இரா.குமார்
” இம்மை – மறுமை” என்ற தலைப்பில் பேச கி.வா. ஜகன்னாதனை அழைத்திருந்தனர். அவர் பேச ஆரம்பித்ததும் மைக் ரிப்பேராகிவிட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே “இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என, தான் பேசும் தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்:
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ., “குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் குமரி அனந்தன்.
கி.வாஜ. உடனே, “அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” என்றார். கூட்டத்தினரின் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
புடவையின் சிறப்பு:
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இல்லை.
வீட்டு வாயில் முன்பு, வெய்யில் படும்படியாகக் புடவையைக் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த கி.வா.ஜ., ”இது என்ன புடவை தெரியுமா?” என்று நண்பரைக் கேட்டார்.
‘ஏன் சாதாரணப் புடவைதானே?’ என்றார் நண்பர்.
‘அல்ல இந்தப் புடவைக்கு ஒரு சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!’ என்றார் கி.வா.ஜ.
கி.வா.ஜ. உடல் நலம் மிகவும் பாதிக்கபட்டு, படுக்கையில் இருந்தார். அப்போது அவருடைய மகள் அவர் வாயில் பாலை ஊற்றி விட்டு பக்கத்திலிருந்த துணியால் அவர் வாயை துடைத்தார்.
கி.வா.ஜ. முகம் சுளித்தார். “அப்பா பாலும் கசக்கிறதா? என்று அவர் மகள் கேட்டார். அதற்கு அவர், “ பாலும் கசக்கவில்லை. அதை துடைத்த துணியும் கசக்கவில்லை” என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் கூறினர்.