scorecardresearch

தமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்

கம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார்.

tamil suvai17

இரா.குமார்

கம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார். அவருடைய பிரம்மாண்டமான வர்ணனைகள் நம்மை அண்ணாந்து பார்த்து வாய் பிளக்கச் செய்கின்றன. அதை இங்கே பார்ப்போம்.

வனவாசம் சென்றுவிட்ட மீண்டும் அயோத்திக்கு அழைத்து வந்து அரியணையில் அமர வைப்பென்று சொல்கிறான் பரதன். அதற்காக, ராமனை அழைத்துவர, படைகளோடு புறப்படுகிறான் பரதன். படையின் பிரம்மாண்டத்தை வர்ணிக்கிறார் பருங்கள்… ஆஹா… நம்மை அண்ணாந்து பார்த்து, பிரமித்துப் போய் வாய்பிளக்க வைக்கிறார் கம்பர்.

பெருங்கடல் ஒன்று பொங்கிப் புறப்பட்டது போல காடு நோக்கி படை புறப்பட்டது. பல ஆயிரம் தேர்கள், குதிரைகள், யானைகள், வண்டிகள், வீரர்கள் என நெருங்கிச் சென்றதால், தரையே தெரியவில்லை. சரி, தரைதான் தெரியவில்லை, வானமாவது தெரிகிறதா என்றால், அதுவும் தெரியவில்லை. தேர்ப்படை, குதிரைப் படை ஆகியவற்றின் மிக உயர்ந்த பெரிய கொடிகள், விண்ணையும் மறைத்துவிட்டதாம். அடடா..என்று நாம் அண்ணாந்து பார்க்கும் வேளையில், இன்னும் சொல்லி பிரம்மிக்க வைக்கிறார் கம்பர். என்ன சொகிறார்?

படைகள் செல்வதால் கிளம்பிய புழுதிகள், விண்ணையும் தாண்டி, மேல் உலகம் செல்கின்றன. அங்கு, சென்ற புழுதிகள், தாமரை மலர் மீது அமர்ந்திருக்கின்ற பிரம்மனின் கண்களை மறைக்கின்றனவாம். அடடா..என்ன ஒரு பிரம்மாண்டம்.

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்
மண்ணினை மறைத்தன மலிந்த மாக்கொடி
விண்ணினை மறைத்தன விரிந்த மாத்துகள்
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே

என்று சொல்கிறார். இத்துடன் நிற்கவில்லை. இன்னும் சொல்கிறார்.

படைகள் செல்லும்போது பேரொலி எழுகிறது. அந்த ஒலி, சிவபெருமான், இவ்வுலகினை அழிக்கும் நாளில் எழும் பேரொலியைவிடவும் மிகப்பெரும் பேரொலியாக இருக்க்கிறதாம்.

ஈசனிவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லெனப் பேரொலி

என்று சொல்கிறார்..

கொடும் வேதனையைத் தரும் வெம்மையைத் தணிக்க (ராமனைப் பிரிந்ததால் ஏற்பட்ட கொடும் வேதனை) அச்சேனையின் கொடிகள் மேகங்களை துளைத்து அல்லது தொட்டு மென் சாரலை தூவிச்சென்றன என்கிறார் கம்பர்.

வேதனை வெயிற்கதிர் தணிக்க மென்மழை
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன

என்று சொல்கிறார்.

அந்தச் சேனைகளைப் பற்றிய வர்ணணைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன.
வானத்திலிருந்து கீழ் நோக்குவருக்கு, எங்கும் சமுத்திரமாக தெரிகின்றன. தேர் கடலும், யானை வீரர்களின் சமுத்திரமும், கரிய புரவிக்கடலும் பின் எங்கும், பார் மீது எங்கெங்கும் பரவியிருக்கும் காலாட்படையின் மாபெரும் சமுத்திரமும் தெரிகின்றன!

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை செம்முகக்
கார்மிசை சென்றது ஓர் உவரி கார்க்கடல்
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று எங்கணும்
பார்மிசை படர்ந்திது பதாதிப் பௌவமே

அடுத்து வருவது இது போன்றே இன்னொரு “வானாளவிய” மிகைப்பு.
எல்லாதிக்குகளும் படைகள் பரந்து நிறைந்து இருக்கின்றபடியால் திசைகள் இடம் போதாமல் சிறியதாகி விட்டனவாம்! அடேயப்பா!

சொல்லிய செலவினால் சிறிய திக்கு எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே

என்கிறார் கம்பர்.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Tamilsuvai the gorgeous display is great