இரா.குமார்
விசுவாமித்திர முனிவருடன் மிதிலைக்குச் சென்ற ராமன், யாராலும் அசைக்கக் கூட முடியாத சிவ தனுசு என்னும் வில்லை ஒடிக்கிறான். சீதையை மணம் முடிப்பதற்கான தகவல், அயோத்தி மன்னனும் இராமனின் தந்தையுமான தசரதனுக்கு சொல்லப்படுகிறது. மணம் முடிப்பதற்காக, உடனே தனது படை பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்படுகிறார் தசரதர். அவருடைய படைகள், ஊழிக்காலத்தில் பொங்கிப் பெருகும் கடல் போல ஒன்று சேர்ந்து புறப்பட ஆரம்பித்தன. படைகள் முன்னே செல்ல இறுதியில்தான் தன் பரிவாரங்களுடன் மன்னர் செல்வார். படை செல்லட்டும் இறுதியில் செல்லலாம் என்று, தசரதர் வெகு நேரம் காத்திருக்கிறார். முடிவில்லாமல் படை போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் காத்திருக்கிறார்
படையின் முதல் வரிசை மிதிலையை அடைந்து விட்டது. ஆனாலும், இறுதி வரிசை இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்தஅளவுக்குப் பெரும்படை. இதை கம்பர் வர்ணிக்கிறார் ,
இடம் இலை உழுந்து இட உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே
என்று சொல்கிறார்.
படையின் முதல் வரிசை, மிதிலையைத் தொட்ட பிறகும் கடைசி வரிசை அயோத்தியைத் தாண்டவில்லை. அப்படியானால், ஒருவர் பின் ஒருவராகப் படை வீரர்கள் செல்கிறார்கள் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படியில்லை என்பதை கம்பர் விளக்குகிறார். படை வீரர்கள் அடர்த்தியாகச் செல்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால், ஒரு உளுந்தைப் போட்டால், அது கீழே விழ இடம் இல்லாத அளவுக்கு நெருக்கமாகச் செல்கிறார்கள் என்று சொல்கிறார் கம்பர்.
”எள் போட்டால், எள் விழாது; அவ்வளவு கூட்ட நெரிசல்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அது ஏன் உளுந்து போட்டால் விழாது என்று சொல்கிறார் கம்பர்? காரணம் இருக்கிறது. எங்கே எந்தச் சொல்லைச் சொல்ல வேண்டும் என்று அறிந்தவர் கம்பர்.
படையோடு தசரதன் செல்வது, இராமனின் மணவிழாவைக் காண. சிவ தனுசை இராமன் ஒடித்த வெற்றியைக் கொண்டாட... மங்கல நிகழ்வுக்குச் செல்கிறார்கள்.
எள் என்பது அமங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுவது. குறிப்பாக நீத்தார் கடனுக்கான சடங்குகளில் பயன்படுத்தப்படுத்தக்கூடியது. எனவே, மங்கல நிகழ்வுக்காகச் செல்வது பற்றிச் சொல்லும்போது, எள் என்று சொல்லக் கூடாது என்பதால், கம்பன் மிகநுணுக்கமாக, ”எள் போட்டல் எள் விழவும் இடம் இல்லை” என்று சொல்லாமல் “உளுந்து போட்டால் உளுந்து விழ இடமில்லை” என்று சொல்கிறார்.
இன்னொரு இடத்தில் எள் என்று மிக லாவகமாக சொல்கிறார் கம்பர். போர் முடிந்தது. இராமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு இராவணன் வீழ்ந்து கிடக்கிறான். அவன் உடலைப் பார்த்து அவன் மனைவி மண்டோதரி புலம்புகிறாள்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான்
வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும்
இடம் நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி
என்று மண்டோதரியின் புலம்பலைக் கூறுகிறார் கம்பர்.
இராமன் விட்ட அம்பு, இராவணன் உடல் முழுவதையும் ஊடுருவித் துளைத்துள்ளது. எப்படித் தெரியுமா? “எள்ளிருக்கும் இடமின்றி” என்று சொல்கிறார் கம்பர். எள் இருப்பதற்கான சிறு இடம் கூட விட்டு வைக்காமல் உடல் முழுக்க ஊடுருவித் துளைத்துள்ளது என்கிறார். இங்கே அமங்கலம் நடந்துள்ளது. இங்கே எள்ளும் தண்ணியும்தானே. அதனால் எள் என்று சொல்கிறார்.
அது சரி..., எள் அளவு இடத்தையும் விட்டு வைக்காமல், இராவணன் உடல் முழுவதையும் இராமனின் அம்புகள் துளைத்தது ஏன்? காரணம் சொல்கிறார் கம்பர்..
சீதையின் மீது அவன் கொண்ட மோகம், உடலின் ஏதாவது ஒரு இடத்திலாவது, எள் அளவு இடத்திலாவது அவனுடைய உயிரில் ஒட்டிக்கொண்டு இருக்கிறதா? என்று தேடித்தான், இராவணன் உடல் முழுவதும் துளைத்துச் சென்றதாம் இராமனின் அம்பு. ஆஹா என்ன சொல்லாட்சி..என்ன அருமையான கற்பனை..
கம்ப நாடனே உன் காலடி சரணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.