Advertisment

எது உங்களைத் தடுக்கிறது? விடுதலை நாளேட்டை நோக்கி கேள்வி எழுப்பிய எழுத்தாளர் அழகிய பெரியவன்

வைரமுத்து அவர்களையோ, சு.ப.வீ அவர்களையோ, மதிமாறன் அவர்களையோ, இப்படி அவர்களின் பெயர்களைப் போட்டு….என்ற எழுத்தாளர் என்று குறிப்பிட்டு எழுதுவீர்களா? அல்லது ஒரு நடிகரின் பெயரைப் போட்டு 'என்ற நடிகர்….' என்று உங்களால் எழுத முடியுமா? என்று எழுத்தாளர் அழகிய பெரியவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Writer Azhagiya Peryavan, Writer Azhagiya Peryavan, Writer Azhagiya Peryavan rises question at Viduthalai news, விடுதலை நாளேடு, எழுத்தாளர் அழகிய பெரியவன், எழுத்தாளர் அழகிய பெரியவன் கேள்வி, விடுதலை, திராவிடர் கழகம், dravidar kazhagam, dk, tamil literature, dalit literature

நவீன தமிழ் இலக்கியத்தின் முகியமான எழுத்தாளர் அழகிய பெரியவன் நூல் குறித்து விடுதலை நாளேட்டில் எழுதப்பட்ட ஒற்றைப்பத்தியில், அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர் என்று அலட்சியமாக குறிப்பிடப்பட்டிருப்பதாக எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

எழுத்தாளர் அழகிய பெரியவன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர். தனது காத்திரமான படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார். தமிழ் தலித் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். தீட்டு, குறடு, நெரிக்கட்டு, கிளியம்மாவின் இளஞ்சிவப்புக் காலை, சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள், திசையெங்கும் சுவர்கள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும் , நீ நிகழ்ந்தபோது, அரூப நஞ்சு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் தகப்பன்கொடி, வல்லிசை, யாம் சில அரிசி வேண்டினோம், சின்னக்குடை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல், வெட்கம் கெட்ட நாடு, மூடிய முகங்களில், பெருகும் வேட்கை, மீள்கோணம், தேநீர் மேசை, வகுப்பறையில் சாதி, மறைத்துப் பேச என்ன இருக்கு உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கணையாழி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, பெரியார் விருது, கு.அழகிரிசாமி சிறுகதை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழின் முக்கிய இலக்கிய இதழ்களிலும் முன்னணி இதழ்களிலும் அழகிய பெரியவன் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் அழகிய பெரியவன் தமிழ் இலக்கியத் தளத்தில் மட்டுமல்லாமல் தலித் அரசியல், பெரியார், அம்பேத்கரியர்கள் மத்தியில் நன்கு அறியபட்டவர். முற்போக்கு அரசியல் முகாம்களில் நல்ல உறவுடன் செயல்பட்டு வருபவர்.

இந்த சூழலில்தான், திராவிடர் கழகத்தில் இருந்து வெளிவரும் விடுதலை நாளேட்டில், ஜூன் 20ம் தேதி முதல் பக்கத்தில் எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய ‘சாதிய தேசியப் போர்’ நூல் குறித்து மயிலாடன் ஒற்றைப்பத்தி எழுதியுள்ளார்.

அதில்தான், எழுத்தாளர் அழகிய பெரியவன் தன்னை‘அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர்’ என்று அலட்சியமாக குறிப்பிட்டுள்ளதாக வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை நாளேட்டில் மயிலாடன் ஒற்றைப் பத்தியில் எழுதியிருப்பதாவது: “அழகிய பெரியவன் என்ற எழுத்தாளரால் எழுத்தப்பட்ட ஒரு நூல் ‘சாதிய தேசியப் போர்’ என்பதாகும். 46 பக்கங்களைக் கொண்டது.

“தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக நின்றவர்கள். சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் உள்நாட்டில் நிலவும் ஜாதிய அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்க ஜாதிகள் பற்றிப் பேசினார்கள்” என்று குற்றஞ்சாட்டுவோர் இன்று வரை உண்டு.

எல்லோரும் விடுதலை விடுதலை விடுதலை என்று கூறிக்கொண்டிருந்தபோது விடுதலைக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பேசியவர்கள் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட மிகச் சிலரான சமூக மாற்றத்திற்காக உழைத்த தலைவர்களே!

இது குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார்?

இந்தியா என்ற உருவாகாத தேசியத்தை ஆளுகிற வெள்ளை அரசு போன பிறகு, அதன் ஆட்சிப் பீடம் ஆளும் (ஜாதிய) வர்க்கத்திற்குள்தான் போகும். அப்படியெனில் இரு அரசுகளுமே ஒன்றுதான்!” என்றார் அம்பேத்கர். “ஆளும் அரசு, ஆளப்போகும் அரசு என்ற இந்த இரு எதிர்மைகள், ஏகாதிபத்தியம், காலனியம் ஜாதியம் என்ற அடிப்படையில், ஒரே தன்மைகளைக் கொண்ட போலி எதிர்மைகள்” என்றார் அன்னல் அம்பேத்கர் (‘சாதிய தேசியப் போர்’ பக்கம் 29)

இதே கருத்தை வேறு சொற்களில் தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

“While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said that they must settile the Brahmin Question. Even while the British Supremacy lasted, otherwise they wouuld have to suffer under the Tyranny of what he called Brahminocracy. (A Hundred years of 'The Hindu' page: 337)

“வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும்போதே பார்ப்பனர் ஆதிக்கத் தன்மை குறித்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும். இல்லையெனில், வெள்ளைக்காரர்கள் வெளியேறிய இந்நாட்டில் ஜனநாயகம் இருக்காது பிராமணநாயகம் தான் இருக்கும் என்று ஈ.வெ.ரா கூறினார்” என்கிறது இந்து நாளேடு வெளியிட்ட நூற்றாண்டு நிறைவு நூல்!

