இரா.குமார்
சம்யோசிதமாக சிலேடையில் பேசி, அனைவரையும் சிரிக்க வைப்பவர் கி.வா.ஜகன்னாதன். சாதரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிரில் இருப்பவர் சொல்வதை வைத்து சிலேடையாக, நகைச்சுவை ததும்பப் பேஎசக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே சிலேடையும் நகைச்சுவையும் கொட்டும். அவருடைய நகைச்சுவை சிலேடைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனைப் பார்க்க, அவருடைய வீட்டுக்குச் சென்றார் கி.வா.ஜ. அவரை வரவேற்று உபசரித்த கலைவாணரின் மனைவி மதுரம், “என்ன சாப்பிடுகிறீர்கள்… காபியா, டீயா?” என்று கி.வா.ஜ-வைக் கேட்டார். கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே “டீயே மதுரம்!” என்றாராம். மதுரம் என்றால் இனிமை, நல்லது என்று பொருள்.
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்டார்.
“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ
ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்தனர். கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.
”ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ. பந்தியில் அமர்ந்திருந்தவர்கள், சாப்பாட்டை மறந்து கி.வா.ஜ. சிலேடையை ரசித்தனர்.
கி.வா.ஜ வீட்டு வேலைக்கார அம்மா பெயர் விசாலம். அந்த அம்மா கொஞ்சம் குண்டாக இருப்பார். ஒரு நாள் அவர் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது, பெருக்கும் இடத்தில் கி.வா.ஜ. நின்றுகொண்டிருந்தார். கி.வா.ஜ.விடம் அவர் மனைவி ”கொஞ்சம் நகர்ந்துக்குங்க, விசாலம் பெருக்கணும்” என்றார். அதுக்கு கி.வா.ஜ உடனே, ”விசாலம் இன்னுமா பெருக்கணும்” ( விசாலம் இன்னுமா பெருத்து குண்டாகணும்) என்று கேட்டார்.
இப்படி கி.வா.ஜ. வாயைத் திறந்தாலே சிலேடையும் நகைச்சுவையும்தான். அவருடைய நகைச்சுவை பற்றி இன்னும் பார்ப்போம்.