அதிகாலை நேரத்தில்தான் அந்த கனவு வந்தது. கண்ணுக்கு மிக நெருக்கத்தில் கம்பளி பூச்சி ஒன்று என்னை உற்றுப் பார்த்தது. "ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா? என்கிட்ட வரமாட்டியா? என்னை தொட்டு கொஞ்ச மாட்டியா? நாம ஒண்ணு சேர்ந்தா என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?" என்று கேட்டது. கம்பளியின் உருவத்தில் நான் ஏற்கனவே அறிந்த குரல். கண்விழித்து பார்த்த போது பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் பறப்பது போல் படுத்திருந்தான் அண்ணா. தாகமாக இருந்தது. எழுந்து போய் பிரிட்ஜை திறந்து தண்ணீர் குடித்தேன். அப்படியே சம்மணமிட்டு படுக்கையில் அமர்ந்தேன். தலை பாரமாக இருந்தது. தூக்கம் வரும் என்று தோன்றவில்லை.
நேரம் செல்ல செல்ல அறைக்குள் புழுக்கம் தாங்க முடியவில்லை. மெதுவாக எழுந்து சத்தமிடாமல் கதவைத் திறந்து புழக்கடைக்கு சென்றதும் குளிர்காற்று காதுக்குள் கூச்சத்தை ஏற்படுத்தியது. இருட்டில் சட்டென்று கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மெல்லிய வரிவடிங்களாக மரங்களும், செடிகளும் தெரிய ஆரம்பித்து கண்களுக்கு பழகியது. நேராக முருங்கை மரத்தடியில் சென்றபோது அடித்தண்டு அருகே ஏராளமான கம்பளி பூச்சிகள் அசையாமல் மரத்திற்கு குறுந்தாடி வைத்தது போல் முடிகள் பிசைந்தநிலையில் ஒட்டியிருந்தன. விலகியிருந்த தூக்கம் கண்களை தேடிவர அப்படியே மரத்தடியில் தலைவைத்து படுத்தேன். நல்ல தூக்கம். முகத்திற்கு நேராக வந்த கம்பளி, இப்போது சிரித்த முகத்துடன் "இதுதான் உள்ளவர சரியான நேரம், வந்துட்றேன்" என்று சொல்லியபடியே தலைக்குள் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து வாகாக அமர்ந்தது.
யாரோ என்னை கடலில் தூக்கி போடுகிறார்கள், தண்ணீரில் மூழ்குகிறேன், மூச்சு முட்டுகிறது, யாராவது காப்பாற்றுங்கள் என்று கையை தூக்கியபடியே கத்தியபோது முழிப்பு வந்தது. கையில் பக்கெட் மற்றும் துடைப்பத்துடன் அம்மா நின்றிருந்தார்கள். "அறிவுகெட்ட மூதேவி என்ன பழக்கம் இது, நடுராத்திரில வீட்ல இருந்து வெளியவந்து படுக்குறது, படுத்தியே, மொட்ட மாடிக்காச்சும் போய் இருக்கலாம்ல, முருங்கை மரத்துக்கு கீழ வெறுந்தரையில படுத்து இருக்க, உடம்பு என்னத்துக்கு ஆகுறது, அதுவும் தலைக்கு மேலே கம்பளிப் பூச்சிங்க அவ்ளோ இருக்கு, அங்க போய் படுத்து இருக்க" என்று திட்டினார். பக்கெட்டில் இருந்த தண்ணீரைத் தான் முகத்தில் கொட்டி இருக்கிறார்கள் என்று புரிய சிறிது நேரம் பிடித்தது. தலைக்கு மேலே கம்பளிப் பூச்சிங்க, அதுங்க மேலே தண்ணி கொட்டி இருக்குமோ என்று பதறி திரும்பி பார்த்தேன். நாலைந்து பூச்சிகள் சுருண்டு தரையில் விழுந்திருக்க, வேறுசில உடலை உருட்டி உருட்டி முன்னேறி மேலே சென்று கொண்டிருந்தன.
எழுந்து தலையை உதறி லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். "ரா பகலுனு இல்லாம விடிய விடிய ஊர சுத்துறது, யார் கூட பழகணும்னு வரமொற இல்லாம சேர்றது, கொட்ட கொட்ட கண்முழிச்சி கண்ணு கொள்ளிக்கண்ணு மாதிரி செவந்து போய் வந்து நிக்குறது, இப்போ என்னடான்னா நடுசாமத்துல பேய் மாதிரி முருங்கை மரத்துக்கு கீழ வந்து படுத்துக்குறது, ஐயோ எனக்குனு வந்து பொறந்து இருக்குதுங்களே.... ப்ளஸ் டூ படிக்கிறோமே, உருப்படியா படிச்சு பாசாகணும்னு எண்ணம் இருக்கா, எந்நேரமும் குட்டி சுவத்துல ஒக்காந்துகிட்டு ஆகாசத்த மொறச்சி பாக்குறது, இல்லயா, கிணத்தடியில ஒக்காந்துகிட்டு தண்ணிய பாக்குறது, எந்த கருமாந்திரம் புடிச்ச காத்து கருப்பு வந்து ஏறிக்கிச்சோ தெரியல" என்று புலம்பியபடியே வாசலைக் கூட்டினாள் அம்மா. உள்ளே சென்று பார்த்த போது அப்போதும் தூக்கத்தில் பறந்து கொண்டிருந்தான் அண்ணா. முகத்தை கழுவிக் கொண்டு இயற்பியல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்ட மாடிக்கு சென்றேன். வானத்தில் மேகங்கள் அலைவது தெரிந்தது. சற்றுநேரத்தில் ஒவ்வொரு மேகமும், ஒவ்வொரு கம்பளி பூச்சிகளாக மாறி மெதுவாக நகரத் துவங்கின. இதைக்கண்ட நேரத்தில் உடம்பில் ஒரு பதைபதைப்பு வந்து ஒட்டிக் கொண்டது. வானம் முழுவதும் கம்பளிப் பூச்சிகள். பெரிதும், சிறிதுமாய் நகர்ந்து நகர்ந்து சிரித்தபடியே சென்று கொண்டிருந்தன.
மறுநாள் காலையும் சொல்லி வைத்தார்போல் அதே விடியற்காலை பொழுதில் கூவி அழைத்தது கம்பளி. இன்னும் சொல்லப்போனால் தூங்காமல் அதற்காக விழித்திருந்தேன். மெதுவாக எழுந்து வந்து முருங்கை மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் நெற்றி மீது ஒன்று ஏறிச் செல்ல முழிப்பு வந்து திரும்பி முருங்கை மரத்தடியில் படுத்து தலையை உயர்த்தி தண்டில் ஊர்ந்து கொண்டிருந்த கம்பளிப் பூச்சியை பார்த்தேன். உடல் முழுவதும் மயிர்போர்த்தி உள்ளுக்குள் ஏதோ ஒன்று மென்மையாக அசைய, அமைதியாக தளும்பும் நீர்போல் உடல் அலைபோல் ஏறி இறங்கி முன்னேறிக் கொண்டிருந்தது. தலைக்கு சற்று அருகிலேயே கொத்தாக ஒன்றன் மீது ஒன்றாக உள்ளங்கை அளவுக்கு 20-க்கும் மேற்பட்ட கம்பளிகள் நெருக்கியடித்து ஒட்டிக் கொண்டிருந்தன. இடப்பிரச்னையா? வாழ்க்கை முறையே அதுதானா என்று தெரியவில்லை. உடலின் மீது சற்று நீட்டியபடி சில முடிகள் பொன்கம்பி போல் ஒளிர்ந்தது. கீழ்தண்டில் இருந்து வளைந்து மேலேறி கிளை பிரியும் இடத்தில் மற்றொரு கம்பளிக் குடும்பம் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தன. அந்த வீட்டிற்கு சென்ற வழித்தடத்தில் மிக மெல்லிய நீர்வழிந்தது போன்று சற்று வெளிறி காணப்பட்டது. வழியை கண்டுபிடிக்க ஏதேனும் திரவத்தை பீய்ச்சியபடி செல்கிறதா? தெரியவில்லை. நேரம் போனதே தெரியவில்லை. ஆத்திரத்துடன் அம்மா கத்திக்கொண்டு வருவது கேட்டது.
"ஏண்டா சொல்ல சொல்ல எப்போ பார்த்தாலும் முருங்கை மரத்தாண்டையே பழியா கெடக்குற? உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்பிடி பண்ற" என்று கேட்டபடி அருகில் வந்த அம்மா பதறிப்போய், "டேய், டேய், முதுகு பூரா கம்பளிப் பூச்சிடா, இவ்ளோ ஏறியது கூட தெரியாம கெடந்து உருள்ற.. ஐயோ" என்று சொல்லியபடியே வீட்டிற்குள் ஓடிச்சென்று பழைய துணியை எடுத்து வந்து என் உடம்பு முழுவதும் உதறினாள். "இவ்ளோ ஏறி இருக்கு, இதுகூட தெரியாம எப்படிடா படுத்து இருந்த" என்று மீண்டும் பதற்றப்பட்ட அம்மா, "இந்த கம்பளிப் பூச்சிங்களுக்கு ஒரு வழி பண்றேன்" என்று கூறிவிட்டு அருகில் இருந்த சிறிய தொரட்டிக் குச்சியின் முனையில் அந்த பழைய துணியை கட்டினாள். மீண்டும் உள்ளே சென்று தீப்பெட்டி எடுத்து வந்து அந்த துணியை கொளுத்த, மெல்ல மெல்ல புகைந்து சுருள் சுருளாக புகையை விட்டபடி சிறிது நேரத்தில் நன்றாக திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. என் கையை பிடித்து இழுத்து கிணற்றுப் பக்கமாக தள்ளிவிட்டு முருங்கை மரத்தின் அடிப்பாகத்தில் திரண்டிருந்த கம்பளிப் பூச்சிகளின் மீது தீயை காட்டினாள் அம்மா. தீ பட்ட வெப்பத்தில் கம்பளி பூச்சிகள் சுருண்டு விழுந்தன. ஒன்றிரண்டு நகர முயற்சிக்க அவையும் அடுத்த நொடியே கருகி சரிந்தன. முடிபொசுங்கும் நாற்றமும், கூடவே புளுத்துப் போன நெடியும் உண்டானது. "நாசமா போகட்டும்" என்று திட்டியபடியே தரையில் விழுந்த கம்பளிகள் மீது மீண்டும் ஒருமுறை நெருப்பைக் காட்டினாள். என் பக்கம் திரும்பி "இன்னொரு தடவை இங்க வந்து நில்லு, உன் மூஞ்சிய தீய்ச்சி விட்டுர்றேன்" என்று முகத்திற்கு நேராக கொள்ளிக்கட்டையை காண்பித்து எச்சரித்து சென்றார்.
கீழே கருகி கிடந்த கம்பளிகளை பார்த்தேன். எனக்கு உதவாமல் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தாயே என்று கேட்பது போல் இருந்தது. சுற்றுச்சுவர் ஓரமாக சரிந்து கிடந்த கிளைஒன்றில் கொத்தாக இருந்தன கம்பளிகள். அதனை அப்படியே கையோடு அள்ளி அடித்தண்டில் அம்மா நெருப்பு காண்பித்த இடத்திற்கு பக்கத்தில் வைத்தேன். இப்போது அம்மா செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தது போல் உணர்ந்தேன். அதுவும் போதவில்லை.
கம்பளி பூச்சியை பிரிய மனமில்லை. எங்கு சென்றாலும் கம்பளி பூச்சியை எப்படி உடன் அழைத்து செல்வது. கம்பளி பூச்சியை பிடித்து பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டாகி விட்டது. அதற்கு பிறகுதான் மனத்துக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அன்று நாள் முழுவதும் பேண்ட் பாக்கெட்டை தடவிக் கொண்டே இருந்தான். என்னமோ உலகிற்கு தெரியாமல் எதையோ சாதித்து விட்டது போல இருந்தது. யாருக்கும் தெரியாமல் அடிக்கடி கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டான். மாலை வீடு திரும்பி மறைந்து மறைந்து மரத்துக்கு பின்னால் சென்று பேண்டை கழட்டி பார்த்த போது தொடை முழுவதும் கண்டுகண்டாக வீங்கி இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் நைந்து ஒட்டிப்போய் கெட்ட நாத்ததுடன் தீற்றலாக இருந்தது கம்பளி. தொடையின் வீக்கத்தை தடவிப் பார்த்த போது இதமாக இருந்தது. நுணுக்கமாக கவனித்தபோது கம்பளியே தொடைக்குள் இடமாற்றம் செய்து கொண்டது போலவும், தன்னுடைய உடலை உதறி உயிரோடு தொடைக்குள் புகுந்துவிட்டது போலவும் இருந்தது. அது நினைத்த மாத்திரத்தில் அந்த வீக்கம் இருந்த பகுதி மெல்ல அசைந்தது போல் தெரிந்தது. மெதுவாக தடவிக்கொடுக்க அது வழக்கம்போல் உடலை அலையென மாற்றி ஊர்ந்து ஊர்ந்து தொடை முழுவதும் நகர்வது போல் இருந்தது. இடுப்பு வரை ஆடையை நெகிழ்த்தி கால்நீட்டி அமர்ந்து தொடையின் வீக்கத்தை கம்பளியின் நகர்வை தடவிதடவி பார்க்க கண்கள் சொக்கியது.
அப்போது அந்த பக்கமாக வந்த பக்கத்து வீட்டு மேகலா அக்கா, அவனிருந்த நிலையைப் பார்த்து "சீய்ய்ய்ய்" என்ற சத்தத்துடன் கையில் இருந்த பாத்திரத்தை "டங்டங்" என்ற ஒலியோடு கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிக்க திடுக்கென்று தூக்கிவாரிப் போட்டது. "பதற்றப்படாதே" என்று கம்பளியை தடவிக் கொடுத்துவிட்டு முட்டிவரை இறக்கிவிட்டிருந்த ஆடைகளை போட்டுக் கொண்டு நிமிர்ந்தபோது அம்மா, அப்பா, அண்ணா எல்லாரும் வந்துவிட்டிருந்தார்கள்.
"உன் புள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் தெரியுமா? சீ, இந்த பக்கம் பொம்பளங்க நடமாட முடியல, எந்நேரமும் பேண்டை இறக்கிவிட்டுக்கிட்டு காமிச்சிக்கிட்டு திரியுறான். வூட்டுக்குள்ளே அவுத்து போட்டு ஆட்டம் போடச் சொல்லுங்க, இப்பிடி ரோட்டுல திரிஞ்சான், செவுள் பிஞ்சிடும்" என்று கையை ஆட்டி ஆட்டி பேசினாள்.
அப்பாவுக்கு ஆத்திரம் தலைக்கேற கன்னத்தில் அறைந்தார். காதுக்குள் இனிமையான ஒரு ஒலி எழுந்து அடங்க, அதை கேட்டபடியே விழுந்தேன். அம்மா தலையில் அடித்துக் கொண்டு அழ, அப்பாவை அண்ணன் தடுக்க முயன்றான். என் பக்கம் வந்த அண்ணன் "அறிவுகெட்ட நாயே, ஏண்டா இப்பிடி பண்ற, பண்றதையாச்சும் ஒளிவுமறைவா பண்ண தெரியாதாடா பன்னி" என்று திட்டியபடியே அக்குளுக்குள் கையை கொடுத்து தூக்கி நிறுத்தினான். காதுக்குள் அந்த ஒலி மெல்ல அடங்க ஆரம்பித்தது. "ஐயோ, நன்றாக இருந்ததே", அதனை மீண்டும் கேட்க வேண்டும் போல் இருந்தது. அப்பாவை பார்த்தேன். "திருட்டு கம்னாட்டி பண்றதையும் பண்ணிட்டு எப்பிடி உத்துப் பாக்குது பாரு, இதையெல்லாம் வெட்டிப் போடணும்" என்று கொந்தளித்தப்படி பாய்ந்து வந்தார். அவர் அடிப்பதற்குள் அண்ணா தடுத்து விட்டான். அடிபட்ட பிறகு காதுக்குள் கேட்க இருந்த ரீங்காரத்தை கேட்க விடாமல் தடுத்து விட்டானே என்று அண்ணன் மேல் கோவமாக வந்தது.
