தமிழ்ச்சுவை : கள்வன் மகன்

பாசத்தின் மிகுதியால் தலைவனை கள்வன் மகன் என்று காதலி சொல்லுவாள் என்பதை கலித்தொகை பாடல் மூலம் தமிழ்ச்சுவையில் சொல்கிறார், இரா.குமார்.

இரா. குமார்

அன்பிற்குரியவர்களை நாம் செல்லமாகத் திட்டுவது உண்டு அல்லவா? அப்படி, சங்க இலக்கியத்தில் காதலனை, ”திருட்டுப் பயல் மகனே” என்று செல்லமாகச் சொல்கிறாள் காதலி. இதை நாடகக் காட்சி போல காட்டுகிறார் கபிலர். கலித்தொகையில் வரும் அந்தப் பாடல் பற்றிப் பார்ப்போமா?

குடிக்க தண்ணீர் கேட்பது போல தலைவன் தன் வீட்டுக்கு வந்து சென்றதை தோழியிடம் சொல்வதாக அமைந்த பாடல் இது.

நானும் என் தாயும் வீட்டுக்குள் இருந்தோம். வாசலில் ஒருவன் வந்து நின்று, “குடிக்கத் தண்ணீர் தருவீர்களா?” என்று கேட்டான். உடனே என் தாய், ”யாரோ குடிநீர் கேட்கிறார்கள் கொண்டுபோய் கொடு” என்றாள். வந்திருப்பது யாரென்று தெரியாமல் நானும் தண்ணீர் கொண்டு சென்றேன். வாசலில் தலைவன் நின்றுகொண்டிருந்தான்.

தண்ணீர் சொம்பை வாங்கியவன், என் முன் கையைப் பிடித்துவிட்டான். அதிர்ச்சியடைந்த நான், “அம்மா இவன் செய்ததைப் பார்” என்று கத்திவிட்டேன். அன்னை அலறியடித்து ஓடி வந்தாள்.

“என்ன செய்தான்?” என்று கேட்டாள்.

“தண்ணீர் குடிக்கும்போது விக்கினான்” என்று சொல்லி சமாளித்தேன். அவன் முதுகை நீவிவிட்டாள் அன்னை.

அப்போது, கொல்வது போல ஓரக்கண்ணால் என்னைப் பார்த்து, புன்னகையால் என்னைக் கூடினான் அந்தக் கள்வன் மகன்.

அடடா…என்ன இனிமை….

“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்.

(கட்டுரையாளர் இரா.குமார், தமிழ் இலக்கியத்தில் எம்பில் பட்டம் பெற்றவர். பத்திரிகை துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். இதுவரையில் பத்து நூல்கள் எழுதியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் சிறந்த எழுத்தாளர் விருதை பெற்றுள்ளார். தர்மபுரம் இளைய சன்னிதானம் குமாரசாமி தம்பிரானிடம் இறைத் தமிழ் வேந்தர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.)

×Close
×Close