தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட நாளான டிசம்பர் 27, 1956-ஐ நினைவு கூறும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் ஒரு வாரத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது.
கடந்த, 2019-20ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை அறிவிப்பில், தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட டிசம்பர் 27, 1956 நாளை நினைவு கூறும் வகையில், ஆட்சிமொழி சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்கு கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் படி, டிசம்பர் 23ம் (இன்று) முதல் டிசம்பர் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் அனைத்து மவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவர்களுடன் இணைந்து, சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட உள்ளது.
மேலும், அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வாரத்துக்கான ஸ்டிக்கர்களை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையை வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது.
அந்த வகையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எழுத்தாளர் அழகிய பெரியவன் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். தமிழ்ச் செம்மல் புலவர் பதுமனார் கோப்புகளில் தமிழ் எனும் தலைப்பில் பேசினார். பின்னர், அது குறித்து அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"