தமிழறிஞர்கள் எழுதிய நூல்களை வேறொருவர் பெயரிலும், ஒரே நூலை வெவ்வேறு ஆசிரியர், பதிப்பகங்களின் பெயர்களிலும் வெளியிட்டு நூலக ஆணை பெற்றிருக்கும் மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது. நூலகத்துறையை பணமீட்டும் குறுக்கு வழியாக கருதும் சில பதிப்பாளர்கள் பொது நூலகத்துறையின் அதிகாரிகளை உடந்தையாக்கிக்கொண்டே இந்த மோசடியைச் செய்திருக்கமுடியும்.
கடைசி பத்தாண்டுகளில் பெருமளவில் நடந்துள்ளதாக தெரியவரும் இதுபோன்ற மோசடிகளால் நூலகங்கள் குப்பைக்கிடங்கின் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளன. இதேநிலை தொடருமாயின், நூலகத்தின் மீதான நம்பகம் பாதிக்கப்படுவதுடன் வாசகர்களின் ஆர்வமும் குன்றிப்போகும் கெடுநிலை வரக்கூடும். நூலகத்துறையை உள்ளிருந்து அரித்துத் தின்னும் இந்தக் கரையான்களுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன், இவர்கள்மீது பொது நூலகத்துறையும் தமிழ்நாடு அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
நூலக ஆணைக்காக ஒதுக்கப்படும் நிதியை குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் குறுக்கு வழியில் நூலக ஆணை பெற்று அபகரித்துவிடுகின்றன என்கிற குற்றச்சாட்டு நீடிக்கும் நிலையில் இப்போது இம்மாதிரியான புதுவகை மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொது நூலகத்துறை ஆண்டுதோறும் வெளியாகக் கூடிய புதிய நூல்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் பாரபட்ச மற்றும் தெரிவுசெய்து நூலக ஆணை வழங்கவேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் எழுப்பிவரும் கோரிக்கையுடன் தமுஎகச ஒன்றுபடுகிறது.
பொருளாதார நிலை, அணுகும் வாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் சொந்தமாக நூல்களை வாங்கிக்கொள்ள முடியாத மாணவர்கள், ஆய்வாளர்கள், படிப்பாளிகள் என பலரும் மேலதிகத் தேவைகளுக்காக நூலகங்களையே பெரிதும் சார்ந்துள்ளனர். இத்தேவையை நிறைவு செய்யும்விதமாக அரசு நூலகங்களும் தனியார் நூலகங்களும் பெரும்பங்காற்றும் தனித்துவத்தைக் கொண்ட தமிழ்நாட்டின் நூலகக் கட்டமைப்பினை ஊழலும் பாரபட்சமும் அற்றதாக வலுப்படுத்துவதற்கு பொது நூலகத்துறையும் தமிழ்நாடு அரசும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“