இரா.குமார்
சிக்கலான கேள்விகளுக்கும் சாமர்த்தியமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்வது ஒரு கலை.
இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் இருந்தபோது, லண்டனில் பெரும் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இது பற்றிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், “வெள்ளப் பேரழிவுக்கு அரசு எடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகள் போதாது. calamity (பேரழிவு) க்கும் catastrophy (பெரும்பேரழிவு) க்கும் உள்ள வித்தியாசம் பிரதமருக்குத் தெரியவில்லை” என்றார்.
சர்ச்சில் உடனே, “ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். தேம்ஸ் நதியில் எதிர்க்கட்சித் தலைவர் தவறி விழுந்துவிட்டால் அது calamity. அப்போது அவரை யாராவது காப்பாற்றிவிட்டால் அது catastrophy" என்று சொன்னார். எதிர்க்கட்சியினர் உட்பட எல்லாரும் ரசித்துச் சிரித்தனர்.
கவியரசர் கண்ணதாசனும் இப்படி சமயோசிதமாக பதில் சொல்வதில் வல்லவர்.
கண்ணதாசன், திராவிட இயக்கத்தில் தீவிரமாக இருந்த காலம். ஒரு பொதுக் கூட்டத்தில் அவருக்கு வாள் பரிசளித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட கண்ணதாசன், ‘‘இதுதான் வீர வாள். மற்றவாள் வருவாள்...போவாள்...” என்றார் .
சுற்றி இருந்தவர்கள் அதை கேட்டு ரசித்துச் சிரித்தனர்.
கவியரசரிடம் ஒரு நிகழ்ச்சியில், “ஒரு கவர்ச்சி நடிகையுடனும் கதாநாயகியுடனும் ஒரு படகில் நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நீச்சல் தெரியும். நடிகைகள் இருவருக்கும் நீச்சல் தெரியாது. திடீரென்று படகு கவிழ்ந்துவிடுகிறது? கதாநாயகியைக் காப்பாற்றுவீர்களா? கவர்ச்சி நடிகையைக் காப்பாற்றுவீர்களா? “ என்று கேட்டனர்.
இதற்கு கவியரசர் சொன்ன பதில்.....
“நான்....நதியைக் காப்பாற்றுவேன்”
இன்னொரு நிகழ்ச்சியில், ‘நடிகைக்கும் நடிகை கணவருக்கும் என்ன உறவு?” என்று கண்ணதாசனிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு கவியரசர் சொன்ன பதில்...
”புலி மார்க் சீயக்காய்த் தூளின் பாக்கெட்டின் மீது உள்ள புலிக்கும் சீயக்காய்க்கும் உள்ள உறவு”
இதன் பொருள், கவியரசரின் உதவியாளருக்குப் புரியவில்லை. நிகழ்ச்சி முடிந்து காரில் வீட்டுக்குப் போகும்போது கண்ணதாசனிடம் விளக்கம் கேட்டார். கண்ணதாசன் சொன்னார்...
அது புலி மார்க் சீயக்காய்தான். ஊரில் எல்லாருக்கும் பயன்படுகிறது. புலி என்றைக்காவது பயன்படுத்தியது உண்டா?
அடடா... எவ்வளவு சூசகம்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.