பெரியாரும் - அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது புரிகிறதா?” என்று எழுதப்பட்டுள்ளது.

தனது நூல் குறித்து மயிலாடன் எழுதிய ஒற்றைப் பத்தியில் எழுத்தாளர் அழகிய பெரியவன், தன்னை அலட்சியமாக குறிப்பிடப்பட்டுளது குறித்து முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “இன்றைய விடுதலை நாளேட்டின் முதல் பக்கத்தில் மயிலாடன் அவர்களால் தொடர்ந்து எழுதப்படும் ஒற்றைப் பத்தியில், நான் எழுதிய 'சாதிய தேசியப் போர்' நூல் குறித்த குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மகிழ்ச்சி தான். ஆனால் ஒரு கவளம் சோற்றை அள்ளி வாயில் போட்டவுடன் வசமாக ஒரு கல்லைக் கடித்து விட்டது போல் வலியும் நெருடலும்.

அந்தக் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. 'அழகிய பெரியவன் என்ற எழுத்தாளரால்….' நான் பெரியார் திடலையும், விடுதலை ஆசிரியரையும் பார்த்து கேட்க விரும்புகிறேன். அது என்ன அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர்?

எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய…..என்று எழுதுவதற்கு எது உங்களைத் தடுக்கிறது? என்ன நுட்பமான விலகல் இது?

வைரமுத்து அவர்களையோ, சு.ப.வீ அவர்களையோ, மதிமாறன் அவர்களையோ, இப்படி அவர்களின் பெயர்களைப் போட்டு….என்ற எழுத்தாளர் என்று குறிப்பிட்டு எழுதுவீர்களா? அல்லது ஒரு நடிகரின் பெயரைப் போட்டு 'என்ற நடிகர்….' என்று உங்களால் எழுத முடியுமா?

படித்த காலம் தொட்டு, எழுத வந்த காலம் தொட்டு பெரியாரை உயர்த்திப் பிடிப்பவன் நான். யாரையும் அலட்சிய தொணியில் எழுதியதில்லை. இந்தப் பண்பை நான் பெரியாரிடம் இருந்து கற்றிருக்கிறேன். இனியும் நான் இப்படித் தான் இருப்பேன். ஆனால் நாங்கள் தோழமை பாராட்டும் நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எம் போன்றோரை தூக்கிப் பிடிக்காமல் வேறு யாரை நீங்கள் தூக்கிப் பிடிப்பீர்கள்?

வார்த்தையில் கவனம் தேவை தோழர்களே. ஏனெனில் நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது எம்/ என் அடையாளம்.” என்று சுட்டிக்காட்டி விடுதலை நாளேட்டை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை நாளேடு பெரியார் கொள்கைகளை பரப்பிவரும் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியிடப்படும் செய்தித்தாள். அதிலேயே எழுத்தாளர் அழகியப் பெரியவனை அலட்சியமாக குறிப்பிடப்பட்டிருப்பதை அவரே சுட்டிக்காட்டியது வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

எழுத்தாளர் அழகிய பெரியவனின் இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டுள்ள பெரியாரியர், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அண்ணாமலை அருள்மொழி, “வணக்கம் தோழர். உங்கள் கேள்வியின் நியாயம் சரிதான். ஆனால் அந்தக்கட்டுரை முழுவதும் உங்கள் நூலில் உள்ள பகுதிகள்தான். அதை எழுதியவர் திராவிடர்கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள். அவர் இயக்கப்பணிகள் விடுதலை நாளிதழ்ப்பணிகளுடன் அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த இதழ்களின் அரசியல் கட்டுரைகளைப் படித்து அதற்கான எதிர்வினையாற்றுவார்.

இலக்கியப் பங்களிப்புகள் குறித்து குறிப்புகள் கிடைக்கும்போது தேவையானவற்றை பதிவு செய்வார். எனவே உங்களது இலக்கிய அரசியல் எழுத்துகளை அதிகம் படிக்காமலும் இருந்திருக்கலாம்.அதனால் ஏற்பட்ட சொல்லாடல் இது. தெரிந்து எழுத வேண்டிய நோக்கம் திராவிடர்கழகத்திற்கு இல்லை.

ஆனால் நீங்கள் இப்படி அதனை குற்றப்படுத்த வேண்டுமா ??

பின்னூட்டங்களுல் வந்து விழும் குரல்களின் வேறுபாடுகளைப் பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் “அருமை அண்ணன் அழகிய பெரியவன் அவர்களைக் குறைத்துக் கூறுவது போன்ற எந்த நோக்கமும் இல்லை. பெரியார் விருது வழங்கிப் பெருமை கொண்டது திராவிடர் கழகம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் பின்னூட்டத்துக்கு பதிலளித்துள்ள எழுத்தாளர் அழகிய பெரியவன், “உங்கள் விளக்கத்தை ஏற்கிறேன் தம்பி. என் பதிவின் பொருளையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், “நிச்சயம் அண்ணே… தங்கள் பதிவையும் அவசியம் உரிய கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன். பெரியார் திடலும் விடுதலையும் பெருமை கொள்ளும் உறவு தாங்கள். அதை தாங்களும் அறிவீர்கள். தங்களின் புரிதலுக்கும் நன்றி அண்ணே” என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Periyar Literature Dalit Dravidar Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment