தமிழ் விளையாட்டு 7 : காளிமுத்துவுக்கு கை கொடுத்த தமிழ்

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கும் பின்னர் அதிமுகவுக்கும் வந்த போது, தனது விசுவாசத்தை காட்ட தமிழ் உதவியது எப்படி?

இரா.குமார்

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஜெ. அணி என்றும், எம்ஜிஆர் மனைவி ஜானகி தலைமையில் ஜா. அணி என்றும் இரண்டு அணியாக செயல்பட்டனர். முன்னாள் அமைச்சர் காளிமுத்து, ஜா. அணியில் இருந்தார்.

அரசியலுக்கு ஜானகி முழுக்குப் போட்டதையடுத்து, ஜெ. தலைமையிலான அணியே அதிமுக என்றானது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும், ஜெ. தலைமையிலான அதிமுகவுக்கு திரும்பக் கிடைத்தது.

எம்ஜிஆர் இருக்கும்போதே, அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் காளிமுத்து. ஜெ. தலைமையிலானதுதான் அதிமுக என்று ஆனபிறகு, திமுகவில் சேர்ந்தார் காளிமுத்து. அப்போதும் மிகவும் கடுமையாக, எழுத முடியாத வார்த்தைகளால் ஜெயலலிதாவை விமர்சித்தார். 1991 தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

மதுரையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார் காளிமுத்து. அதன்

பின்னர் திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த பயிற்சிப் பட்டறையில் காளிமுத்து பேசினார். அவர் பேசியது…

’இங்கே நான் பயிற்சி அளிக்கவா வந்திருக்கிறேன்? பயிற்சி பெற வந்திருக்கிறேன்.

இடையிலே சிலகாலம் தடம் மாறி, தடுமாறி, தடுக்கி விழுந்து.. கைகளிலும் கால்களிலும் காயம் பட்டு, உங்கள் பாச முகங்களில் தவழும் புன்னகையையே என் புண்ணுக்கு மருந்தாக பூசிக் கொள்ள வந்திருக்கிறேன்.

புரட்சித் தலைவி மீதான விசுவாசத்தையே சுவாசமாக கொண்டிருக்கும் உங்களிடம், விசுவாசத்தைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்.’

இப்படிப் பேசினார் காளிமுத்து. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது பேரவைத் தலைவர் ஆக்கப்பட்டார் காளிமுத்து. ஜெயலலிதாவுக்கு தன் விசுவாசத்தைக் காட்ட வேண்டும். ஆனாலும் பேரவைத் தலைவர் என்பதால் நேரடியாக ஜெயலலிதாவை வணங்குகிறேன் என்று சொல்ல முடியாது. ஆனாலும் தமிழாற்றலால், தன் பேச்சின் மூலம் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்டினார்.

பேரவைத் தலைவர் பதவி ஏற்றதும், அவையில் தன் முதல் பேச்சை

தாயை வணங்குகிறேன்
தமிழ்த் தாயை வணங்குகிறேன்

என்று தொடங்கி, இரண்டு பொருள்படப் பேசி, ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்டினார் காளிமுத்து.

அடடா… எப்படியெல்லாம் கைகொடுக்கிறது தமிழ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close