முற்போக்கு எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார்.
கலைஞர்கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான ‘உளியின் ஓசை’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். மேலும், ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ என்ற இவரின் புத்தகம் மிகவும் பிரபலமானது. இப்புத்தகத்தின் முன்னுரையை கலைஞர் கருணாநிதி எழுதினார்.
இளவேனில் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட தோழர் இளவேனில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவர். அவர் நடத்திய ‘கார்க்கி’ சிற்றிதழ், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கொடிக்கப்பலாகவே திகழ்ந்தது.
தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் அடியொற்றி இடதுசாரி இயக்கத்திற்குள் வந்தவர். தமுஎகசவின் முன்னோடி இயக்கமான ‘மக்கள் எழுத்தாளர் சங்கத்தில்’ தோழர் ச.செந்தில்நாதனோடு இணைந்து களமாடியவர். மக்கள் எழுத்தாளர் சங்கக்கூட்டங்களில், அதைத்தொடர்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளில் எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதாக அவர் முன்வைத்த கூரிய விமர்சனங்கள் முற்போக்கு இலக்கியத் திறனாய்வின் பிரிக்கமுடியாத ஒரு முக்கியமான பகுதியாகும்.
ஆழமான தர்க்கமும், மூர்க்கமான முன்வைப்புகளும், உணர்வாவேசமும், வசீகரமும் கொண்ட எழுத்துநடை அவருடையது. 1960,70களில் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தனது எழுத்தின் வாயிலாக இடதுசாரி சிந்தனைக்குத் திருப்பியவர் அவர். கவிஞர் இன்குலாப்பின் முதல் கவிதைத் தொகுப்பிற்காக அவர் எழுதிய முன்னுரையான “மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்” முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் போர்ப்பிரகடனமாகவே அன்றைக்கு வரித்துக்கொள்ளப்பட்டது.
மிகச்சிறந்த ஓவியர் அவர்; அவரது ஒயிலான எழுத்துருக்களும் ஓவியங்களும் பலரது நூல்களுக்கு முகப்பாய் விளங்கின. மாமன்னன் அசோகரது கலிங்கப்போரின் வரலாற்றுப்பின்னணியில் அண்மையில் அவர் எழுதிய “காருவகி” நாவல், தமிழின் வரலாற்றுப் புதினங்களின் வரிசையில் ஒரு முக்கியமான வரவு.
எழுத்து என்பதைத்தவிர வேறு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாதவர், தனது வாழ்வில் பல இன்னலான நாட்களை கடந்துவந்தவர். தொடர்ந்து முற்போக்கு இயக்கத்தோடு தனது தொடர்புகளை அவர் கொண்டிருக்காவிடினும் தமது கலை இலக்கியக்குறிக்கோள்களில் என்றுமே பிறழ்ந்திராத தோழர் இளவேனில் இன்றைக்கு இல்லாது போயிருக்கிறார். புத்தாண்டு தோழர் இளவேனிலின் மரணச்செய்தியோடு தொடங்கியுள்ளது. அவருக்கு நமது அஞ்சலிகள். அவரது பிரிவால் வாடும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் தோழர்கள் அனைவரது துயரிலும் தமுஎகச பங்கேற்கிறது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மு. க ஸ்டாலின் இரங்கல்:
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், " முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரும், கவிஞருமான திரு. இளவேனில் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடதுசாரிச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் “சாரப்பள்ளம் சாமுண்டி” என்ற கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட “உளியின் ஓசை” திரைப்படத்தை இயக்கியவர். எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் இதுதான். முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, “எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார்” என்று கவிஞர் இளவேனிலை மனதாரப் பாராட்டியதை இந்த நேரத்தில் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.
“புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்” என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார்.
இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
தொல். திருமாவளவன் இரங்கல்:
எழுத்தாளர் இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கும் மார்க்சிய பரப்பிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.