தமிழ் விளையாட்டு 15 : சூடு யாருக்குத் தெரியும்?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், இரா.குமார்.

k.anbalagan - Ponnaiyan

இரா.குமார்

சட்டப் பேரவையில் எதிரில் இருப்பவர்களை தன் பேச்சால், பதிலால் வாயடைக்கச் செய்வதில் வல்லவர் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுகவைச் சேர்ந்த பேராசிரியர் அன்பழகன், இந்தித் திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பேசினார்.

கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் எழுந்து, “சூடு ஆறிப்போன பிரச்னை குறித்து பேராசிரியர் சூடாகப் பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார்” என்றார். உடனடியாக எழுந்த அன்பழகன், “சொரணை உள்ளவனுக்குத்தான் சூடு தெரியும்” என்று பதிலடி கொடுத்தார்.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித்தலைவரான அன்பழகன் ஒருமுறை பேசும்போது எம்ஜிஆர் பற்றிக் குறிப்பிட்டார். “நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, புரட்சி நடிகராக உயர்ந்து, பின்னர் அரசியல் கட்சி தொடங்கி, தமிழக முதல்வராகி, அவருக்க்கு முன்னும் பின்னும் எவரும் பெற்றிராத செல்வாக்கைப் பெற்றிருந்தவர்தான் எம்ஜிஆர்” என்று அடுக்கி அடுக்கி எம்ஜிஆரை அன்பழகன் புகழ்ந்ததைக் கேட்டு அதிமுகவினர் மேசையைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. காரணம் அடுத்து அன்பழகன் சொன்னதுதான். வானளாவ எம்ஜிஆரை புகழ்ந்த அன்பழகன் தொடர்ந்து, “அப்படிப்பட்ட செல்வாக்கு பெற்ற எம்ஜிஆரைப் பற்றிப் பேச உங்கள் யாருக்கும் தகுதி இல்லை” என்றார். அவ்வளவுதான். அளுங்கட்சியான அதிமுகவினர் கப்சிப் என்றாகிவிட்டனர்.

2001 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார். பொன்னையன் நிதியமைச்சராக இருந்தார். திமுக தலைவர் கருணாநிதி, துறைமுகம் தொகுதியில் போட்ட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும் சட்டப் பேரவைக்குக் கருணாநிதி போவதில்லை. இது பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பொன்னையன், “உங்கள் கட்சித் தலவர்தான் பேரவைக்கு வருவதில்லையே. அவர் ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரையாவது நிறுத்தலாமே. இதன் மூலம் உங்கள் கட்சியைச் சேர்ந்த வேறு யாருக்காவது, சட்டப் பேரவை உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்குமே” என்றார்.

எதிர்க்கட்சியான திமுக தலைவர் அன்பழகன் எழுந்து, “அதைக் கட்சிதான் முடிவு செய்யும்” என்றார்.

பொன்னையன் எழுந்து, “கட்சியும் அவரே… தலைவரும் அவரே. கட்சி முடிவு செய்யும் என்று சொல்கிறீர்களே” என்றார்.

சட்டென்று அன்பழகன் எழுந்து, “கட்சியும் அவரே; தலைவரும் அவரே. இரண்டுக்கும் பொதுச் செயலாளர் நானே” என்றார்.

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil game who knows hot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express