இரா.குமார்
பாரதியார் இளம் வயதிலேயே பெரும் புலமை பெற்றிருந்தார். இதைப் பார்த்து, காந்திமதி நாதன் என்பவர் பொறாமை கொண்டார். பாரதியாரை மட்டம்தட்ட வேண்டும் என்பதற்காக, ”பாரதி சின்னப்பயல்” என்று இறுதி அடி வரும்படி ஒரு பாடல்சொல் பார்ப்போம் என்று பாரதியாரிடம் சொன்னார்.
பாரதியார் தயங்கவில்லை. அடுத்த நிமிடமே,
காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்
என்று பாடினார்.
பாரதி என்பதை பார் அதி என்று பதம்பிரித்து காந்திமதிநாதனை வெட்கப்படும்படிச்
செய்தார் பாரதியார்.
அண்ணா ஒருமுறை, மேடையில் அடுக்கு மொழியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, கூட்டத்தில் ஒருவர் எழுந்து, ”இதுபோல் ஆங்கிலத்தில் அடுக்கு மொழியில் உங்களால் பேசமுடியுமா?” எனக் கேட்டார்.
”இப்படிக் கேட்டது யார்?” என்று கேட்டார் அண்ணா. கேள்வி கேட்டவர் பயத்துடன் எழுந்து நின்று SORRY என்றார்.
அண்ணா உடனே, I am not a lorry to carry your sorry என்றார்.
கேட்டவர் உட்பட எல்லோரும் இதை நன்கு ரசித்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர் வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபத்தில், "இந்தப் படத்தில் நீ பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
வாலி உடனே, "என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது” என்றார்.
ஏன் முடியாஅது ர்ன்று கேட்டார் எம்ஜிஆர்.
படத்தின் பெயர் உலகம் சுற்றும் "வாலி"பன். அந்தப் பெயரிலேயே என் பெயரும் இருக்கே" என்றார் வாலி. எம்.ஜி.ஆரும் கோபத்தை மறந்து ரசித்தார். அந்தப் படத்துக்கு பாடல் எழுதினார் வாலி.
காவடிச்சிந்து பாடுவதில் புகழ் பெற்றவர் புலவர் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் ஒரு குறு நில மன்னரின் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் ஒரு ஏழை விவசாயி அவரிடம் வந்து, "அய்யா... மன்னரிடம் சொல்லி எனக்கொரு ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கித் கொடுங்கள்" என்று கேட்டார்.
ரெட்டியார் உடனே, " நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும்.. ஒன்று நடக்காது..!" என்றார். விவசாயியின் முகம் வாடி விட்டது. சிரித்தபடி ரெட்டியார் சொன்னார், " கவலைப் படாதீர்கள்.. நீங்கள் கேட்டவை கிடைக்கும்.. அதில் ஆடு 'நடக்கும்.'. அரிசி மூட்டை 'நடக்காது' .. ! இதைத்தான் அப்படிச் சொன்னேன" என்றாராம்!