Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : வளையல்

ஜாதியம் எந்த விசாரணையும் இல்லாமல் தன்னைவிட தாழ்ந்த சமூகம் மீது எந்த பழியையும் போடும் என்பதை ‘வளையல்’ கதையின் மூலம் விவரித்திருக்கிறார், அரவிந்த்குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
valayal - sunday special short story

அரவிந்த் குமார்

Advertisment

அனகாபுத்தூர் தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் சுழித்து ஓடியது. செம்மண் நிறத்தில் நுரைத்தும், கொப்பளித்தும் ஓடியதை பார்க்கும் போது சற்று பயம் கூட வந்தது. இந்த ஆற்றிலா இவ்வளவு நாள் குளித்தோம். இன்று இப்படி அச்சுறுத்துகிறதே என்று நெஞ்சு ஒரு நிமிடம் துணுக்குற்றது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அகன்று வெள்ளம் குபுக் குபுக்கென்று நொடிக்கொருதரம் அதிகரித்த வண்ணம் இருந்தது. கரையின் இந்த புறம் அனகாபுத்தூர், அந்தப் பகுதி குன்றத்தூர். இடைபட்ட தரைப்பாலம் தான் இரண்டையும் இணைக்கும் ஒரே வழித்தடம். வெயில் காலத்தில் கிழவனின் கோவணம் போல ஒற்றை வகிடு போல மெல்லிய நீர்க்கோடாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நீர் ஓடும். அடையாறு என்று சொன்னாலும் கூட செம்பரம்பாக்கம் ஏரியோட உபரி தண்ணீர் தான் இதன் ஆதாரம். கோடையில் ஏரியே வறண்டு விடும், அடையாறும் அப்படியே.

பள்ளிக்கு போவதாய் தான் பேர், ஆனால் நாங்கள் எல்லாரும் சங்கமிப்பது அனகாபுத்தூர் தரைப்பாலம் அடியில் தான். கன்னுக்குட்டி தாராளமாய் போய் வருகிற அளவுக்கு மூன்று குழாய்கள் பாலத்திற்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கும். அதற்கு மேல் பாலம். தண்ணீர் அந்த குழாய்கள் வழியாக தான் பாலத்திற்கு அடியில் வரும். மழைக்காலத்தில் மட்டும் பாலம் மறையும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுக்கும். எங்கிருந்தோ என்னனென்னவோ குப்பைகள் அடித்துக் கொண்டு வெள்ளத்தில் புரண்டும், கவிழ்ந்தும் சென்று கொண்டிருக்கும். மரபெஞ்சுகள், பிளாஸ்டிக் சேர்கள் என்று ஏதோதோ பொருட்கள் ஆற்றின் நடுப்பகுதியில் மிதந்து வரும். கரையில் இருப்பவர்கள் வலையை முடிந்தவரை வீசி கையில் கிடைத்த பொருட்களை வாரி சுருட்டி செல்வார்கள்.

எங்கள் காலடியில் தண்ணீர் அலையென விசிறி விசிறி அடித்தது. ஒரு பாய், ரெண்டு சிறிய உடைந்த பானைகள் என்று எங்கள் பக்கம் சில பொருட்கள் சிதறிக் கிடந்தன. வழக்கமாக அதனை எடுத்துக் கொண்டு சிரிப்பதும், பங்கு பிரிப்பதில் சண்டை வருவதும் வாடிக்கை. ஆனால் இன்று எதையும் தொடக்கூட இல்லை. வெள்ளக்காலங்களில் வரும் குதூகலம் கூட இல்லை. நான், ப்ரியா, மெஹருன்னிசா மட்டும் நின்னுக்கிட்டு இருந்தோம். நெஞ்சு வெடித்து விட்டது. இந்த தண்ணி தானே, இல்லை, இல்லை இங்க சுத்தி நின்னுகிட்டு நிக்குறவங்க தானே எங்க மஞ்சுளாவ கொன்னுட்டாங்க.. இதோ இன்னிக்கு தண்ணில மெதந்து வர்ற இந்த பொருட்களை வாரி வாரி எடுத்துக்குற இவங்க தானே அன்னிக்கு எங்க மஞ்சுளாவை திருடினு சொன்னாங்க.

