இரா.குமார்
காமத்துப்பாலின் புலவி நுணுக்கம் அதிகாரத்தில் வள்ளுவர் காட்டிய நாடகக் காட்சி பற்றி முன்பு சொன்னேன் அல்லவா? அதே அதிகாரத்தில் இன்னொரு நாடகக் காட்சி.
புரையேறினால், யாரோ நினைக்கிறார்கள் என்று கடலூர் மாவட்டத்தில் சொல்வார்கள். அதுபோல, யாரையாவது நினைத்தால்
தும்மல் வரும் என்ற நம்பிக்கை, பழந்தமிழர்களிடம் இருந்தது. அப்படியாராவது தும்மினால், அவர்களை வாழ்க என்று வாழ்த்தும் பழக்கமும் இருந்தது.
இப்போதும் குழந்தை தும்மினால், அருகில் இருக்கும் பெரியவர்கள், 100, 108 என்று சொல்வதுண்டு. நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவதுதான் இது.
தும்மலை வைத்து, தலைவனோடு தலைவி ஊடல் கொள்வதை நாடகம் போலக் காட்டுகிறார் வள்ளுவர். இதோ அந்த நாடகம்.
தலைவன் தும்முகிறான். யாரை நினைத்தாய் தும்முகிறாய் என்று தலைவி ஊடல் கொள்கிறாள். தலைவன் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. யாரையும் நினைக்கவில்லை என்று சமாதானம் செய்ய முயல்கிறான். தலைவி ஊடல் தணியவில்லை. அவனுக்கு மீண்டும் தும்மல் வருகிறது. என்னடா வம்பாப் போச்சு, ஏற்கனவே தும்மியதற்கே ஊடல். இன்னொரு முறை தும்மினால் என்னாகும் என்று பயந்து, தும்மலை அடக்கி,மறைக்கிறான். இதைத் தலைவி கவனித்துவிடுகிறாள். “யாரையோ நீ நினைக்கிறாய். அதை மறைக்கத்தான், தும்மலை அடக்குகிறாய்” என்று சொல்லி மேலும் ஊடல் கொள்கிறாள்.
தும்மல் போட்டாலும் குத்தம் தும்மலைன்னாலும் குத்தமாடா என்று வடிவேலு பாணியில் தவிக்கிறான் தலைவன். மீண்டும் அவனுக்குத் தும்மல் வருகிறது. மறைத்தால் மேலும் வம்பாகிவிடுமே என்று, தும்மலைஅடக்காமல், தும்முகிறான். ஊடல் கொண்டிருந்த தலைவி, ஊடல் கொண்டிருந்ததை மறந்து, வாழ்க என
அவனை வாழ்த்துகிறாள். பின்னர் கூடலில் திளைக்கின்றனர்.
இந்த நாடகக் காட்சியை நமக்குக் காட்டும் குறள்கள் இதோ:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.