இரா.குமார்
சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினரின் தாக்குதலை, சமயோசிதமாக பதில் சொல்லி சமாளிப்பது ஒரு கலை. அது எல்லாருக்கும் வந்துவிடாது. சிலருக்குத்தான் அது கை வந்த கலை.
இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில், சமயோசிதமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்லி சமாளிப்பதில் வல்லவர்.
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தபோது, ’சர்ச்சில் ஒரு முட்டாள்’ என்று ஒருவர் சொன்னார். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாடாளுமன்றத்தில் இது பற்றி எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. “உங்களை முட்டாள் என்று சொன்னதற்காக ஒருவரைக் கைது செய்தது நியாயமா?” என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.
பிரதமர் சர்ச்சில் உடனே எழுந்து, “என்னை முட்டாள் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்யவில்லை. போர் நடக்கும்போது அரசு பற்றிய ரகசியத்தை வெளியில் சொல்லிட்டார். அதற்காகத்தான் கைது செய்துள்ளோம்” என்றார். கேள்வி கேட்டவர்களும் சிரித்துவிட்டனர்.
இதே போல கருணாநிதியும் சமயோசிதமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்லி சமாளிப்பதில் வல்லவர்.
1970 களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
(பெரியாரை மதிக்காமல் நடந்துகொண்டால் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்)
என்ற குறளை ராஜாஜி வீட்டிலும்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
( இறைவன் திருவடிகளை வணங்காவிட்டால், படித்தும் பயனில்லை)
என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.
முதல்வர் கருணாநிதி உடனே எழுந்து,
”யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ
யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார். அவையில் சிரிப்பலை எழுந்தது.
(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)