அனகாபுத்தூர் கணேஷ் தியேட்டர் பக்கத்துல இருக்குற சரஸ்வதி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தான் நாங்க படிக்கிறோம்னு போய் ஒக்காந்த இடம். ஆனா வகுப்புல இருந்தததை விட பக்கத்துல இருக்குற அய்யனாய் சிலைல தான் தொங்கிட்டு இருப்போம். ஐந்தாம் வகுப்பு அ பிரிவு. வெத்தலை வாத்தியார் தான் எங்களுக்கு பிடிச்ச வாத்தியாரு. எப்போதும் தூங்கிட்டே இருப்பாரு. வடையும், டீயும் வாங்கிட்டு வர்ற சொல்லுவாரு, யாரு வாங்கிட்டு வர்றாங்களோ அவங்களுக்கு வடையில் ஒரு துண்டு இனாம். அதுக்கு அடிச்சுக்குவோம் பாரு, அப்படி அடிச்சுக்குவோம். ஆனா, எப்போதும் ஜெயிக்குறது மஞ்சுளா தான். துடுக்குனா அப்படி ஒரு துடுக்கு.. வாத்தியார்னு கூட பாக்க மாட்டா, தூங்கும் போது வாத்தியார் கண்ணாடிய எடுத்து ஒளிச்சு வச்சுடுவா, எழுந்ததும் எல்லோருக்கும் அடி, இடி மாதிரி விழும். ஆனாலும் காட்டிக் கொடுக்காமல் அடி வாங்குறதுல அவ்ளோ சந்தோஷமா இருக்கும். எண்ணெய் தடவுன பிரம்பால கைல ஒண்ணு போட்டா சுளீர்னு இருக்கும். வலி தெறிக்கும், கைய புட்டத்துல வச்சு தேச்சாக் கூட சூடு குறையாது.

வாசலில் தொப்பி தாத்தா, தள்ளுவண்டில ஐஸ் வித்திட்டு வர்ருவாரு, அவர் கிட்டயும் அப்படி தான் ஒரே கலாட்டா பண்ணுவோம். அங்கயும் மொதல்ல நிக்கிறது மஞ்சுளா தான். தாத்தாவோட டவுசுர புடிச்சு இழுத்து விடுவா, "ஏண்டி என்னைய கல்யாணமா பண்ணிக்கப் போற, டவுசுர போட்டு இழுக்குற" என்று முதுகில் ஒண்ணு வைப்பார். வீட்டுக்கு போகிற வரை முதுகை நெளித்துக் கொண்டே தான் நடக்க வேண்டி இருக்கும். வழியில கொருக்கல்லிக்காய் பறிப்பதும், மஞ்சுளா வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தழை பறிப்பதும் என்று அரட்டைக் கச்சேரி தான். முதலில் மேட்டுத்தெருவில் மெஹருன்னிசா வீடு. அடுத்து தேரடியில் நான். லட்சுமியும், ப்ரியாவும் நாயுடு தெருவில் சென்ற மறைய, ஒரு தோளில் புத்தக பையும், மறுதோளில் தொரட்டி நிறைய இலை தழையுமாய் அம்பேத்கர் காலனிக்குள் செல்வாள் மஞ்சுளா.

காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு தண்ணி காட்டுவது, பொட்டு புண்ணாக்கு போட்டு தொட்டி நிறைய கலப்பது, போரில் இருந்து ஒரு கட்டு பிரித்து வைக்கோலை மாடுகளுக்கு போடுவது, வாலுக்கு சிக்கெடுப்பது, கிணற்றடியில் நின்று தண்ணீர் மொண்டு மொண்டு மாடுகளை குளிப்பாட்டுவது என்று மஞ்சுளா செய்யும் வேலைகளை பார்த்து மலைத்துப் போவோம். ஒரு கையில் கருப்பட்டியை தின்றபடி, மறுகையில் சாக்காரக்கட்டியால் எருமை மாட்டின் முதுகை தேய்த்துக் கொண்டிருப்பாள். மாட்டின் இடுப்பளவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவு தைரியமாய் மாடுகளுக்கு பக்கத்தில் செல்கிறாள் என்று நாங்கள் வியந்து போவதுண்டு. ஆனால், மஞ்சுளா வீட்டுக்கு போய் வந்தாலே எனக்கு அடிதான். தண்ணீரை தெளித்து தான் வீட்டுக்குள் பாட்டி கூட்டிச் செல்வார்கள். "ஏன் பாட்டி இப்படி பண்ற, காலையிலே குளிச்சுட்டு தானே போனேன்" என்று கேட்டால், "போடி வியாக்கியானம் பேசிக்கிட்டு" என்று தலையில் ணங்கென்று குட்டு வைப்பாள்.

கதிரேசன் சார் புதிதாக சில்வர் ப்ளஸ் வண்டியை ஒன்றை வாங்கி எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். நாங்கள் அதனை சுற்றி சுற்றி பார்த்தோம். மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த அதன்மீது காகம் எச்சம் போடாமல் இருக்க, மண்ணில் ஊனப்பட்ட கொம்பின் மீது குடை ஒன்று கவிழ்க்கப்பட்டிருக்கும். சாம்பல் நிறமும், கருப்பு நிறமும் கலந்த வண்டி அது. பள்ளிக்கூடம் முடிந்து அந்த வண்டியை கதிரேசன் சார் எடுக்கும் சமயம், வண்டியை ஓங்கி உதைப்பார். பின்னால் இருக்கும் ஒரு ஓட்டையில் பட், பட்டென்ற ஒலியோடு புகை வரும். அந்த புகையை மஞ்சுளா ஆசை, ஆசையாய் முகர்ந்து பார்ப்பாள். "என்னா ஒரு மணம்டி, அதுக்குள்ள என்னமோ கலக்குறார்டி கதிரேசன் சார்.. அதுதான் இந்த மணம் மணக்குது" என்பாள். ஒரு நாள் அந்த புகையை பிடிக்க பெரிய துணிப்பை ஒன்றை எடுத்து வந்து அந்த ஓட்டையை சுற்றி கட்டி வைத்தாள். கதிரேசன் சார் வண்டியை உதைக்க, உதைக்க புகை வரவேயில்லை. பின்னால் வந்து பார்த்தவர், யார் இந்த வேலையை செஞ்சது என்று அந்த துணிப்பையை பிடித்து இழுத்தார். எல்லோரும் மஞ்சுளாவை பார்க்க, அவளுக்கு விழுந்த அடியில் நாங்கள் எடுத்த ஓட்டம் வீடு வரை நிற்கவேயில்லை.

ஆண்டு இறுதி தேர்வு விடுமுறை என்பது எங்களுக்கு கிடைச்ச லக்கி ப்ரைஸ். தாத்தா வச்சு இருக்குற லாட்டரில பரிசு விழுந்தா மாதிரி நாங்க ஒரே ஆட்டம் தான். லட்சுமியும், ப்ரியாவும் காஞ்சிபுரத்திற்கு போவாங்க. அங்க தான் அவங்க பாட்டி வீடு. மெஹருன்னிசா வேலுர் போய்டுவா. நான் குன்றத்தூர்ல இருக்குற அத்தை வீட்டுக்கு. ஆனா மஞ்சுளா மட்டும் எங்கயும் போக மாட்டா. கேட்டா, "மாடுங்க இருக்குல்ல, யார் பாத்துக்குறது, அதுங்களுக்கு பசிக்கும்ல" என்று சிரித்துவிட்டு ஓட்டமாக ஓடுவாள். அவ அழுது நாங்க யாருமே பார்த்தது இல்லை.

லட்சுமி, ப்ரியா, மெஹருன்னிசா, மஞ்சுளா எல்லாரும் எங்க வீட்டுக்கு அன்னிக்கி வந்தாங்க. வந்தவங்கள திண்ணையில் உட்கார்ந்து இருந்த பாட்டி, கையில் இருந்த குச்சியால "நில்லுங்க, நில்லுங்க" என்று அதட்டினாள்.

"எந்த தெருவுல இருந்து வர்றீங்க" என்று கேட்டாள். லட்சுமியும், ப்ரியாவும் தெருவின் பேரைச் சொல்ல உள்ளே போங்கடி என்று சொல்லிவிட்டு நீ பாய் வூட்டு பொண்ணு தானே என்று மெஹருன்னிசாவை பார்த்து கேட்டாள். ஆமாம் பாட்டி, "ஹா, போ, பின்னாடி கிணத்து பக்கமா போயிட்டு தலையில தண்ணி தெளிச்சிட்டு பின்கட்டு அங்கணத்துல உக்காரு" என்றாள். கடைசியாக மஞ்சுளாவை பார்த்தாள் பாட்டி. வெளுத்து சாயம்போன நீல நிற பாவாடையும், ஒட்டுபோட்டு வெள்ளைநிற மேல்சட்டையும் அணிந்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. நீ தெருவுல நில்லு, உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டாள் பாட்டி. எனக்கு ஒரே அழுகையா போய்விட்டது. "பாட்டி ஏன் அவ வரக்கூடாது, உள்ளே விடு அவள" என்று கண்ணை கசக்கினேன். கையில் வைத்திருந்த குச்சியால் என் புட்டத்தில் ஒன்று போட்டாள் பாட்டி. "சனியனே, எங்க இருந்த எதையோ புடிச்சிட்டு வந்து ஏண்டி உசுர வாங்குற" என்று சத்தம் போட்டாள். மஞ்சுளா என்னை பார்த்து, "ஹேய் விடுடி, உங்க தெருவுல என்னை விட மாட்டாங்க" என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து கண்ணை அடித்து ஓடிவிட்டாள்.

நான் பின்கட்டுக்குப் போனேன், அங்கு லட்சுமி, ப்ரியா, மெஹருன்னிசா எல்லோரும் கையில் உடைத்தகடலையை மென்றபடி உட்கார்ந்து இருந்தார்கள். கிணற்றுக்கு பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் வழியாக மஞ்சுளா மெதுவாக ஏறி உள்ளே குதித்தாள். எங்களுக்கு ஒரே குஷி. ஓய் என்று கத்திவிட்டு, பாட்டி பார்த்து விட போகிறாள் என்று கமுக்கமாக சிரித்தோம். பாக்கெட்டில் வைத்திருந்த கம்மர்கட்டை ஆளுக்கொன்றாய் சாப்பிட மாமரத்தில் ஏறிய மஞ்சுளா நல்ல பிஞ்சு காய்களாக பறித்துப் போட்டாள். லட்சுமியிடம் உள்ளே சென்று உப்பும், மிளகாய் தூளும் எடுத்து வர சொன்னேன். அதனை தொட்டு தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென பின்னால் வந்த பாட்டி எங்களைப் பார்த்து விட்டு "அடி செருப்பால, எங்கடி வந்த, எப்படி வந்த" என்று குச்சியை தூக்கியபடி விரட்ட மஞ்சுளா வேப்ப மரத்தில் தொற்றி ஏறி குதித்து மறைந்தாள். லட்சுமியும், ப்ரியாவும் வீட்டுக்குள் ஓட, மெஹருன்னிசா, "யா அல்லா" என்றபடி சந்து வழியாக தப்பினாள்.

பிரச்னை இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. மறுநாள் என் பாட்டியும், அம்மாவும் ஒரே சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"தறிக்கு பாவு போடுவேனா, வூட்டுக்குள்ள யார் வர்றாங்க, யார் போறாங்கனு பார்த்துட்டு இருப்பேனா? தண்டத்துக்கு திண்ணையில கெடந்து பகல் முழுக்க தூங்குறியே, இன்னிக்கு போச்சே, ரெண்டு பவுனாச்சே, போச்சே, போச்சே" என்று அம்மா மண்டையில மடார் மடார் என்று அடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி சீறிக்கொண்டு, "அடி செருப்பால, கண்ணுல கொள்ளிக்கட்டை வச்சிக்கிட்டு நாள் முழுக்க இங்கேயேதான் கிடந்து சாகுறேன், எனக்கு தெரியாது, யார் வர்றாங்க யார் போறாங்கனு" என்று பதிலுக்கு கத்தினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணன் தான் சொன்னான், அம்மாவோட வளையல காணவில்லை என்று, தொலைந்தால் என்ன இன்னொன்று வாங்கி விட்டால் போகிறது, எதற்கு இப்படி பாட்டியும், அம்மாவும் சண்டை போட வேண்டும் என்று தோன்றியது. சொன்னால் திட்டுவார்கள் என்று அமைதியாக இருந்து விட்டேன்.

அப்பா வீடு முழுவதும் தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தார். வெங்கல பானைகள் ஒவ்வொன்றும் எடுத்து வெளியில் எறிந்து கொண்டிருந்தார். சமையல் கட்டுக்குள் அம்மா ஆராய்ந்து கொண்டிருந்தாள். "எல்லா பொருளும் கலஞ்சி இருக்கு, யார் வந்தா வீட்டுக்குள்ள" என்று கொண்டையை முடிந்தபடி வெளியில் வந்தார்கள். உப்பு வைத்திருந்த சம்புடத்தை உற்றுப் பார்த்த பாட்டி, "இதோ உன் ஏகபுத்திரி தான் கூட்டாளிங்கள கூட்டிக்கிட்டு வந்து மாவடு போட்டு திண்ணுக்கிட்டு இருந்தா நேத்து" என்று என்னை பார்த்து வத்தி வைத்தார்கள். அவ்வளவுதான் அம்மாவுக்கு சாமி வந்தது போல் ஆகிவிட்டார்கள். கணநேரத்தில் என்மீது எத்தனை அடி விழுந்தது என்று தெரியவில்லை. காதுக்குள் கொய்ங் என்று சத்தம். யார் யார் வந்தாங்க என்று அம்மா கேட்க, மூக்கை உறிஞ்சியபடி லட்சுமி, ப்ரியா, மெஹருன்னிசா, மஞ்சுளா என்று சொன்னேன். ஓஹோ என்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் அம்மா, அப்பா, பாட்டி எல்லோரும் வெளியில் சென்றார்கள். நானும் பின்னாலேயே ஓடினேன்.

மேட்டுத்தெரு தாண்டி, நாயுடு தெரு தாண்டி அம்பேத்கர் காலனி வரை சென்ற அப்பா, அங்கிருந்த டீக்கடையில் நின்று "வஜ்ஜிரத்தை வர சொல்லுங்க" என்று கத்தினார். டீக்கடையில் இருந்து ஓரு ஆள் ஓட்டமாக ஓடி மஞ்சுளாவின் அப்பாவை அழைத்து வந்தார். இடுப்பில் கைலி மட்டும் கட்டிக்கொண்டு வெற்று மார்போடு நடந்து வந்தார் அவர்.

"கை, கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? ஊருக்குள்ளயே ஆட்டம் போட ஆரம்பிச்சிட்டிங்களா" என்று அப்பா கத்த, பதிலுக்கு "என்ன விஷயம்னு சொல்லாம, இஷ்டத்துக்கு கத்தினா என்ன அர்த்தம்" என்று அவரும் பாய, இருவரும் அடித்துக் கொள்ள பார்த்தார்கள்.

உள்ளே புகுந்த அம்மா, "உன் பொண்ணு நேத்து என்னோட வளையல திருடிட்டு போயிட்டா" என்று சொல்ல, எனக்கு தலை சுற்றியது. என்னது மஞ்சுளாவா, திருடிட்டாளா? என்ன சொல்றாங்க அம்மா, என்கூட தானே விளையாடுனா, என் எதிரில் தானே வேப்ப மரத்த தாண்டி குதிச்சா? என்று எனக்குள் ஏராளமான கேள்விகள்.

வேகமாக தெருவுக்கு நடந்து சென்ற அவர், சிறிது நேரத்தில் மஞ்சுளாவை பிடித்து தரதரவென்று இழுத்து வந்தார். வெள்ளை நிற ரிப்பன் காற்றில் அலைபாய, கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து வர மஞ்சுளாவை தரையில் தள்ளி விட்டார். அவள் எழுந்து ஒரு கையால் கண்ணீரை துடைத்தபடி என்னை பார்த்து விட்டு தலைகுனிந்து பெரிதாக கேவி கேவி அழுதாள். "ஏய், அவங்க வீட்டுக்கு போனியா? வளையல எடுத்தியா?" என்று மஞ்சுளாவின் அப்பா, அவளுடைய கன்னத்தில் ரெண்டு அறைவிட்டார். ஏற்கனவே அழுது கொண்டிருந்த மஞ்சுளாவை பார்த்து கலங்கி நின்ற நான், அந்த அடியை பார்த்து மூத்திரம் போக ஆரம்பித்து விட்டேன். "இல்லப்பா நான் எடுக்கல, நான் எடுக்கல" என்று மஞ்சுளா அலறினாள்.

"வீட்டுக்குள்ள வராதனு சொன்னேன்ல, அப்புறம் எப்படிடி வந்த" என்று பாட்டி குச்சியை ஆட்டி ஆட்டி கேட்டாள், பாட்டி.

"மரம் ஏறி குதிச்சி" என்றாள் மஞ்சுளா.

"பார்த்தியா, திருட்டு புத்திய, மரம் ஏறி வந்தாளாம், ஆனா வளையல எடுக்கலயாம், யாரை நம்ப சொல்ற" என்று பாட்டி ஏகத்துக்கும் எகிறினாள்.

"மனுஷங்கள நம்பி நாங்க இல்லங்க, எங்களுக்கு மாடு இருக்கு அதை வச்சும் பொழச்சுக்குவோம், திருடி வாழணும்னு அவசியம் இல்லை" என்று மஞ்சுளாவின் அப்பா மூச்சிரைத்தார்.

இதற்குள் ஊரெல்லாம் அங்கு திரண்டு விட்டது. லட்சுமி, ப்ரியா, மெஹருன்னிசா எல்லோரும் கூட வந்து விட்டார்கள்.

"அந்த நேரத்தில அங்க இருந்தவங்க இதுங்க தான், அப்போ இதுங்க தானே எடுத்து இருக்கணும்" என்று பாட்டி கையை ஆட்டி பேசினாள்.

"ஏன், மத்த பொண்ணுங்க கூட தான் இருந்து இருக்கு, அங்க போய் கேக்க வேண்டியது தானே" என்று சத்தம் போட்டார் மஞ்சுளாவின் அப்பா.

"டேய் யார் வீட்டுல வந்து யார கேக்க சொல்ற, வெட்டி பொலி போட்டுறுவேன்" என்று லட்சுமியின் அப்பா கத்த, மஞ்சுளாவின் அப்பா தலையில் கையை வைத்துக் கொண்டு நடுத்தெருவில் அமர்ந்து விட்டார்.

"ஒண்ணு நகையை கொடு, இல்லேன்னா போலீசுல சொல்லிடுவேன்" என்று அப்பா இறுக்கமாக கூறினார்.

