தமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி

திமுக தலைவர் கருணாந்தி, கிவாஜ ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், ஆசிரியர் இரா.குமார்.

Karunanidhi Birthday celebration at Thiruvarur, MK Stalin
Karunanidhi Birthday celebration at Thiruvarur, MK Stalin

இரா.குமார்

ரசியல் ரீதியாக கருணாநிதியைப் பிடிக்காதவர்களுக்கும்கூட, அவருடைய தமிழ் பிடிக்கும். சமயோசிதமாக அவர் அளிக்கும் பதிலும் அதில் இருக்கும் சிலேடை நயமும் அனைவரையும் கவரும். மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமின்றி, உடல் நலம் இல்லாத நேரத்திலும்கூட அவருடைய பேச்சில் இருக்கும் இயல்பான நகைச்சுவை குறைவதில்லை.

உடல் நலம் இல்லாமல், ஒருமுறை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அபோது அவரைப் பரிசோதித்த டாக்டர், “மூச்சை இழுத்து பிடிங்க” என்றார். மூச்சை இழுத்துப் பிடிக்கிறார் கருணாநிதி.

“இப்போ மூச்சை விடுங்க” என்றார் டாக்டர்.

”மூச்சை விடக் கூடாதுன்னுதானே டாக்டர் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்” என்றார் கருணாநிதி.

ஹாக்கிப் போட்டி ஒன்றின் பரிசளிப்பு விழாவுக்குச் சென்றிருந்தார் முதல்வராக இருந்த கருணாநிதி.

அந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமாக கோல் போட்டிருந்தன. டாஸ் போடப்பட்டது. தலை கேட்ட அணி தோற்றது. பூ கேட்ட அணி வென்றது. பரிசளிப்பு விழாவில் பேசிய கருணாநிதி, “இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. தலை கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். காரணம், தலை கேட்பது வன்முறையல்லவா?” என்றார். அவருடைய சமயோசித பேச்சை அனைவரும் ரசித்தனர்.

சிலேடையாகப் பேசி அருகில் இருப்பவர்களை மகிழ்விப்பதில் வல்லவர் கி.வா.ஜகன்னாதன். ஆனால், அவர் சொல்லாத பல சிலேடைகளும் அவர் சொன்னதாக பத்திரிகைகளில் வலம் வந்தது உண்டு. இது பற்றி அவரே ஒருமுறை, “நான் பேசாத சில சிலேடைகளும் என் பெயரில் பத்திரிகைகளில் இடம் பெற்றுவிடுகின்றன். சில துணுக்கு எழுத்தாளர்கள், அவர்களின் சிலேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கின்றனர். ஒன்று சொல்ல வேண்டும். நான் சொன்ன சிலேடைகளை விட நான் சொன்னதாக வரும் சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன்” என்று கூறியுள்ளார்.

கி.வா.ஜ. அவரது இறுதிக் காலத்தில் உடல் நலம் குன்றியிருந்தார். அவரைப் பரிசோதித்த டாகடர், “Take rest” என்றார். கி.வா.ஜ. உடனே, “ Ok. I take rest and leave the rest to you” என்று ஆங்கிலத்திலும் சிலேடையாகப் பேசி அசத்தினார்.

சேலம் சாரதா கல்லூரி ஒருகாலத்தில் பள்ளியாக இருந்தது. அங்கு பேசச் சென்றார் கிவாஜ. பள்ளி வளாகத்தை அவருக்குச் சுற்றிக் காட்டினர். பல ஏக்கர் புன்செய் நிலம் இருந்தது. அங்கு ஒரு கிணறும் இருந்தது. தலைமை ஆசிரியர் இவரிடம், “முன்பெல்லாம் இந்தக் கிணற்றில் இருந்து, ஏற்றம், கவலை மூலம் தண்ணீர் இறைப்போம். இப்போது மின் மோட்டார் பொருத்திவிட்டோம்” என்றார். கி.வா.ஜ. உடனே, “அப்ப தண்ணீருக்கு கவலை இல்லைன்னு சொல்லுங்க” என்றார்.

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil game honest success

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com