அதிகாலை இரண்டு மணி இருக்கும். இரவுப்பணி என்பதால் என்னுடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே இருந்தனர். சீரான இடைவெளியில் வயர்லெஸ் கருவியில் இருந்து பீப், பீப் என்ற ஒலி வந்து கொண்டிருந்தது. சுரேசும், மணிகண்டனும் டீ குடித்தபடி தொலைபேசியையும், கணிணித் திரையையும் பார்த்துக் கொண்டிருந்தனர். 20-க்கு மேற்பட்ட கணிணிகள் வரிசையாக இருக்க, நான் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்தேன். நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்ததால் கால்கள் கடுத்தது. இடுப்பும் கொஞ்சம் எழுந்து நின்றால் தேவலாம் போல் இருந்தது.
"ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்" என்று தொலைபேசி அடித்தது. ரிசீவரை எடுத்த சுரேஷ், "தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, தலைமை கட்டுப்பாட்டு அறை" என்று கூறினான்.
மறுமுனையில் யாரோ பதறிய குரலில் பேசுவதும், சுரேஷ் குறிப்பெடுப்பதும் தெரிந்தது.
"அட்ரஸ் ஒழுங்கா சொல்லுங்க, பட்டு கூட்ரோடு மாங்காடு சரிதானே, உங்க பேர் ஜமால், போன் நம்பர் சொல்லுங்க.. கவலைப்படாதீங்க வண்டி வந்துரும்" என்று ரிசீவரை வைத்துவிட்டு பூவிருந்தவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு வயர்லெசில் தகவல் கொடுத்தான்.
"மாங்காடு பக்கத்துல பட்டு கூட்ரோடு முனையிலே மெக்கானிக் ஷெட் வாசல்ல இருந்த பழைய பைக்குகளுக்கு யாரோ தீ வைச்சுட்டாங்களாம், கடை எரிஞ்சுக்கிட்டு இருக்காம் மூவ் பண்ணுங்க, ஓவர்" என்று தகவல் தெரிவித்தான்.
அப்படியே என் பக்கம் திரும்பி, "ஜீவா, ரிப்போர்ட்டில் இந்த மாங்காட்டையும் சேர்த்துக்க" என்று கூறினான். நான் ‘ம்’ என்று தலையாட்டி விட்டு. மெதுவாக எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தி நெட்டி முறித்து வெளியே வந்து நீண்ட காரிடாரில் நடந்து முதல்மாடி படிக்கட்டின் பக்கவாட்டு ஓரம் நின்று புகைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நேரம் ஸ்டேஷன் டூட்டி-யாக இருந்தால், எழும்பூர் தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்தவுடன் க்ரீரீரீங்ங்ங் என்று அலாரத்தை ஒலிக்க விட்டிருப்பார் ஸ்டேஷன் இன்சார்ஜ். மாடியில் அடித்த அலாரம் கீழ்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கியில் பன்மடங்கு சத்தத்துடன் கேட்கும். அதுவரை ஓய்வறையில் சுருண்டு படுத்திருந்த நாங்கள் எல்லோரும் எண்ணி 20 நொடிகளுக்குள் தீ தடுப்பு ஆடை, வெப்பத்தை தாங்கும் பூட்ஸ், மண்டையை பாதுகாக்கும் தடிமனான மஞ்சள் தொப்பி ஆகியவற்றை அணிந்து தயாராகி ஓடுவோம். அதற்குள் டிரைவர் முஸ்தபா வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரில் கால் வைத்து முறுக்கிக் காத்திருப்பான்.
லீடிங் பயர்மேன் சண்முகம் அண்ணன், நான், டேனியல், முருகானந்தம், டிரைவர் முஸ்தபாவுடன் அடுத்த 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு போக முயற்சிப்போம். தகவல் தெரிந்து எவ்வளவு வேகமாக போகிறோமோ, அந்த ரெஸ்பான்ஸ் டைமிங் ரொம்ப முக்கியம். ஒருநொடி தாமதம் கூட, பல உயிர் இழக்க காரணமாகி விடும். தீயணைப்பு வண்டி வந்தால் கூட சாலையில் நம்ம ஆட்கள் நகர மாட்டார்கள். ஆனால் அசம்பாவிதம் ஆகிவிட்டால், "மணியாட்டுனா மட்டும் போதுமா, நேரத்துக்கு வரமாட்டானுங்க" என்று காதுபடவே விமர்சிப்பார்கள்.
அப்படித்தான் நாங்கள் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்த்த போது ஒரு சமயம், அன்னை சத்யா நகரில் தீ விபத்து என்று தகவல் வர, வழக்கம் போல் ஓடினோம். அது ரொம்பவும் குறுகலான ஒரு குடிசைப் பகுதி. வண்டியை சாலையிலேயே நிறுத்திவிட்டு ஹோஸ் ரீல் என்று சொல்லப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை டேனியலும், முருகானந்தனும் எடுத்துக் கொண்டுவர அவர்களுக்கு முன்னால் நான் ஓடினேன். விஷயம் இதுதான், மனைவி மீது கணவனுக்கு சந்தேகம், மண்ணெண்ணையை ஊற்றி அவளுக்கு நெருப்பு வைத்து விட்டான். அவள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதில் ஒரு குடிசையில் பற்றிய தீ மளமளவென 10 குடிசைகளுக்கு மேலாக பரவி விட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் போராடி 7 வண்டிகளை வரவழைத்து தீயை அணைத்தோம்.
தீ வைத்தவன் கலங்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தான். "என் பொண்டாட்டிய அவன்கூட பார்த்ததும் என் ஒடம்பே எப்பிடி எரிஞ்சுது தெரியுமா? என்னால தாங்கிக்கவே முடியல, உள்ள பத்திக்கிட்டு வந்துது. அது எவ்ளோ வேகமா என்னை எரிச்சுதுனா, என் பக்கத்துல இருந்த அவளை எரிக்கிற அளவுக்கு நான் எரிஞ்சுகிட்டு இருந்தேன்" என்று அமைதியாக கூறினான். போலீசார் வந்து அவனை அழைத்து செல்லும்போது பக்கத்தில் இருந்த என்னிடம் ஒரு சிகரெட் கேட்டு பற்ற வைத்துக் கொண்டு லேசாக கண்கலங்கியபடி, "இன்னோருத்தன் கூட படுத்துட்டா... அவ என் பொண்டாட்டி இல்லனு ஆயிட்டு இருக்குமா என்ன? அவசரப்பட்டுட்டேன், யார்டா தப்பு பண்ணல? அவளுக்கு புடிச்சி இருந்தது போல, எனக்கு புரிஞ்சிக்க தெரியல போல" என்று சிகரெட்டை ஆழ இழுத்து நிதானமாக மூக்கின் வழியாக புகையை கசியவிட்டபடி நடந்து சென்றான்.
அன்று இரவுதான் எனக்கும், மகேஸ்வரிக்கும் ஓரளவு சண்டையின்றி இருந்தது. திருமணமாகி 3 வருடங்கள் ஆகியிருந்தாலும், முதல் வருடம் மட்டுமே சிரித்து பேசியதாக ஞாபகம். அடுத்தடுத்த வருடங்கள் எதற்காக சண்டை என்பது இல்லை, எதற்கெடுத்தாலும் சண்டை தான். அவளது கல்லூரித் தோழன் தியாகராஜன் வருகை தான் காரணம். அவன் வருவதும், இவள் சிரிப்பதும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நான் என்ன சொம்பையா? என்று எனக்குள் ஒரு வெறி ஏற்பட்டது. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டேன். வேறு விஷயத்தை தொட்டு சண்டைக்குள் செல்வேன். சிறிது நேரத்திலேயே ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள எவ்வளவு தரம்தாழ்ந்து பேச முடியுமோ, அவ்வளவு இறங்கி விடுவோம்.
உண்மையில் மகேஸ்வரி தப்பு செய்கிறவளா? இல்லையா? என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவனுக்காக என்று, அவனுக்கு பிடிக்கும் என்று சமைப்பது, நான் வேலை முடிந்து வந்தாலும் அவர்கள் இருவரும் சேரில் கால் நீட்டி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. சமயத்தில் அவன், மகேஸ்வரியை தொட்டு பேசுவதும், கை பிடித்து இழுப்பதும் இதெல்லாம் சகஜம்தானே என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தியாகராஜனும் தப்பான நோக்கத்துடன் வருகிறானா? இயல்பாகவே அவன் அப்படி சிரித்து பேசுபவன் தானா? அதுவும் அறிய முடியவில்லை என்னால், என்னிடமும் அவன் அப்படித்தான் சதா ஜோக்கடித்து சிரித்து சிரித்து பேசுகிறான். மனதிற்குள் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தாலும் சமயத்தில் அவன் சொல்கிற ஜோக்குகளுக்கு சிரிக்காமல் இருக்கவும் முடியவில்லை.
