தமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை

அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.

இரா.குமார்

பெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிட்டு வர்ணிப்பது புலவர்களின் வழக்கம். மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால்தான் மீனாட்சி என்ற பெயர் வந்தது.

மீன் ஒத்த கண்கள். மீன் போன்ற கண்கள் என்று சொல்லி சொல்லி போரடித்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம் என்று கருதினார் வண்ணக் களஞ்சியப் புலவர். ஆஹா! என்ன அருமையாகக் கற்பனை செய்துள்ளார். வாருங்கள் பார்ப்போம்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம் குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல் அசையாது
விரிசிறை அசைத்து அந்தரத்தின் நின்று எழில்சேர்
மீன்எறி பரவை வீழ்ந்திடுமே!

என்று பாடுகிறார் வண்ணக்களஞ்சியப்புலவர். என்ன சொல்கிறார்?

அழகிய இளம் பெண் ஒருத்தி, வீட்டின் மேல் தளமான மொட்டை மாடியில் நிற்கிறாள். மாடியின் தளத்தில் வெண்ணிற பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த இளம் பெண், குனிந்து பார்க்கிறாள். அவளுடைய முகம் கண்ணாடியில் தெரிவது போல பளிங்குத் தளத்தில் தெரிகிறது.

வானில் பறந்துகொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை பார்க்கிறது. பளிங்குத் தரையில் தெரியும் இவள் முகத்தில் உள்ள கண்கள் மீன் போலக் காட்சியளிக்கிறது. மீன் கொத்திப் பறவை, சிறகுகளை மட்டும் அசைத்தபடி, அந்தரத்தில் அசையாமல் இருந்து கீழே பார்க்கிறது. பளிங்குத் தளம் தண்ணீர் போலவும் அவள் கண்கள் மீன் போலவும் காட்சியளிக்கிறது. சந்தேகம் இல்லை. மீன்கள்தான் என்ற முடிவுக்கு வருகிறது. மீனைக் கவ்விப் பிடிப்பதற்காக கீழே பாய்ந்து வருகிறது. பாவம் பளிங்குத் தரையில் மோதி வீழ்கிறது.
அடடா என்ன கற்பனை.

இதே பாணியில் நாலடியார் பாடல் ஒன்று. ஒரு படி மேலே போகிறது நாலடியார் பாடல். அதையும் பார்ப்போம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; பின்சென்றும்
ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோடிய வில்வாக கறிந்து.

அழகிய அவளது கண்களைப் பார்க்கிறது மீன் கொத்திப் பறவை. மீன் என ஏமாறுகிறது. ஆஹா! இரை கிடைத்தது; கொத்திச் செல்லலாம் என்று அவள் முகம் நோக்கிப் பாய்கிறது. கொஞ்சம் அருகில் வந்ததும், கண்களுக்கு மேலே உள்ள புருவத்தைப் பார்க்கிறது. ஐயோ என்று பயந்து திரும்பி, வேகமாகப் பின்வாங்கி பறந்து சென்றுவிடுகிறது.
புருவம் கண்டு ஏன் பயந்தது பறவை?

அவள் புருவங்கள் வில் போல இருந்ததாம். அதனால் அதைக் கண்டு பயந்து நடுங்கி, பின் வாங்கிவிட்டதாம் பறவை.
அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.

×Close
×Close