இரண்டு நாட்கள் மிகுந்த கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டேன். எங்கு சென்றாலும் யாரோ ஒருவர் என்னை உற்றுப்பார்த்தபடி நிற்பதும், பின்னால் வருவதும் என்று எனக்கு ஏகப்பட்ட மரியாதை. ஆனால் மெல்ல மெல்ல உடலுக்குள் ஒரு பதைபதைப்பு ஊற ஆரம்பித்தது. தொடையை மெதுவாக சொறிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. கம்பளி உயிர்வாழ்ந்த தடிமன் மறைய மறைய பதற்றம் சேர்ந்து கொண்டது. கம்பளியை தொடை முழுவதும் கைகளால் சொறிந்து சொறிந்து தேட ஆரம்பித்தேன். ஏனோ அதற்கான தடமே தெரியவில்லை. ரத்தத்திற்குள் கலந்து விட்டிருக்குமோ? ஐயோ அதற்கு மூச்சு முட்டினால் என்ன செய்வது, ரத்தத்தை வடித்துவிட்டால் அது சுலபமாக ஊர்ந்து செல்லும் அல்லவா? அந்த நினைப்பு தோன்றியவுடன் ஆசுவாசம் ஏற்பட்டது. அப்பாவின் சேவிங் முறையில் புதிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. பிளேடுகளைக் கொண்டு தான் இன்னமும் சேவிங் செய்கிறார். அதில் ஒன்றை எடுத்து கட்டிலில் கால்நீட்டி அமர்ந்து கம்பளி மறைந்த இடத்தை அழுந்த தேய்த்தேன். இந்த வழியாக மேலே சென்று இருக்குமா? கீழ்பக்கம் ஊர்ந்து இருக்குமா? யோசிக்க முடியவில்லை. சரி, எந்த பக்கம் போனால் என்ன, ரத்தத்தில் அது மூச்சுத் திணறாமல் இருக்க கொஞ்சம் ரத்தத்தை வடியவிட்டு பார்ப்போம் என்று பிளேடின் தொடையின் மீது வைத்து லேசாக ஒரு கீறு கீறினேன். குபுக்கென்று ரத்தம் கொப்பளிக்க சதை லேசாக பிளந்தது.
"டேய், டேய் பைத்தியக்காரா என்னடா பண்ற, ஐயயோ தொடையை ஏண்டா இப்பிடி போட்டு பொளந்து வச்சி இருக்க" என்று கத்தியபடியே அண்ணன் ஓடிவந்தான். ஹா நான் நிமிர்ந்து பார்த்தேன். அவனது முகம் தெளிவாக தெரியவில்லை. நீர்ப்பரப்பில் ஆடிஆடிக் காட்டும் பிம்பம் போல் அசைந்து அசைந்து தெரிந்தது. "டேய், முட்டாப் பயலே இப்பிடி யாராச்சும் தொடையை கீறிப்பாங்களா? உன் சத்தத்தை கேட்டு ஓடி வர்றேன். நீ என்னடான்னா நீயே கீறிக்கிட்டு நீயே கத்துற, ஐயோ அப்பா அப்பா வாங்களேன்" என்று அண்ணன் அலறும் சத்தம் கேட்டது. கையில் இருந்த பிளேடை பிடுங்கி எறிந்து விட்டு ஏதோ ஒரு பழைய துணியை எடுத்து தொடையின் மீது வைத்து அழுத்தினான்.
கண்விழித்து பார்த்தபோது புதிய இடமாக இருந்தது. மின்விசிறி ஓட பச்சைநிற பெட்ஷீட் போர்த்தப்பட்ட கட்டிலில் படுத்து இருந்தேன். எழ முயற்சிக்க இடதுகால் அசைக்கமுடியாதபடி கனமாக தெரிந்தது. தலையை உயர்த்தி காலைப் பார்த்தேன். தொடையில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. ஐயோ கம்பளிக்கு மூச்சு முட்டுமே என்ற எண்ணம் தோன்றியது. வலது கையில் ஊசிக் குத்தப்பட்டு அதன்வழியே மெல்லிய குழாய் ஒன்று போடப்பட்டு ஏதோ ஒரு திரவம் சொட்டிக் கொண்டிருந்தது. தலையை தூக்கியபோது பின்னால் இருந்து யாரோ இழுப்பது போல் மீண்டும் கழுத்து தலையணைக்குள்ளேயே விழுந்தது. கதவைத் திறந்து கொண்டு அம்மா நடந்து வருவதும், படுக்கையில் அமர்வதும் லேசாக தெரிந்தது.
"ஏண்டா தம்பி இப்பிடியெல்லாம் பண்ற, என்ன ஆச்சு உனக்கு, வரவர பயமுறுத்துற, பார்த்து பார்த்து வளர்த்த உடம்புயா இது, ப்ளேடால பாளம் பாளமா கீறி விட்டுக்கிட்டியே ஐயா, நாங்க என்ன பாவம் பண்ணோம். இப்பிடிலா பண்ணலாமா தம்பி.. " என்று சொல்லியபடி குலுங்கி குலுங்கி அழுதார். அப்படியே கண்ணசந்து தூங்கினேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. கடக் கடக் என்று சத்தம் கேட்டு விழித்தேன். மின்விசிறியில் இருந்து தான் அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றி ஏராளமானோர் படுக்கையில் சுருண்டும், புரண்டும், கவிழ்ந்தும் படுத்துக் கொண்டிருந்தனர். பார்க்க, பார்க்க அவர்கள் கம்பளிப் பூச்சிகளாக தெரிந்தனர். அந்த எண்ணமே சற்று ஆறுதல் தந்தது. விடியற்காலை 4 மணி என்று சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் நேரம் காட்டியது. இப்போது எழுந்து வெளியில் போனால் எங்காவது முருங்கை மரம் இருக்குமா? வழக்கமாக மருத்துவமனைகளில் வேப்ப மரம் பார்த்திருக்கிறேன், அசோக மரங்கள் கூட இருந்ததுண்டு, முருங்கை... யோசிக்க யோசிக்க அலுப்பாக இருந்தது. கால்நீட்டி அமர்ந்து கடிகாரத்தைப் பார்க்க கம்பளிகள் மெதுவாக ஊர்ந்து நேரம் காட்டின.
இரவு நேரத்தில் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் ஆயா, காலையில் அப்பா வந்ததும், " ஏம்பா உன் புள்ளையாண்டான உடனே பாண்டிமடமோ, ஏர்வாடியோ எங்கயாச்சும் கூட்டிட்டு போ.. அப்போ தான் சரியாகும்.. விடிய விடிய கடிகாரத்தை உத்துப் பாத்துக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கு. படு, படுனு நூறுமுறை சொல்லிட்டேன், நான் சொல்றது கூட அது காதுல கேக்கல, அது வேற ஒலகத்துல இருக்குது" என்று கண்கள் விரிய கைகள் நடுங்க கூறிக்கொண்டு இருந்தார். "இதோ அந்த பாட்டி பேசுவது என் காதில் விழதானே செய்கிறது, அப்புறம் என்ன கேக்கலனு புகார் பண்ணுது கிழவி" என்று கோபம் வந்தது. அப்பா தொய்ந்து போய் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார். கையைப் பிடித்து தோளைத் தொட்டு கன்னத்தை திருப்பி கண்களைப் பார்த்து "அப்பா எனக்கு ஒண்ணுமில்ல, கவலைப்படாதப்பா, வீட்டுக்கு போலாம்னு சொல்லலாம் போல இருந்தது. ஆனா என்னமோ கிட்ட போகவே முடியல."
மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், டெஸ்ட்டுகள் என ஏதேதோ எடுத்தார்கள், கொடுத்தார்கள். எல்லாவற்றுக்கும் அமைதியாகத் தான் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என்னருகில் வர நர்ஸ்கள் பயந்தார்கள். அவர்கள் பயம் எனக்கு சற்று பெருமையாக இருந்தது. அதனாலேயே கண்களை உருட்டி உற்றுப் பார்த்தேன். அதிலும் சந்தனப் பொட்டு வைத்திருந்த குண்டு நர்ஸ், எண்ட குருவாயூரப்பா என்று மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டே தான் கிட்டே வந்தாள். டாக்டர் வந்தார். கண்களை திற என்றார், திறந்தேன். நாக்கை நீட்டு என்றார் நீட்டினேன். உன் பேர் என்ன? உனக்கு என்ன பண்ணுது? எப்பிடி இருக்க? சாப்பிட்டியா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் பதில் தெரிந்தது ஆனால் சொல்ல தோன்றவில்லை. அப்படியே திரும்பி தலையணைக்குள் முகம் புதைத்து இருளுக்குள் புகுந்து கொண்டேன். எங்கும் இருட்டு, குப்-பென்று அடர்த்தியான இருட்டு. மெதுவாக இருட்டுக்குள் இருட்டு ஊர்ந்து ஊர்ந்து வந்தது. சிறிய இருட்டு, பெரிய இருட்டு, நானும் அதன் அருகில் ஊர்ந்து சென்றேன். மூன்று கண்களும் இருட்டில் சந்தித்துக் கொண்டன. நல்ல இருட்டு, இருட்டு நல்லது தானே என்று தோன்றியது.
தூரத்தில் அப்பா என் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். "அப்பா, கையை விடுங்க, வலிக்குது, ஏன் இப்பிடி கையை பிச்சி எடுக்குற மாதிரி இழுக்கிறீங்க" என்று கத்தினேன். "டாக்டர், டாக்டர் என் புள்ளைக்கு என்ன ஆச்சு, ஏன் இப்பிடி பாம்பு மாதிரி நெளியுறான், வயித்து வலியா? சொல்லத் தெரியலயா? ஐயோ பாக்க சகிக்கிலயே? ஐயோ என் புள்ள, என் புள்ள" என்று கத்திக்கொண்டே அவனைத் தூக்க முயற்சித்தார். உடல் ஏதோ ஒரு திசையில் சரிந்து விழுந்தது. எடை முன்னுக்குப் பின் உருண்டதால் அவர் ஒருவரால் அவனை தூக்க முடியவில்லை. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வார்டில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை தரையில் இருந்து தூக்கி கட்டிலில் போட்டு கையையும், காலையும் பிடித்து அமுக்கினர்.
நிமிர்ந்து பார்த்தபோது டாக்டர் கூட வெலவெலத்து போயிருந்தது தெரியவந்தது. "விடுங்கடா நான் பாட்டுக்கு அமைதியா இருக்கேன், என்னைய புடிச்சி அமுக்கி விட்டுட்டு நீங்க பயந்து போய் நிக்கிறீங்க" என்று திட்டினேன். ஆனால் ஏனோ நான் பேசுவதற்கு அவர்களிடம் பதில் இல்லை. கண்களை சுருக்கி என்னை உற்றுப் பார்த்தார்கள். "டாக்டர், என் புள்ள என்ன பேசுறான், வார்த்தையே வரலியே, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம வெறும் சத்தமா வருதே என்ன ஆச்சு டாக்டர்" என்று அப்பா டாக்டரின் கையை பிடித்து கதறிக் கொண்டிருந்தார். "அப்பா எனக்கு ஒண்ணும் இல்ல, வீட்டுக்கு போனா சரியாயிடும், முருங்கை மரத்தாண்ட படுத்தா சரியாயிடும், இது புரியாம அவர்கிட்ட போய் பேசிக்கிட்டு" என்று சொன்னேன். அவருக்கு கேட்கவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது அம்மா, அண்ணா, பக்கத்து வீட்டு மேகலா அக்கா, அப்புறம் சித்தப்பா என்று கட்டிலைச் சுற்றி நிறையப் பேர் நின்றிருந்தார்கள். அம்மா அழுதுகொண்டிருக்க, மேகலா அக்கா தோளைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அண்ணன் குண்டு நர்சையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா தலையில் கை வைத்தபடி கீழே உட்கார்ந்து இருக்க, சித்தப்பா தான் டாக்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஒரே வெறுப்பாக இருந்தது. கடிகாரத்தைப் பார்க்க அவை மெதுவாக ஊர்ந்து செல்ல துவங்கின. அப்படியே திரும்பி மேகலா அக்காவை பார்க்கும் போது புடவையில் சுருள் சுருளாக சுருண்டு படுத்திருந்தன கம்பளிகள். "அக்கா வரும்போது முருங்கை மரத்துக்கு போயிட்டு தான் வந்து இருக்காங்க, எனக்குனு அங்க இருந்து எடுத்து வந்து இருக்காங்க" என்று எண்ணிக் கொண்டே கைநீட்டி சுருண்டு அமர்ந்திருந்த கம்பளிகளை அள்ளினேன்.
