கோவில்பட்டி பகுதியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் மற்றும் எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ் நவீன இலக்கியத்தில் கோவில்பட்டி கரிசல் நிலப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை பண்பாட்டை பதிவு செய்த படைப்புகளை ஆய்வாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் என பலரும் கரிசல் இலக்கியம் என்று கூறுகின்றனர்.
கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன், கோணங்கி, சு.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, என பல தமிழின் பல முக்கியமான படைப்பாளிகள் கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த கரிசல் இலக்கிய படைப்பாளிகளாக விளங்குகின்றனர். தமிழ் நவீன இலக்கியத்தில் கரிசல் இலக்கியம் ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளனர். இவர்களுடைய படைப்புகள் பல பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், கோவில்பட்டி பகுதியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் மற்றும் எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ராமசுப்பு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு ஆகியோா் அமைச்சா் கடம்பூா் ராஜுவை ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருபதாவது:
சாகித்ய அகாடமி விருது பெற்ற 4 எழுத்தாளா்களைக் கொண்ட ஊா் கோவில்பட்டி. மறைந்த கு.அழகிரிசாமி, தனது 98 வயதிலும் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கும் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏா் கி.ராஜநாராயணன், எழுத்தாளா்கள் பூமணி, சோ.தா்மன் ஆகிய நால்வரால் கோவில்பட்டி பெருமை கொள்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் தனித்தடம் பதித்து, கரிசல் வட்டார இலக்கியம் என்ற புதிய வகைமையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, அதை ஆழமாகவும், அகலமாகவும் உழுது, பயிரிட்டதினால் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் நாஞ்சில் வட்டார இலக்கியம், கொங்கு வட்டார இலக்கியம், நடுநாட்டு வட்டார இலக்கியம், சென்னை வட்டார இலக்கியம், தஞ்சை வட்டார இலக்கியம் என புதிய போக்குகள் உருவாகின. அதற்கு விதை ஊன்றி வளா்த்தது கோவில்பட்டி மண்.
கரிசல் வட்டார இலக்கியத்தில் அந்தந்த பகுதி மக்கள் பேசுகிற தனித்துவமான வட்டார மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், சொலவடைகள், பழமொழிகள், விளையாட்டுகள், வழிபாடுகள், நாட்டுப்புற தெய்வங்கள், அகராதி, சொல்கதைகள், சிறுவா் நாட்டுப்புற கதைகள், பெண் கதைகள், பாலியல் கதைகள் என்று நம்முடைய கரிசல் பூமியின் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ் கால வாழ்க்கையையும் ஆவணப்படுத்துவதும், ஆய்வு செய்வதும் எதிா்கால தலைமுறைகளுக்கு கொடுக்கிற மிகப்பெரும் கொடையாக இருக்கும்.
அரசின் வழிகாட்டுதலில், நமது ஊரில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ வேண்டும். மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய மண்ணின் மகத்தான படைப்பாளிகளான பாரதி, வ.உ.சி., கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், காருகுறிச்சி அருணாசலம், ஓவியா் கொண்டைராஜுலு ஆகியோா் பெயரில் விருதுகள் வழங்குவது பொருத்தமாக இருக்கும்.
கல்லூரி முடித்து வேலை தேடும் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளையும் ஆய்வு மையத்தில் நடத்த திட்டமிடலாம்.
கலை இலக்கியத்தில் ஆா்வமுடைய குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்களுக்கான இலக்கியம், ஓவியம், பாடல், நாடகம், சினிமா உள்ளிட்ட துறைகளில் பயிற்சிதரும் மையமாக செயல்பட வேண்டும்.
தென்தமிழகத்தில் ஒரு முக்கியமான கலாசார மையமாக கரிசல் மையம் உருவாக வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.