"நான் வளையல எடுக்கல, எடுக்கல, எனக்கு தெரியவே தெரியாது" என்று மஞ்சுளா அழுதுகொண்டே கத்தினாள்.

பாட்டி ஆவேசமாக, "என்னை ஏமாத்திட்டு உள்ள வந்தவதானே, நீ சொல்றது எப்படிடி நம்புறது" என்று புடவையின் முந்தானையை உதறினார்.

"திருடி, திருடி, திருட்றதையும் திருடிட்டு எவ்ளோ அழுத்தமா சாதிக்குது பாரு, திருடி" என்று சபித்தாள்.

என்னையும், பாட்டியையும் உற்றுப் பார்த்த மஞ்சுளா வேகமாக பின்பக்கமாக தெருவுக்குள் ஓடினாள்.

"ஏய்,ஏய் திருடி ஓட்றா பாரு" என்று பாட்டி கத்த, நாலைந்து பேர் பின்னால் ஓடினார்கள். நாங்களும் கூட பின்னால் ஓட, பாட்டி மட்டும் தயங்கி நின்று விட்டாள். வேகமாக ஓடிய மஞ்சுளா தெருவின் முடிவில் இருந்த ஆற்றின் கரையை ஏறி, ஓங்கி நின்றிருந்த வேங்கை மரத்தில் ஏறினாள். மஞ்சுளாவின் அப்பா, அலறியபடியே "ஏய் என்ன பண்ற, எங்க போற" என்று கத்தியபடியே பின்னால் ஓடினார்.

மரத்தின் பெரிய கிளையில் தவ்வி சென்ற மஞ்சுளா கீழே சுழித்து ஓடிய ஆற்றில் சட்டென்று பாய்ந்தாள். ஒரு கணம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. மரத்தின் உச்சியை பார்த்தோம், ஆற்றைப் பார்த்தோம். நீருக்குள் இருந்து ஒருமுறை மஞ்சுளாவின் தலை மேலே வந்து சென்றது. கை ஒருமுறை உயர்ந்து மறைந்தது. படபடவென்று நாலைந்து பேர் நீருள் குதித்தார்கள்.

"யாராச்சும் கயிறு இருந்தா எடுத்துட்டு வாங்க, யாராச்சும் தலைப்பாலம் பக்கத்துல அளவுகல்லு பக்கத்துல போய் பாருங்க" என்று சத்தமாக இருந்தது.

"ஐயோ, என் பொண்ணு என் பொண்ணு" என்று மஞ்சுளாவின் அப்பாவின் அலறல் சத்தம் காதை கிழித்தது.

அப்பாவும், அம்மாவும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது கூட, "திருடிட்டா, ஆப்டுக்கிட்டா, அதா அவமானம் தாங்காம தண்ணில குதிச்சுட்டா" என்று பாட்டி சொன்னார்கள்.

கொஞ்சநேரத்தில் மஞ்சுளாவின் உடலை கொண்டு வந்தார்கள். நெற்றியில் அடிபட்டு பிளந்திருந்தது. இரண்டு உள்ளங்கைகளை பிரித்தபடி படுத்திருந்தாள் மஞ்சுளா.

வளையலும் கிடைக்கவில்லை, மஞ்சுளாவும் கிடைக்கவில்லை. ஆனால் என்ன காரணமோ, முழுஆண்டு பரிட்சைக்கு முன்னதாகவே லட்சுமி வீட்டில் மட்டும் காஞ்சிபுரத்துக்கு வீடு காலி பண்ணிக்கிட்டு போயிட்டாங்க.

இப்போதெல்லாம் ஆற்றில் தண்ணீர் பெரும்பாலும் வருவதில்லை. வரும் சமயங்களில் தவறாமல் சென்று பார்க்கிறேன் சுழித்து ஓடும் நீரில் மஞ்சுளாவின் முகத்தை.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment