இரா.குமார்
மேடைப் பேச்சு ஒரு அருமையான கலை. எல்லாராலும் மேடையில் பேச முடியாது. மேடை ஏறி மைக் முன்பு நின்றால் பலருக்கு, சொல்ல வந்ததே மறந்துவிடும். சிலருக்கு நா குழறும். தொண்டை அடைக்கும். கால்கள் நடுங்கும். எனினும் போகப் போக இந்த நிலை மாறிவிடும். ஆனாலும் எதிரில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்து, அவர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு மேடையில் பேசுவது வெகு சிலரால் மட்டுமே முடியும்.
மேடைத் தமிழ் வளர்ந்தது அண்ணா காலத்தில்தான். அழகு தமிழ், அடுக்கு மொழியில் பேசி மேடைத் தமிழ் வளர்த்தார் அண்ணா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு பேசச் சென்றார் அண்ணா. அவர் போய்ச் சேர தாமதமானதால், கூட்டம் தாமதமாகத் தொடங்கியது. அண்ணா பேச எழுந்தபோது. இரவு பத்தரை மணி.
’மாதமோ சித்திரை. மணியோ பத்தரை; உங்களுக்கோ நித்திரை. அறுக்க வந்துள்ளேன் அண்ணாத்துரை” என்று அடுக்கு மொழியில் பேச்சைத் தொடங்கி கைத்தட்டல் பெற்றார் அண்ணா. மேடைப் பேச்சு மூலம் தமிழ் உணர்வை ஊட்டியவர், அண்ணா. அதனால்தான் திரைப்பாடலில் கூட மேடையில் முழங்கு அண்ணா போல் என்று எழுதினார்கள்.
ஆம். எம்ஜிஆர் நடித்த ’பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில், “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி” என்ற பாடலில் “மேடையில் முழங்கு அண்ணா போல்” என்று ஒரு வரி வந்தது. இந்த வரிக்கு திரைப்படத் தணிக்கைக்குழு அனுமதி தர மறுத்துவிட்டது.(அப்போது காங்கிரஸ் அரசு) பிறகு வேறு வழியில்லாமல், “மேடையில் முழங்கு திருவிக போல்” என்று மாற்றினார்கள். ஆனாலும் இசைத் தட்டுகளில் இப்போதும் அண்ணா போல் என்றுதான் வரும்.
மேடைப் பேச்சில் கருணாநிதியும் வல்லவர். அதுமட்டுமல்ல, மேடையில் மற்றவர் பேசுவதைக் கேட்டு, அதற்கு பதில் சொல்வதிலும், அது பற்றி நகைச்சுவையாக கமெண்ட் அடிப்பதிலும் கருணாநிதி வல்லவர்.
கவிக்கோ அப்துல் ரகுமானின் மணிவிழா ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கருணாநிதியும் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேராசிரியர் மா. நன்னன் பேசுகையில், ‘மேடையில் தயக்கம் இல்லாமல் பேசவேண்டும் என்றால், முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என நினைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
மேடையில் இருந்த கருணாநிதி உடனே, ‘’ நல்ல வேளை நாமெல்லாம் பின்னல்தான் உட்கார்ந்திருக்கோம்’’ என்றாரே பார்க்கலாம். மேடையில் இருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு.