இரா.குமார்
வார்த்தை விளையாட்டில் மட்டுமல்ல, தனக்கு எதிரில் இருப்பவர்களை, வார்த்தை விளையாட்டு மூலம் சூசகமாகப் போட்டுத் தாக்குவதிலும் வல்லவர் கருணாநிதி.
திரைப்பட துறையிலும் சாதனை படைத்தவர் அவர். மணிமகுடம் படத்துக்கு ஒரு பாடல் எழுதினார் கவிஞர் வாலி. அங்கு வந்த கருணாநிதி, “என்னய்யா வாலி... பாடலை பார்க்கலாமா?” என்று கேட்டார். எடுத்துக்கொடுத்தார் வாலி. படித்துப் பார்த்த கருணாநிதி, “பிழை இருக்கே... வல்லினம் வர வேண்டிய இடத்தில் ( புரியும்படி சொல்லணும்னா பெரிய ’ற’ வர வேண்டிய இடத்தில் சின்ன ’ர’ ) வந்திருக்கே” என்றார்.
வாலி உடனே, “நான் சரியா எழுதியிருக்கேன். அதை காப்பி எடுத்த உதவி இயக்குநர்தான் தப்பா எழுதியிருக்கார். நான் எழுதினதைப் பாருங்க” என்று காட்டினார்.
“நீ சரியா எழுதினால் மட்டும் போதாதுய்யா. உதவி இயக்குநர் சரியா எழுதியிருக்காரான்னும் பார்க்கணும். இல்லைன்னா வல்லினம் இடையினம் தெரியாத புல்லினம்னு உன்னை நினைச்சுடுவாங்க” என்று சொன்னார் கருணாநிதி.
கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை அமெரிக்கா போனார். போகும் முன்பு கருணாநிதியைப் பார்த்து, “அமெரிக்கா போறேன். உனக்கு என்ன வாங்கிகிட்டு வரணும்?” என்று கேட்டார். “நல்ல பெயர் வாங்கிட்டு வா” என்றார் கருணாநிதி.
திமுக ஆட்சிக்கு வரும் முன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி, ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வாசம் முடிந்து வெளியே வந்த கருணாநிதி, சட்டப் பேரவைக் கூட்டத்துக்குச் சென்றார்.
கருணாநிதியைப் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி, சிறை வாசம் எப்படி இருந்தது என்பதை, “மாமியார் வீடு எப்படி இருந்தது?” என்று கிண்டலாகக் கேட்டார்.
அவருக்குக் கருணாநிதி சொன்ன பதில்....
“உங்கள் தாய் வீடு நன்றாக இருந்தது”
ஐய்ய்யோ!.. என்ன வார்த்தை விளையாட்டு... எவ்வளவு சூசகம்... கருணாநிதி சொன்னதன் உள் அர்த்தத்தை யோசித்துப் பாருங்கள்.
இப்படி சில நேரங்களில் கருணாநிதியின் வார்த்தை விளையாட்டில் கொஞ்சம் வக்கிரம் எட்டிப் பார்ப்பதும் உண்டு.
பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதும், பேப்பர் பேனா வைத்துக்கொண்டு குறிப்பு எழுதிக்கொள்வது கருணாநிதிக்கு வழக்கம்.
ஒருமுறை அப்படி குறிப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது, பேனா மூடி கீழே விழுந்து, கருணாநிதியின் காலடியில் கிடந்தது. அவர் காலைக் கொஞ்சம் தள்ளி வைத்தால், காலடியில் சிக்கி பேனா மூடி உடையலாம். இதைப் பார்த்த ஆயிரம் விளக்கு உசேன், “கீழே மூடியிருக்கு அண்ணே” என்றார். கருணாநிதி கொஞ்சமும் யோசிக்காமல், “கீழே மூடிதான்யா இருக்கணும்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.