தமிழ் விளையாட்டு - 10 : எக்குத்தப்பா மாட்டிவிட்டது எதுகை மோனை

வார்த்தை விளையாட்டுகள் சில நேரங்களில் விபரீதமாக முடிவதும் உண்டு. கிருபானந்த வாரியார் எதுகை மோனைக்காக பேசி சிக்கலில் மாட்டிய சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.

இரா.குமார்

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதில் கிருபானந்த வாரியாருக்கு நிகர் யாருமில்லை. தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு, பாமர மக்களையும் கவரும் வகையில் நகைச்சுவையுடன் பேசுவார். அவ்வப்போது வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவார்.

கபாலீஸ்வரர் கோயிலில் ஒருமுறை சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். வீடு பேறு பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, குடிப்பதற்கு டம்ளரில் ஏதோ கொண்டு வந்து கொடுத்தனர். அதை கையில் வாங்கிய வாரியார், “இது காப்பி, நான் சொல்வது அசல்” என்றார். கூட்டம் ரசித்துச் சிரித்தது.

மேடையில் வாரியார் அருகில் இருந்த சிலம்புச்செல்வர் ம.பொ.சி., “உங்கள் கையில் இருப்பது காபி அல்ல; பால்” என்றார்.

வாரியார் அசர வில்லை. “நான் முப்பாலுக்கு அப்பால் இருக்கிறேன். இப்பாலும் வந்தது” என்றாரே பார்க்கலாம், கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது.

வார்த்தை விளையாட்டுக்காகப் பேசி, வாரியார் வம்பில் மாட்டிக்கொண்டதும் உண்டு.

நெய்வேலியில் தொடர் சொற்பொழிவு நடத்திக்கொண்டிருந்தார் வாரியார். அப்போது முதல்வராக இருந்த அண்ணா, மிகவும் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து டாக்டர் மில்லர் வந்திருந்தார். அண்ணா குணமடைய வேண்டி, கோயிகளில் சிறப்பு பூஜை செய்து வேண்டிக்கொள்ளுங்கள் என்று அப்போதைய ஆளுநர் உஜ்ஜல்சிங் வேண்டுகோள் விடுத்தார். கோயிலுக்கே போகாத, நாத்திகம் பேசி வந்த திமுகவினர் பலரும்கூட கோயிலுக்குப் போய் அண்ணா குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

இந்த நிலையில், நெய்வேலியில் சொற்பொழிவாற்றிய வாரியார், மரணம் குறித்து பேசினார். எமன் வந்துவிட்டால் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று சொன்ன வாரியார், எதுகை மோனைக்காக, “கில்லர் வந்துவிட்டால் மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.

அவ்வளவுதான். திமுகவினருக்குத் தெரிந்து கொந்தளித்துவிட்டனர். மின் சப்ளையை துண்டித்துவிட்டு, இருட்டில் மேடையேறி வாரியாரைத் தாக்கிவிட்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close