இரா. குமார்
பழைய திருவிளையாடல் படம் வெளியான நேரம். வாரியார் சுவாமிகள் ஒரு கோவில் திருவிழாவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். சொற்பொழிவுக்கு இடையில் வாரியார் கேள்விகள் கேட்பார்.
அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி "தம்பபி! தருமிக்கு பாட்டு
எழுதி கொடுத்தது யாரு?" என்று கேட்டார்கள்.
அந்த பையன் சட்டென்று "சிவாஜி " என்று கூறினான். இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.
வாரியார், கூட்டத்தை பார்த்து "என் சிரிக்கிறிங்க.பையன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறான்". வடக்கில் மரியாதைக்காக "ஜி" போட்டு அழைப்பது வழக்கம். தான் நேருவை "நேருஜி" என்றும், காந்தியை "காந்திஜி" என்று அழைப்பது போல இந்த பையன் சிவா ஜி ன்னு சொல்லி இருக்கிறான்” என்றார். வாரியாரின் நகைச்சுவை திறமை கண்டுகூட்டம் வியந்தது
முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான விளக்கம் சொல்லுவார்.
“முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்” என்று சொல்வார் வாரியார்.!
ஒருமுறை சொற்பொழிவிம் போது, கள் மயக்கத்தைப் பற்றிப் பேசிய வாரியார், “கள்ளைக் குடித்தால்தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை 'நீ' என்று சொல்வதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்” என்றார்.
கரூரில் வாரியார் தொடர் சொற்பொழிவு ஆற்றினார். நிறைவு நாளன்று. பாராட்டிப் பேசியவர், 'மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?' என்ற ஏக்கத்தோடு, 'மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?' என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது