தமிழ் விளையாட்டு - 6 :தமிழ்த் தாயோட அட்ரஸ் என்ன?

தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான அண்ணா அவர்களின் சமயோசிதமான பதில்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. தமிழன்னையின் முகவரி குறித்து அவர் சொன்னது என்ன?

இரா.குமார்

ஏடாகூடமாக சிலர் கேள்வி கேட்கும்போது, அவர் சொன்னதை வைத்தே அவரை மடக்குவது ஒரு கலை.

இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சிலை மடக்கவே முடியாது. எதிரில் இருப்பவர் என்ன கேட்டாலும் சட்டென்று நகைச்சுவையாக பதில் சொல்லி சமாளிப்பதில் வல்லவர் அவர். சர்ச்சிலை எப்படியாவது மடக்கிவிட வேண்டும் என்று பெண் எம்.பி. ஒருவருக்கு ஆசை.

நாடாளுமன்றத்தில் ஒரு நாள், அந்தப் பெண் எம்.பி., சர்ச்சிலைப் பார்த்து, “நான் உங்கள் மனைவியாக இருந்தால், உங்களை விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார். சர்ச்சில் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

சட்டென்று எழுந்த சர்ச்சில், கொஞ்சமும் யோசிக்காமல், “நான் உங்கள் கணவராக இருந்தால் விஷம் குடித்து செத்திருப்பேன்” என்றார். எல்லாரும் சிரித்துவிட்டனர். மடக்க முயற்சித்த பெண் எம்.பி. முகத்தில் ஈயாடவில்லை.

அண்ணாவும் இப்படி பதில் சொல்வதில் வல்லவர். காங்கிரஸ்காரர் ஒருவர் அண்ணாவைப் பார்த்து, “தமிழ்த்தாய்…தமிழ்த்தாய்னு சொல்றிங்களே… தமிழ்த்தாயோட அட்ரஸ் என்ன?” என்று கேட்டார்.

சற்றும் யோசிக்காமல், “பாரத மாதா வீட்டுக்குப் பக்கத்து வீடு’’ என்று பதிலடி கொடுத்தார் அண்ணா. கேள்வி கேட்டவர் கப்சிப் ஆனார்.

ஒருவரைத் தாக்க வேண்டுமென்றால், அவரை மிக உயரத்துக்கு உயர்த்தி, கீழே போடுவார் அண்ணா. ராஜாஜியை ஒருமுறை அப்படித்தான் மிக உயரத்துக்குக் கொண்டு போய் கீழே போட்டார்.

தமிழக முதல்வராக ராஜாஜி இருந்தபோது குலக் கல்வித் திட்டத்தை கொண்டுவந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது ராஜாஜி பற்றி அண்ணா சொன்னது…

’’ராஜாஜிக்கு
உடம்பெல்லாம் மூளை.
மூளையெல்லாம் சிந்தனை
சிந்தனையெல்லாம்
வஞ்சனை’’

எவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய்
கீழே போட்டிருக்கார் பாருங்க, யப்பா.

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர், தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close