இரா.குமார்
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, நாஞ்சில் மனோகரன் அவை முன்னவராக இருந்தார். ஒரு நிகழ்வு தொடர்பாக சட்டப் பேரவையில் முதல்வர் எம்ஜிஆர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உடல் நலக்குறைவு காரணமாக, பேரவைக்கு முதல்வர் வரவில்லை. இது பற்றி கருணாநிதிக்கும் நாஞ்சில் மனோகரனுக்கும் நடந்த சுவையான விவாதம்
கருணாநிதி: முதல்வர் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?
நாஞ்சில்: முதல்வருக்கு உடல் நலமில்லை. அவர் சபைக்கு திங்கட்கிழமை வந்து அறிக்கை தாக்கல் செய்வார்
(திங்கட்கிழமையும் வந்தது. எம்.ஜி.ஆரும் வரவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.)
கருணாநிதி: ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை..?
நாஞ்சில்: நாளை செவ்வாய்க்கிழமை. நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
கருணாநிதி: செவ்வாய் வெறும் வாய் ஆகிவிடக்கூடாது…
நாஞ்சில்: எதிர்க்கட்சித் தலைவரை நான் ஒருமையில் அழைப்பதற்காக வருத்தப்படக் கூடாது. செவ்வாயில் நீ வெல்வாய்…
கருணாநிதி: அடிக்கடி நீ இப்படித்தான் சொல்வாய்..!
இப்படி நடந்த விவாதத்தைக் கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப் பேரவையில் பேசிய முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப், “கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைந்திருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?’என்று கேட்டார்.
முதல்வர் கருணாநிதி உடனே எழுந்து, “அரசாங்கம் ஏற்கனவே, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது” என்றார்.
நடிகர் பார்த்திபன், தான் எழுதிய “கிறுக்கல்கள்” கவிதை நூலை கருணாநிதியிடம் கொடுத்தார். அடுத்த முறை சந்தித்தபோது, ”கிறுக்கல்கள் படிச்சிங்களா?” என்று கருணாநிதியிடம் பார்த்திபன் கேட்டார். கருணாநிதி உடனே, “உங்கள் கவிதைகளைப் படித்தேன். ஒவ்வொன்றும் படி தேன்” என்றார்.
எதிர்க்கட்சியினர் பேசுவதை வைத்தே அவர்களை கேலி செய்வதும், வாயடைக்கச் செய்வதும் கருணாநிதிக்குக் கைவந்தகலை. ஜெயலலிதா ஒருமுறை, “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்றார். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.