இரா.குமார்
சட்டப் பேரவையில், எதிரில் இருப்பவர்களைத் தன் பேச்சாற்றலால் மடக்குவதில் வல்லவர் கருணாநிதி. இதற்கு அவருடைய அபார நினைவாற்றல் கை கொடுக்கும்.
கடந்த 1989ல் கருணாநிதி முதல்வராக இருந்தார். கா.கா.தே.கா. என்ற கட்சியை நடத்தி வந்த குமரி அனந்தன் பின்னர் காங்கிரசில் இணைந்து சட்ட மன்ற உறுப்பினரானார். சட்டப் பேரவையில் ஒருநாள் பேசும்போது, “தமிழ் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பேரியக்கம் பாடுபட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருந்த மனியார்டர் ஃபாரத்தை தமிழிலும் கொண்டு வந்தது காங்கிரஸ் பேரியக்கம்தான்” என்றார்.
ஆளுங்கட்சியான திமுக உறுப்பினர் சற்குண பாண்டியன் எழுந்து, “நீங்கள் கா.கா.தே.கா. கட்சி நடத்தும்போதுதானே தமிழில் மணியார்டர் ஃபாரம் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றீர்கள். அது எப்படி காங்கிரசின் சாதனை ஆகும்?” என்று கேட்டார்.
குமரி அனந்தன் உடனே, “நான் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்துவிட்டதால், நான் செய்த சாதனைகளும் காங்கிரஸ் இயக்கத்தையே சேரும்” என்றார்.
முதல்வர் கருணாநிதி எழுந்து, “நீங்கள் கா.கா.தே.கா. கட்சி நடத்தும்போது 1983ல், இலங்கைத் தமிழருக்காக போராடியபோது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா கந்தி அம்மையார் படத்தை எரித்தீர்களே.... அந்த பெருமையும் காங்கிரசைச் சேருமா?” என்று கேட்டார். வாயடைத்துப் போனார் குமரி அனந்தன். பேரவையில் சிரிப்ப்லை எழுந்தது.
1971-76ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்தது இது. சட்டப் பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி, “தமிழ்..தமிழ்.. என்று இந்த அரசு சொல்கிறது. ஆனால் தமிழ் இலக்கியம் சொல்வதுபடி நடப்பதில்லை. வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கு அழகு என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி அரசு நடக்கவில்லை” என்றார்.
கருணாநிதி எழுந்து, ”அது திருவள்ளுவர் சொன்னதல்ல. ஔவையார் சொன்னது” என்றார்.
உண்மையில் அது ஔவையார் சொன்னதும் அல்ல. அதிவீரராம பாண்டியன் எழுதிய கொன்றை வேந்தன் என்ற நீதி நூலில் இடம் பெற்றுள்ள வரி இது.
இதைக் கேலி செய்து, “சட்டசபையில் தமிழ் விளையாடுகிறது” என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி வெளியிட்டது துக்ளக் இதழ்.
அபார நினைவாற்றலும் தமிழில் கரை கண்டவருமான கருணாநிதியே தவறாக சொல்லிவிட்டார். ஆனைக்கும் அடி சருக்கும்தானே.