பெரியமேட்டில் இருந்தால் தானே சிக்கல் என்று கே.கே.நகருக்கு வீடுமாற்றினேன். "எதற்காக வீடு மாற வேண்டும்" என்று மகேஸ்வரி கேட்டதற்கு, "சீக்கிரம் அசோக் பில்லர் ஸ்டேஷனில் ஒரு போஸ்டிங் காலியாகுது, அது எனக்கு கிடைத்துவிடும் அதனால்தான்" என்று கூறினேன். வீடு மாறினால் மட்டும் என்ன, இங்கும் தான் வந்து செல்ல துவங்கினான் தியாகராஜன். வாரக்கணக்கில் அவன் வராமல் இருப்பது கூட உண்டு, அப்போது மகேஸ்வரியின் குரலை கேட்பதே அரிது. நான் பேசினால் பதில் உண்டு. ஆனால் 5 நிமிடங்களுக்குப் பிறகு என்ன பேசுவது என்று இரண்டு பேருக்குமே தெரியாது. ஒன்று அமைதியாகி விடுவோம், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது சண்டை, போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
என்னால் வேலையில் கவனமாகவே இருக்க முடியில்லை. மூலக்கடை பக்கத்துல நைட்டு 11 மணிக்கு சின்ன தீ விபத்து. கொசுவத்தி சுருள் பெட்ஷீட்ல பட்டு புகைஞ்சு குடிசை தீப்பற்றிக் கொண்டது. எங்களுக்கு தகவல்வர, ஜனார்த்தனம் டீம் உடன் நாங்க அங்க போனோம். ஜனா தண்ணீர் பைப்பை இடுப்பில் வைத்த ஸ்டெடி செய்வதற்கு முன்னதாகவே நான் வால்வை திறந்து விட்டேன். நீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத ஜனா நிலைதடுமாறி கீழே விழுந்தான். அதற்கு பிறகுதான் நினைவுக்கு வந்து வால்வை மூடினேன். ஜனா, அசிங்கம் அசிங்கமா என்னை திட்டிவிட்டு பிறகு தீயை அணைத்தான். அதற்கு பிறகு பொறுமையாக "என்னா மச்சான், என்ன ஆச்சி உனக்கு, கான்சண்ட்ரேஷன் இல்லாம இருக்க, உன்ன நம்பி எப்பிடிடா ஏரியல் லேடர்-ல ஏற முடியும். இது சரியில்லை மச்சி, நீ ஸ்டேஷன் டூட்டில இருந்து ரிலீவ் ஆகு, கண்ட்ரோல் ரூமுக்கு போ, அமைதியா போன் அட்டெண்ட் பண்ணு, அதா உனக்கு செட் ஆகும்" என்று கூறினான். இதோ எழும்பூர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து இன்றோடு ஆறு மாதங்கள் ஆகிறது.
இரவுப் பணி முடிந்து காலை 6 மணிக்கு பைக்கில் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்த போது மகேஸ்வரி வாசலிலேயே படிக்கட்டில் அமர்ந்து இருந்தாள். கேட்டில் மாட்டப்பட்டிருந்த பையில் இருந்து பால் பாக்கெட்டுக்களை நான்தான் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றேன். அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்காந்து இருந்தாள். "காபி போடு, என்ன வாசல்ல ஒக்காந்து இருக்க" என்று கேட்டேன். அதற்கும் எவ்வித அசைவும் இல்லை அவளிடம்.
முகம் கழுவிக்கொண்டு டவலால் துடைத்தபடி வந்து படிக்கட்டில் அமர்ந்து, "என்னா பிரச்னை, ஏன் உம்முனு இருக்க" என்று கேட்டேன்.
"என் போன் எங்க?"
"என்ன கேட்டா?"
"நேத்து நைட்டு நீதானே கடைசியா என் போன்-ஐ கையில் எடுத்து பார்த்துட்டு இருந்த, நீ போன பின்னாடி நா வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டேன், போன காணோம்"
"ஏய், சத்தியமா நான் போன் எடுக்கல, உன் போன் எடுத்து ஒளிச்சு வைச்சு விளையாடவா போறேன்"
"அப்போ எங்க போச்சு என் போன்"
"நான் பேசுறது, பழகுறது புடிக்கலனா நேரா சொல்லு, இப்பிடி சின்னபுள்ளதனமா போன் புடுங்கி வச்சிக்காத"
எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது, " ஏய் எதையும் தெரிஞ்சிக்காம வாய வுடாத, நான் எடுக்கலனு சொல்றேன், சும்மா சும்மா என்னையே கேக்குற" என்று கூறிவிட்டு உள்ளே போய் என்னுடைய பையை கொண்டு வந்து உதறினேன். உள்ளே இருந்து தடாலென்று அவளுடைய போன் கீழே விழுந்தது.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை, "சத்தியமா இது எப்பிடி என் பைல வந்ததுனு தெரியாது, அப்படி பாக்காத" என்றேன்.
அதேநேரம் பட்பட்டென்று ஒலியுடன் ராயல் என்பீல்ட் பைக்கில் வந்து இறங்கிய தியாகராஜன், "என்ன ஆச்சு உங்க ரெண்டு பேர் போனும் வேலை செய்ல" என்று பதறினான். "மகேசுக்கு போட்டா, நாட் ரீச்சபிள்-னு வருது, ஜீவா உனக்கு போட்டா ரிங் போது நீ எடுக்க மாட்ற" என்று பொரிந்து தள்ளினான்.
நான் உள்ளே சென்று என்னுடைய போனை எடுத்து பார்க்கும் போது அது சைலண்ட் மோடில் இருந்தது. தலையில் கையை வைத்து உட்காந்து கொண்டேன்.
"என் போன்-ஐ நேத்து வேலைக்கு போகும்போது எடுத்துட்டு போய்ட்டார் தியாகு" என்று அழுத்தமாக கூறினாள் மகேஸ்வரி.
"வாய மூடு மகேஸ்வரி, சத்தியமா உன் போன் என் பையில் எப்படி வந்ததுனு தெரியாது. ஒருவேளை எனக்கு தெரியாம என் பையில் விழுந்து இருக்கலாம். அதுக்காக இப்பிடி தீர்மானமா பேசாத" என்று கூறிவிட்டு கதவை ஓங்கி உதைத்துவிட்டு உள்ளே போய் படுக்கையில் விழுந்தேன்.
வெளியே சன்னமான குரலில் இருவரும் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. பிறகு பட்பட்டென்று ஒலியுடன் ராயல் என்பீல்ட் புறப்பட்டு செல்லும் சத்தம். நெஞ்சு எரிந்தது. செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பது கொடுமையானது.
உள்ளே வந்து இடுப்பில் கை வைத்து நின்ற மகேஸ்வரி என்னை உற்றுப் பார்த்தாள். "நைட்டு நான் செத்து போற மாதிரி இருந்திருந்தா கூட உனக்கு தகவல் கொடுத்து இருக்க முடியாது. அப்படி என்னை கைதி மாதிரி நடத்த, நான் என்ன தப்பு பண்ணிட்டேன்" என்று கோபத்துடன் கேட்டாள். என்ன சொல்வது என்றே எனக்கு புரியவில்லை. நான் போன் எடுத்துட்டு போல, ஆனா என்னை சந்தேகபட்றா, அந்த குமைச்சலே மனதுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்தது, இப்போ என்கிட்ட வந்து நான் அவளை கொடுமைப்படுத்தி ஜெயில்ல தள்ளி வச்சி இருக்குற மாதிரி பேசுறா,.... பெருமூச்சு விட்டபடி கண்ணை மூடிக்கொண்டு படுத்துவிட்டேன்.
ஒருகணம் வெறுப்பாகவும், மறுகணம் நெருப்பாகவும் மாறிமாறி எண்ணங்கள் அழுத்த எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. பெரிய கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க, யார் சொல்லியும் கேட்காமல் நான் உள்ளே போக முயற்சிக்கிறேன், சண்முகம் அண்ணன், ஜனா எல்லோரும் வேண்டாம், வேண்டாம் என்று குரல் கொடுக்கிறார்கள் திரும்பி பார்க்கிறேன். சிரித்த முகத்துடன் மகேஸ்வரி கையை அசைத்து டாட்டா காண்பித்துக் கொண்டிருக்கிறாள். தூக்கவாரிப் போட தூக்கம் கலைந்து எழுந்தேன். முகமெல்லாம் வியர்த்து இருந்தது. கனவா என்று சொல்லிக்கொண்டே தலையை ஆட்டி நேரம் பார்த்தேன். 3 மணி என்று காட்டியது. காலையில் எதுவும் சாப்பிடாமல் படுத்தது வயிற்றைக் கிள்ளியது.
படுக்கையறையில் இருந்து வெளியே வர, ஹாலில் தியாகராஜன் அமர்ந்திருக்க, மகேஸ்வரி தரையில் அமர்ந்தபடி சுடிதார் தைப்பதற்காக துணிகளை பரப்பி வெட்டிக் கொண்டிருந்தாள். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர் போல, என்னைப் பார்த்ததும் ஒரே சமயத்தில் தலையை உயர்த்தினர். தியாகராஜன் சிரித்தபடி, "இனிமேல் போன் தொலைஞ்சே போனாலும் பிரச்னை இல்ல, அங்க பாருங்க" என்று ஒரு மூலையை காட்டினான். ஆமை ஓட்டு வடிவத்தில் தொலைபேசி ஒன்று இருந்தது. "லேண்ட்லைன் கனெக்ஷன், பிஎஸ்என்எல்-ல என் மச்சான் இருக்கான். ஒரே நாள்ல லைன் கொடுத்தாதா ஆச்சுனு அடிச்சு புடிச்சு கொண்டு வந்துட்டேன்ல, இனி மொபைல் சைலண்ட்ல இருந்தாலும் சரி, சுவிட்ச் ஆப் ஆனாலும் சரி, லேண்ட்லைன் இருக்குல்ல, இருக்குல்ல" என்று வடிவேல் பாணியில் சிரித்தபடி கூறினான்.
"யாருக்கு இந்த போன்?" என்று கேட்டுவிட்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தேன். "என்ன குத்தலா பேசுற? யாருக்குன்னா? என்ன அர்த்தம்?" என்று கையில் கத்திரிக்கோலுடன் நிமிர்ந்து கேட்டாள் மகேஸ்வரி. "சாப்பாடு எடுத்து வை, பசிக்குது" என்றேன். நிலைமையை இயல்பாக்க "ஜீவா, உங்க வீட்டு ரிங்டோன் கேளுங்க" என்று அவனுடைய மொபைல் போனில் இருந்து தொலைபேசிக்கு அழைத்தான்.
"ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்" "ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்" "ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்" என்று ஒலித்தது. எனக்கு மண்டைக்குள் இடி இடிப்பது போல் எரிச்சலாக இருந்தது.
"நான் அடுத்த வாரத்துல இருந்து ஸ்டேஷன் டூட்டி போகலாம்னு இருக்கேன் மகேஸ்வரி. கண்ட்ரோல் ரூம் டூட்டி பார்க்க முடியல, விடிய விடிய இந்த ண்ணங்ண்ணங் சத்தத்த தான் கேட்டுட்டு இருக்கேன். இங்கயும் வந்து கேக்க முடியாது" என்று அமைதியாக கூறினேன். மகேஸ்வரி எதுவும் பேசாமல் என்னை உற்றுப் பார்த்தாள்.
யார், யாரையோ பிடித்து ஒருவாரத்திற்குள் அசோக் பில்லர் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் வாங்கியாகிவிட்டது. எதிலிருந்தோ விடுபட்டது போல் இருந்தது. சுற்றி நிறைய பேர், எந்நேரமும் பேச்சு சத்தம். பகீர் சிரிப்பு என்று எல்லாமே சரியாகி விட்டது போல் தோன்றியது.
நெசப்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தீ பிடித்து விட்டதாக தகவல் வர, நான் உட்பட எல்லோரும் மின்னல் வேகத்தில் தயாராகி தீயணைப்பு வண்டியில் ஏறி அமர, மணியை ஒலிக்க விட்டபடி வண்டி வேகம் எடுத்தது. டிங், டிங்,டிங்,டிங்,டிங்,டிங்,டிங் என்று சைரன் ஒலிக்க "ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்" "ண்ணங்ண்ணங், ண்ணங்ண்ணங்"என்று வீட்டு தொலைபேசி ஒலிதான் காதில் விழுந்தது. தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நெசப்பாக்கம் ஓட்டல் வாசலில் வண்டி நிற்க, தாவி குதித்து ஓடினேன். "டேய், டேய் நில்லுடா நில்லுடா "என்று பின்னால் குரல்கள் கேட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.