"ஐயயோ, ஐயயோ" என்று அலறியபடியே மேகலா அக்கா என் கையை தட்டிவிட முயன்றார். கீழே அமர்ந்திருந்த அப்பா நிமிர்ந்து பார்த்து என் கையை இழுத்தார். அண்ணன் ஒருபக்கம் இழுக்க அம்மா நடுவில் புகுந்து தடுத்தார். "நான் என்ன பண்ணிட்டேனு இவ்ளோ பதர்றாங்க, எனக்கு ஒண்ணுமே புரியல, நான் கம்பளியை எடுத்துட்டு அமைதியா போய்ட போறேன்" என்று சொல்லிக் கொண்டேன். அப்போது சித்தப்பா என் இடுப்பை பிடித்து பின்னால் வேகமாக இழுக்க என் கையோடு மேகலா அக்காவின் புடவை வந்தது. அக்கா கத்தியபடியே அப்படியே உட்கார்ந்து விட, அம்மா பெட்ஷீட்டை எடுத்து அக்காவின் மீது போர்த்தினார். அதற்குள் நான் புடவையில் இருந்த சுருள் கம்பளிகளை எடுத்துக் கொண்டேன். பிறகு என் கையில் இருந்த புடவையை உருவி அக்காவிடம் கொடுக்க, அதனை எடுத்துக் கொண்டு குடுகுடுவென்று துணிதடுப்புக்கு பின்னால் சென்றார் மேகலா அக்கா.
சிறிது நேரம் கழித்து கண்களை துடைத்துக் கொண்டு அம்மாவிடம் வந்த மேகலா அக்கா, "நான் சொல்றேனு தப்பா நெனக்காதீங்க, கொஞ்ச நாளாவே இவன் சரியில்ல, என்னன்மோ பண்றானு நான் சொல்லிட்டு தான் இருந்தேன். நீங்கதா கவனிக்கவே இல்லை. இன்னிக்கு இப்பிடி வந்து நிக்குறான், தயவுசெஞ்சி இப்போவாச்சும் ஏதாச்சும் சாமியார் கிட்ட காமிச்சி, சரிபண்ற வேலைய பாருங்க" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சத்தம் கேட்டு வந்த டாக்டர், இடது தோள்பட்டையில் ஊசியை சொருக, தீய்க்கப்பட்ட கம்பளிகள் சுருள் சுருளாக கண்களுக்குள் வந்து நின்றன.
கண்விழித்து பார்த்தபோது பெரிய பெரிய முருங்கை மரங்கள், அப்புறம் பெயர் தெரியாத ஏராளமான மரங்கள் தடிமன் தடிமனாக நின்று கொண்டிருந்தன. ஓடிச்சென்று முருங்கை மரத்தடியில் பார்த்தேன். கொத்தாக கம்பளிகள் அப்பியிருந்தது. அப்படியே சரிந்து மண்ணில் படுத்து கண்ணோடு கண் நெருக்கி பார்த்தேன். "அன்று கனவில் வந்தானே, அவனே தான். அவன் இங்கு தான் இருக்கிறான். டேய் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தியா" என்று கூவினேன். தோற்றுவிட்டது போல் பொய்க்கோபம் காட்டி உடல் முறுக்கி வளைத்து வளைத்து மேலே சென்றான். "திரும்பி வருவான் அப்போது பேசிக் கொள்ளலாம்" என்று கன்னத்தில் கைவைத்து அங்கேயே அமர்ந்து விட்டேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.