தமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்

காதலனிடம் ஊடல் கொள்ளும் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை திருவள்ளுவர் சொன்னதை அழகாக எடுத்துரைக்கிறார், இரா.குமார்.

காதலனிடம் ஊடல் கொள்ளும் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை திருவள்ளுவர் சொன்னதை அழகாக எடுத்துரைக்கிறார், இரா.குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Suvai - Thirukkural Drama - Ra. Kumar

இரா. குமார்

”புலவி நுணுக்கம்” அதிகாரத்தில் ஒரு நாடகக் காட்சியையே கண்முன் நிறுத்துகிறார் வள்ளுவர். புலவி என்றால் ஊடல். ஊடலின் போது, அவன் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் நுட்பமாக பொருள் கொண்டு ஊடுகிறாள் அவள். எப்படி என்று பார்ப்போமா?

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.

Advertisment

பூக்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டு வருகிறான் தலைவன். பார்த்தாள் தலைவி. ஊடலுக்குக் காரணம் கிடைத்துவிட்டது அவளுக்கு. ”ஒரு நாளும் இப்படி அலங்கரித்துக்கொள்ளாத நீ...இன்று மட்டும் ஏன்? வேறு எவளையோ காதலிக்கிறாயா? அவளுக்காகத்தான் இப்படி பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு வருகிறாயா?” என்று கேட்டு ஊடல்கொள்கிறாள் தலைவி.

அவன் சொல்கிறான்...

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

யாரைவிடவும் உன்னைத்தான் அதிகம் காதலிக்கிறேன் என்று சொல்கிறான் தலைவன்.. “யாரைவிடவுமா? யாரைவிடவுமா? எத்தனை பேரைக் காதலிக்கிறாய்? அவர்கள் யாரைவிடவும் என்னை அதிகம் காதலிக்கிறாயா? அப்படியென்றால் ஒரு நாள் என்னை விட்டுப் பிரிந்து விடுவாயா?” என்று சொல்லி ஊடுகிறாள்.

என்னடா வம்பாப் போச்சு என்று, “ இந்தப் பிறவியில் உன்னைப் பிரியேன்” என்று சொல்கிறான்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்

Advertisment
Advertisements

இந்தப் பிறப்பில் பிரிய மாட்டேன் என்றால், அடுத்த பிறவியில் என்னை பிரிந்துவிடுவாயா என்று கண்கலங்குகிறாள்.

”ஐயய்யோ..அப்படியெல்லாம் இல்லை... எப்போதும் உன்னையேதான் நினைக்கிறேன்” என்று சொல்கிறான். ”என்னையேதான் நினைக்கிறாயா? மறந்தால்தானே நினைக்க முடியும்? அப்படியென்றால் அடிக்கடி என்னை மறந்துவிடுகிறாய் அப்படித்தானே?” என்று கேட்டு ஊடல்கொள்கிறாள்.

உள்ளினேன் என்றேன் மற்றென்னை மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்த கனள்.

இதோடு முடிய வில்லை. இன்னும் 3 குறள் இருக்கிறது. அதில் இன்னொரு நாடகக் காட்சியை அடுத்து காண்போம்.

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

Tamilsuvai Ra Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: