின்னால் வந்த மகாதேவன், என்னடி பண்ற, நம்ப புள்ளைக்கு ஒண்ணும் ஆகியிருக்காது என்று கூறிவிட்டு அவனும் நீரில் குதித்து தேடினான். அதற்குள் திரண்டு விட்ட இளைஞர்கள் சிலர் குளத்திற்குள் மீனாக பாய்ந்தனர். பின்னால் வந்த ஊர்க்காரர்களும் குளத்தின் நான்கு கரைகளிலும் சல்லடை சல்லடையாக தேடத் துவங்கினர். பச்சையாக காட்சியளிக்கும் குளம், மொத்த ஜனத்தால் செம்மண் நிறத்திற்கு மாறியது. கோவில் அதிகாரிகளும், ஊர் தலைவர்களும் வந்து சேர்ந்து விட, நடந்ததை விசாரித்தனர். "உம் புள்ள காணாம போயிட்டான் சரி, அதுக்காக குளத்துல விழுந்த செத்து இருப்பானு நீயா நெனச்சிக்கிட்டா எப்படிமா? புள்ள உசுரோட எங்கயாச்சும் இருக்கும். அப்பன்காரன் அடிச்சதால் கோவிச்சிக்கிட்டு போயிருக்கு, வந்திடும், கவலைப்படாத" என்று தேறுதல் கூறினர்.

மெதுவாக குளத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கரையேறினர். அப்போது இரண்டு பேர் மட்டும் குளத்தின் மையத்தின் இருந்த நீராழி மண்டபத்தை நோக்கி நீந்திப் போனார்கள். பாசிபடிந்து காணப்பட்ட நீராழி மண்டபத்தை கஷ்டப்பட்டு தொற்றி ஏறினர். உள்ளே போன அவர்கள் அங்கிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து கரையை நோக்கி சத்தம் போட்டு கூப்பிட்டு கையை, காலை ஆட்டினர். கரையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே இரண்டு பேரும் சராலென்று நீருள் பாய்ந்து கரையை நோக்கி வரத் துவங்கினர். கரையில் இருந்தவர்கள் பதற்றத்துடன் அவர்களை உற்றுப் பார்த்தனர். கல்லியம்மாளின் மொத்த உடம்பும் உதறல் எடுத்தது. கல்லியம்மாளின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட மகாதேவன், அவர்கள் கரை நெருங்குவதை கவனித்தான்.

கரையேறியவர்கள் கையில் ஒரு சங்கு இருந்தது. அவர்கள் வேகமாக படியேறி நீர்சொட்ட சொட்ட வந்து கல்லியம்மாளின் கையில் அந்த சங்கை கொடுத்தனர். அதில் வேதகிரி என்று எழுத்துக்கள் கீறி இருந்தன. கூரான கல்லால் சங்கின் முதுகில் வேதகிரி என்று எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த கல்லியம்மாள் தலைசுற்றி மயங்கி கீழே விழுந்தாள். அவளைப் பிடிக்கக் கூட தோன்றாமல் தலையில் மடார் மடாரென்று அடித்துக் கொண்டு ஐயோ, என் புள்ள, என் புள்ள, என்ன ஆச்சுன்னு தெரியலேயே என்று குளத்திற்குள் பாயப் போனான். அவனை சிலர் தடுத்து பிடித்தனர். கல்லியம்மாளை பெண்கள் சிலர் சூழ்ந்து கொண்டு உலுக்க மயக்கம் தெளிந்து எழுந்த கல்லியம்மா வேதகிரி, வேதகிரி எங்கயா போன என்று ஓவென அலறினாள்.

ஊர்க்காரர்களுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த சங்கை ஒவ்வொருவராக வாங்கி பார்த்தனர். சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சங்கு பிறக்கும். அடுத்த மாதம் தான் அதற்கான விழா நடக்க இருந்தது. இந்த சங்கு எங்கிருந்து வந்தது, யாராவது எடுத்து வந்து போட்டிருப்பார்களா? ஆனால் வேதகிரி என்ற பெயர் எப்படி வந்தது? யார் எழுதியது? வேதகிரிக்கு அவன் பெயரை எழுத தெரியுமா? என்று ஒன்றும் புரியாமல் ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் எல்லோரும் சங்கை பார்த்தனர். கல்லால் கீறி இருந்தாலும், எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மணிபோல் தெளிவாக இருந்தது. இதற்கு முன்னர் அந்த கையெழுத்தை யாரும் பார்த்ததாக சொல்லவில்லை.

அப்போது கூட்டத்தில் இருந்த வேதகிரியின் கூட்டாளி சுகு, சங்கை பார்த்து இது வேதகிரி எழுதியது தான் என்றான். ஒட்டுமொத்த கூட்டமும் நிசப்தமாகி விட்டது. மகாதேவன் ஓடிவந்து சுகுவின் தோளைப் பிடித்து "என்னடா சொல்ற, அவன் எழுதி நாங்க பார்த்ததே இல்லையடா? பொய் சொல்றியா? உண்மை சொல்றியா?" என்று உலுக்கினான். கையில் இருந்த பனம்பழத்தை சுகு எடுத்துக் காட்டினான். நன்றாக சாப்பிட்டு காய்ந்த நிலையில் நார் நாராக பிரிந்து இருந்த அந்த கொட்டையின் மையப்பகுதியில் வேதகிரி என்று எழுத்துக்கள் கீறி இருந்தன. அதையும், சங்கையும் வைத்து பார்த்த போது இரண்டும் ஒன்றாக இருந்தது. "எப்போடா எழுதினான் இத" என்று மகாதேவன் கேள்வி எழுப்ப, "நேத்து நீங்க வேதகிரியை அடிச்சீங்கள, அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான்" என்றான் சுகு.

ஒரு கையில் பனங்கொட்டையையும், மறுகையில் சங்கையும் வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்த கல்லியம்மா, வேதகிரி என்று ஓங்கி பெருங்குரலெடுத்து கத்த, திருக்கழுகுன்றம் மலையெங்கும் வேதகிரி, வேதகிரி என்று எதிரொலித்தது. கழுகுபாறையின் மீது இரண்டு கழுகுகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment