scorecardresearch

தமிழ் விளையாட்டு – 22 : பல்கலை கழகம் இருப்பதால் டிகிரி கூடத்தான் செய்யும்

எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைப் பிடித்து, அதையே நகைச்சுவையாக திருப்பி தருவதில் வல்லவரான கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த்க சம்பவங்கள்.

ki-va-jagannathan-2x

இரா.குமார்

வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசப் போயிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அப்போது துரைமுருகன் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் முற்றத்தைக் காட்டி, “இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன் தலைவரே” என்றார் துரைமுருகன்.

கருணாநிதி உடனே, “எல்லாருமே முத்தத்தில்தான் பிறக்கிறாங்க” என்றார். அவருடைய சிலேடையை புரிந்து அருகில் இருந்தவர்கள் ரசித்துச் சிரித்தனர்.

நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தார் தமிழறிஞர் கி.வா.ஜ. “என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார் நண்பர். “நான் காபி சாப்பிடுவதில்லை. பால் கொடுங்க” என்றார் கி.வா.ஜ.

”பழமும் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்றார் நண்பர்.

“முதலில் பால் கொடுங்க. பிறகு பழம் கொடுங்க” என்றார்.

”பழம் சாப்பிட்டுவிட்டு பால் சாப்பிடுங்களேன்” என்றார் நண்பர்.

”வேண்டாம். பழம் சாப்பிடுவிட்டு பால் சாப்பிட்டால் “பழம்பால்” சாப்பிட்டார்னு சொல்லிடுவாங்க” என்றார் கி.வா.ஜ. அவருடைய சிலேடை கேட்டு வியந்து ரசித்தனர் நண்பர் வீட்டில் உள்ளவர்கள்.

நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் பேசப் போயிருந்தார் கி.வா.ஜ. கூட்டம் முடிந்ததும் விருந்து கொடுத்தனர். விருந்தில் நேந்திரம் பழம் வைத்திருந்தனர். ஒருவர், தனக்கு வைத்த நேந்திரம் பழத்தைப் பாதியாகப் பிட்டு, மகாலிங்கம் என்ற பேராசிரியருக்குக் கொடுத்தார். கி.வா.ஜ. உடனே, “சொக்கலிங்கத்துக்குப் பிட்டு கொடுத்தார்கள். மகாலிங்கத்துக்கும் பிட்டு கொடுக்கிறீர்களே” என்றார். “எது கொடுத்தாலும் சரி; அடி கொடுக்காமல் இருந்தால் சரி” என்றார் மகாலிங்கம். பழத்தின் காம்பு உள்ள அடிப்பகுதியைத்தான் மகாலிங்கத்துக்கு நண்பர் கொடுத்திருந்தார். எனவே, கி.வா.ஜ. உடனே “அடியும்தான் கொடுத்திருக்கிறார்” என்றார்.

சென்னையில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் டி.என்.சேஷாத்ரி என்பவர் முதல்வராக இருந்தார். இவரும் கி.வா.ஜ.வும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். விவேகனந்தா கல்லூரி விழாவில் பேசப் போயிருந்த கி.வா.ஜ.வை அறிமுகம் செய்யும்போது, ”இவரும் நானும் கூடப் படித்தோம்” என்றார் முதல்வர். கி.வா.ஜ. உடனே, “இவர் கூடப் படித்தார்; நான் குறையப் படித்தேன்” என்றார்.

தூத்துக்குடியில் 20 நாட்கள் தங்கி, கந்த புராண சொற்பொழிவாற்றினர் கி.வா.ஜ. அப்போது வ.உ.சி. கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்தார். “அங்கெல்லாம் வெயில் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் கி.வா.ஜ.

“திருச்சியைவிட மதுரையில் வெயில் அதிகம். இரண்டு டிகிரி கூடவே உள்ளது” என்றார் பேராசிரியர்.

“பல்கலைக்கழகம் இருக்கிறதல்லவா? டிகிரி அதிகமாகத்தான் இருக்கும்” என்றார் கி.வா.ஜ. (அப்போது திருச்சியில் பல்கலைக்கழகம் இல்லை).

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Tamil game degree will do only because the university exists