இரா.குமார்
இசை கலைஞர்கள் விழா ஒன்றில் கருணாநிதி கலந்துகொண்டார். விழாவுக்கு பட அதிபர் முக்தா சீனிவாசன் தலைமை. அவர் பேசும்போது, “ இசை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்ன பேசுவது என்று புரியவில்லை. கலைஞரிடம் பேச்சு கொடுத்தால் அவர் ஏதாவது சொல்வார். அதை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நினைத்து கலைஞரிடம் பேசினேன். “உங்களுக்குப் பாட வருமா? என்று கேட்டேன். அதற்கு அவர் “இப்ப வராது. கொஞ்ச நாள் கழித்து வரும்” என்றார். எனக்குப் புரியவில்லை. அருகில் இருந்த இளையராஜா புரிந்துகொண்டு சிரித்தார்” என்றார். ”கொஞ்ச நாள் கழித்து பாட (பாடை) வரும்” என்று சிலேடையாகக் கருணாநிதி கூறியதை பிறகுதான் புரிந்துகொண்டார் முக்தா சீனிவாசன்.
சிலேடை, சொல்லாற்றலின் ஒரு கூறு. சிலேடையாக ஒருவர் பேசுவதை மொழி பெயர்க்க முடியாது. காரணம், ஒரு மொழியில் ஒரு சொல் இரண்டு பொருள் தரும். அதேபோல், இன்னொரு மொழியில், அதே இரண்டு பொருள் தரக்கூடிய ஒரு சொல் இருக்க வாய்ப்பில்லை. எனவே எந்த மொழியில் பேசுகிறோமோ அந்த மொழியில் மட்டுமே சிலேடையை ரசித்து அனுபவிக்க முடியும்.
ஆனால், சொல்லாற்றல் மிக்க அண்ணா, ஓர் ஆங்கிலச் சிலேடையை உடனுக்குடன் அப்படியே தமிழ்ச் சிலேடையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
லட்சுமணசாமி முதலியார் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்கிறார் அண்ணா. ‘ராபர்ட் கிளைவ் கேம் டு இண்டியா அண்ட் பிகேம் ராபர் கிளைவ்’ என்று லட்சுமணசாமி முதலியார் பேசினார். ‘ராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வந்தார். ஆனால் திருடனாக மாறி விட்டார்’ என்றுதான் இதைத் தமிழில் பொதுவாக மொழிபெயர்ப்பார்கள். ஆனால், அந்த ஆங்கிலச் சிலேடையைத் தமிழிலும் சிலேடை நயம் தோன்ற மொழிபெயர்த்தார் அண்ணா. கேட்டவர்கள் அசந்து போனார்கள்.
அண்ணா மொழி பெயர்த்துச் சொன்ன வாக்கியம் இதுதான்: ‘திரு கிளைவ் அவர்கள் இந்தியாவுக்கு வந்து திருடர் கிளைவாக மாறினார்!’
தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதனை எழுத்தாளர் வாசவன் ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பிதழிலும் அவர் பெயர் அச்சிடப்பட்டுவிட்டது. உடல் நலம் காரணமாக கி.ஆ.பெ. வர இயலவில்லை. கி.வா.ஜ.வை அணுகிய வாசன், ‘உங்கள் பெயர் அழைப்பிதழில் அச்சடிக்கப்படவில்லை என்றாலும் அதைப் பொருட்படுத்தாது நீங்கள் வந்து உரையாற்ற இயலுமா?’ என்று கேட்டார்.
‘ கி.வா.ஜ. வந்தார். வழக்கம்போல் சிறப்பாகப் பேசினார். வாசவன் தனது நன்றியுரையில், ”அழைப்பிதழில் கி.வா.ஜ. பெயர் அச்சடிக்கப்படவில்லை என்றாலும் அவர் பெருந்தன்மையோடு வந்து பேசினார். அவர் பேச்சு வெல்லம்போல் தித்தித்தது” என்றார். கிவா.ஜ உடனே, ”இருக்கலாம். ஆனால், அது அச்சு வெல்லம் அல்ல!” என்றார். அவரது சிலேடையைக் கேட்டு அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.