இரா.குமார்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் ஒவ்வொருவரும் ஒரு முறையைக் கையாள்வார்கள்.
பொதுவாக ஆண் குழந்தைக்கு அப்பா வழி தாத்தா பெயரையும் பெண் குழந்தைக்கு அப்பா வழி பாட்டி பெயரையும் சூட்டும் வழக்கம் இருந்து வந்தது. அம்மா வழி தாத்தா பாட்டி பெயரைச் சூட்டும் வழக்கம் பொதுவாக இல்லை. காரணம் நமது சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம் என்பதுதான்.
முனுசாமி, கருப்பாயி போன்ற தாத்தா பாட்டி பெயர்களை இப்போதெல்லாம் குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால் அந்த வழக்கம் மறைந்து வருகிறது.
கடவுள் பக்தி உள்ளவர்கள் சாமி பெயரை சூட்டுகின்றனர். இப்போதெல்லாம் சோதிடம் பார்த்து, எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று சோதிடர் சொல்கிறாரோ அதற்கேற்ப பெயர் சூட்டும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெயர் என்பது ஒரு இனத்தின் அடையாளமாக இருந்த காலம் போய்விட்டது.
சிலர் கொள்கை அடிப்படையில் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். அரசியல் தலைவர்களை வைத்து பெயர் சூட்டுவது வழக்கில் உள்ளது.
என் நண்பர் ஒருவர் தீவிரமான நாத்திகர். தன் குழந்தைக்கு “கடவுள் இல்லை” என்று பெயர் வைக்கப் போவதாகச் சொன்னார்.
”வேண்டாம்; நாளை உங்கள் மகன் தினமும் உங்களுக்கு எதிராகப் பேசுவான்” என்றேன்.
“என்ன என்று” கேட்டார்.
பள்ளியில் வருகைப் பதிவேடு எடுக்கும்போது, ‘கடவுள் இல்லை’ என்று ஆசிரியர் அழைப்பார். உங்கள் மகன் எழுந்து ‘உள்ளேன் ஐயா’ என்பானே என்று சொன்னேன். நண்பர் திகைத்துவிட்டார்.
அரசியலிலும் இப்படி ஒரு சுவாரசியம் நடந்தது.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த பலரும் நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று, தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். அன்பழகன், அறிவழகன், மதியழகன் என பலர் பெயர் வைத்துக்கொண்டனர். ராமையா அன்பழகன் ஆனார். நாராயணசாமி நெஞ்செழியன் ஆனார்.
இதுபற்றி கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், ’அன்பழகன்றான்... அறிவழகன்றான்...போற போக்கைப் பார்த்தா மயிரழகன்னு பேர் வச்சுப்பானோ போலிருக்கே’ என்று கிண்டலடித்தார்.
இதற்கு பதில் சொன்ன அண்ணா, ‘எங்கள் பெயர் அப்படியில்லை. உங்களுடைய பெயர்தான் அப்படி இருக்கிறது. உங்கள் பெயரின் பொருள் என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்..உங்களுக்குப் புரியும்’ என்றார்.
பொருள் தெரிந்ததும் அமைச்சர் ஆஃப் ஆகிவிட்டார்.
அளகம்+ஈசன், என்பதுதான் அளகேசன். ஆனது. அளகம் என்றால் தலைமுடி. சடாமுடியை உடையவன் ஈசன். சடாமுடிக்கடவுள் என்பதைத்தான் அளகேசன் என்று அழைக்கிறார்கள். இப்போது பலர் ‘அழகேசன்’ என எழுதுகின்றனர். ஒருவிதத்தில் இது தவறில்லை. அழகிய ஈசன் எனப் பொருள் படும். ஆனலும் அளகேசன் என்பதுதான் அழகேசன் ஆகிவிட்டது.
(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.