பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் மரணம்; எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.

By: Updated: January 6, 2021, 05:09:41 PM

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.

தமிழ் இலக்கிய உலகில் 1970களில் தனது புனலும் மணலும் நாவல் மூலம் எழுத்தாளராக அறிமுகமான எழுத்தாளர் ஆ.மாதவன். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். திருவனந்தபுரத்தில் பாத்திரக்கடை வைத்திருந்த இவர் மோகபல்லவி, கடைத்தெருக் கதைகள், காமினிமூலம், மாதவன் கதைகள், ஆனைச்சந்தம், அரேபியக் குதிரைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் கிருஷ்ணப் பருந்து, தூவானம், யானை சந்தம் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவருக்கு 2009ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. கடைத்தெரு கலைஞன் என்று வாசகர்களால் போற்றப்படும் எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய ‘இலக்கிய சுவடு’ என்ற சிறுகதை தொகுப்புக்கு 2015ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு கடந்த வாரம் மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அவர்சிகிச்சை பலனின்றி காலமானார்.

எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “புனலும் மணலும், கிருஷ்ணப் பருந்து உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்தார். கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன், அஞ்சலி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் குறிப்பிடுகையில், “மூத்த தமிழ்ப்படைப்பாளி ஆ.மாதவன் இன்று காலமானார். காலமானார் என்ற சொல் அறிவியக்கவாதிக்கே மிகவும் பொருந்துவது. இனி அவர் தமிழிலக்கியம் என அறியப்படும் காலத்தின் ஒரு பகுதி.

திருவனந்தபுரம் சாலைத்தெருவை மையமாக்கி கதைகளை எழுதிய ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன் என அழைக்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது நிறுவப்பட்டபோது முதல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரைப்பற்றி நான் எழுதிய கடைத்தெருவின் கலைஞன் என்னும் நூலும் வெளியிடப்பட்டது.

ஆ.மாதவனுக்கு அகவை87 .சென்ற சில ஆண்டுகளாகவே நோயுற்றிருந்தார். அவருடைய மருமகன் எனக்கு அனுப்பிய செய்தி இது

பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம். எங்கள் தாய்மாமா – திரு. ஆ. மாதவன் அவர்கள், திருவனந்தபுரத்தில்
இன்று பிற்பகல் 12.30 மணியளவில், உடல் நலக் குறைவால், காலமாகி விட்டார்கள்.

நாளை (06.01.2021) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் சாலை தெருவில் இருந்து தமிழ் வாசகர்களுக்கு பல அற்புதமான கதைகளை எழுதிய கடைத்தெரு கதைசொல்லி எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவுக்கு எழுத்தாளர்கள் பலரும் அஞ்சலி தெரிவித்துள்ளனர். அவருடைய நல்லடக்கம் இன்று காலை நடைபெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil writer a madhavan passes away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X