இரா.குமார்
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழ்கன், தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு சொல்லும் பதில், யாரும் எதிர்பாராததாக, சுவாரசியமானதாக, வித்தியாசமானதாக இருக்கும்.
கடந்த 1985ம் ஆண்டில், எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அதிமுக ஆதரவு பத்திரிகையான சமநீதி இதழ், “கருணாநிதி வீட்டு வேலைக்காரன் அன்பழகன்” என்று எழுதியது. மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது இதற்கு பதிலளித்தார் அன்பழகன்.
“ஒரு ஏடு எழுதுகிறது; கருணாநிதி வீட்டு வேலைக்காரன் அன்பழகன் என்று. இது நல்லதல்ல. நான் வேலைக்காரன்தான். ஆனால், எனக்கு எஜமானன் எவனுமில்லை” என்றார் அன்பழகன்.
1983ம் ஆண்டில் அன்பழகனின் மணிவிழா பொதுக்கூட்டம், பெரியார் திடலில் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் தண்டையார்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டதில் முதல்வர் எம்ஜிஆர் பேசினார். அவர் பேசும்போது, “மணிவிழா கண்டு கொண்டிருக்கும் பேராசிரியர், இங்கே இருக்க வேண்டியவர். அவர் அதிமுகவுக்கு வரவேண்டும்” என்று பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்.
மணிவிழா மேடையில் இருந்த அன்பழகனுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. எம்ஜிஆருக்கு பதிலளித்து அன்பழகன் பேசினார். “நான் அதிமுகவுக்கு வரவேண்டும் என்று எம்ஜிஆர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு நான் சொல்லக் கூடிய பதில், ’வேண்டுமானால் என் வீட்டு சமையல்காரரை அனுப்பி வைக்க்கிறேன்’ என்பதுதான்” என்றார். அன்பழகன் சொன்ன பதிலின் பொருள் புரியக்கூடியவர்களுக்குதான் புரியும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காளிமுத்து பேரவைத் தலைவராக இருந்தார். திமுகவின் அன்பழகன் எதிர்க்கட்சித் தலைவர். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து அன்பழகன் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் காளிமுத்துவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனுக்கும் சுவாரசியமான விவாதம் நடந்தது. அந்த விவாதம் இதோ…
காளிமுத்து: ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுகவினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையைப் புறக்கணிக்க பேரவை விதியில் இடமில்லை.
அன்பழகன்: விதியை மீற வேண்டும் என்பதுதான் நோக்கமே. எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிப்பதில் இதுவும் ஒரு வகை.
காளிமுத்து: மற்றவர்கள் மீறலாம். பேராசிரியரே விதியை மீறலாமா?
அன்பழகன்: அண்ணா மீறியிருக்கிறார். எம்ஜிஆர் மீறியிருக்கிறார். அந்த வழியில் இப்போது நானும் விதியை மீறியிருக்கிறேன்.
காளிமுத்து: எம்ஜிஆர் வழியில் நடப்பதாக பேராசிரியர் சொல்வதில் மகிழ்ச்சி.
அன்பழகன்: அந்த எம்ஜிஆரே என்னைக் கேட்டுவிட்டுதான் திமுகவில் சேர்ந்தார்.
காளிமுத்து: அப்படியானால், திமுகவை விட்டுப் போகும்போதும் உங்களைக் கேட்டுவிட்டுத்தான் எம்ஜிஆர் போயிருப்பார்.
இப்படி காளிமுத்துவும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பதிலடி கொடுத்ததை அவை உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் வெகுவாக ரசித்தனர்.