இரா.குமார்
சமயோசிதமாக பதில் சொல்லி சமாளிப்பதில் தமிழறிஞர்கள் பலர் வல்லவர்கள். அதில் ஒருவர் அவ்வை நடராஜன்.
ஒரு விழாவில் பேசிய அவ்வை நடராஜன், “மின்னலைப் போல் ஒரு பெண் வந்தாள்” என்றார்.
அருகில் இருந்த கவிஞர் நா. காமராசன், “இந்த வயதில் இது தேவையா உங்களுக்கு?” என்று கேட்டார்.
அவ்வை நடராஜன்
அவ்வை உடனே, “ வந்தாள்... வந்த வேகத்தில் போய்விட்டாள். அதைத்தான், மின்னலைப் போல் வந்தாள் என்றேன்” என்று சொல்லி சமாளித்தார்.
நா. காமராசன் உடனே, “பெண்மைக்கு வயது போனால் அவ்வைக்குத் தமிழே வராதே” என்றார். அவ்வை உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தார் அவ்வை நடராஜன்..
ஒரு கடிதத்ததில்,, “காரோட்டி” என்று அவ்வை எழுதியிருந்ததைப் படித்த எம்ஜிஆர், அவ்வையைப் பார்த்து, “அது என்ன காரோட்டி? கா...ரோட்டி? கார் ஓட்டி என்றுதானே எழுத வேண்டும்?” என்றார்.
நா.காமராசன்
அவ்வை உடனே சிரித்துக்கொண்டே, “எனக்கென்னங்க தெரியும்? படகோட்டிதான் தெரியும் எனக்கு” என்றார். இதைக் கேட்ட எம்ஜிஆர் “ஆஹா... தமிழே... தமிழே...” என்று சொல்லி அவ்வையை அணைத்துக் கொண்டார்.
எம்ஜிஆர் நடித்த படம் படகோட்டி. அதற்கு “படகு ஓட்டி” என்று பெயர் வைக்கவில்லை. “படகோட்டி” என்றுதான் பெயர் வைத்தார்கள். அவர் நடித்த படத்தின் பெயரையே சொல்லி பதில் அளித்த அவ்வையின் திறமையை மிகவும் ரசித்தார் எம்ஜிஆர்.