இரா.குமார்
சில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் குமிழ் வடிவில் தாழ்ப்பாளும் பூட்டும் இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் தாழ்ப்பாளைச் சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....
தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.
சேர மன்னன் வீதி உல வருகின்றான். அவனோ பேரழகன். கட்டிளங்காளை; கண்டாரை மயக்கும் தோள்கள். மாவீரன். அவனைக் கண்டால் மயங்காத கன்னியும் மயங்குவாள். அப்படிப்பட்டவன் வீதி உல வருகின்றான். பூமாலை அணிந்துள்ளான் அவன். எப்படிப்பட்ட பூமாலை தெரியுமா? எந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று ஆராய்ந்து அதில் வண்டுகள் மொய்க்குமோ, அந்தமலர்களால் ஆன மாலையை அணிந்துள்ளான். குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி வீதி உல வருகின்றான்.
மன்னனை மகள் பார்த்துவிட்டால், அவன் அழகில் மயங்கி, அவன் மீது காதலில்விழுந்துவிடுவாளே என்று தாய்க்குக் கவலை. பேரழகு மிக்க வீரனான மன்னனை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று மகளுக்கு ஆசை.
மன்னனை மகள் பார்த்துவிடக் கூடாதே என்று, “உள்ளே போ! என்று மகளை வீட்டுக்குள் அனுப்பி கதவைத் தாழிடுகிறாள் தாய். அவள் எப்போது நகர்வாள் என்று காத்துக்கொண்டிருக்கிறாள் மகள்.
அடுப்படிக்குத் தாய் போனதுதான் தாமதம். உடனே, தாழ்ப்ப்பாளைத் திறந்துவிட்டு, மண்ணனைக் காண வாசலுக்குப் போக முயற்சி செய்கிறாள். அதற்குள் தாய் வந்துவிடுகிறாள்.”போ உள்ளே” என்று மகளை வீட்டுக்குள் அனுப்பி, கதவைத் தாழிடுகிறாள். தாய் அசரும் நேரம் பார்த்து தாழ்ப்பாளைத் திறக்கிறாள் மகள். தாய் பார்த்துவிட்டு கதவை மீண்டும் தாழிடுகிறாள். இப்படியே தாய் தாழிடுவதும் மகள் திறப்பதுமாக திறந்து மூடி, திறந்து மூடியே, கதவில் பொருத்தப்பட்ட்டுள்ள குமிழ் வடிவத் தாழ்ப்பாள் தேய்ந்துவிடுகிறதாம்.
அந்தக் காலத்திலேயே குமிழ் வடிவில் தாழ்ப்பாளை அமைத்திருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட குமிழ் வடிவத் தாழ்ப்பாளை கலிங்கத்துப் பரணியும் ஒரு பாடலில் காட்டுகிறது. கடை திறப்புக் காதையில் வரும் அந்தப் பாடல்....
வருவார் கொழுந ரெனத்திறந்தும்
வாரார் கொழுந ரெனவடைத்துந்
திருகுங் குடுமி விடியளவுந்
தேயுங் கபாடந் திறமினோ
கணவன் போருக்குச் சென்றுவிட்டான். வீட்டில் இருக்கிறாள் இளம் மனைவி. இவளை தனிமைத் துயர் வாட்டுகிறது. போர் முடிந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. இரவு வந்துவிடுவான் என்று எதிர்பார்க்கிறாள். விரகதாபத்தில் தவிக்கிறாள். தூக்கம் வரவில்லை. கணவன் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்து, கதவைத் திறந்து தெருவைப் பார்க்கிறாள். அவனைக் காணவில்லை.
சரி, இப்போது வரமாட்டன் என்று கதவைத் தாழிடுகிறாள். தூக்கம் வரவில்லை. அவன் நினைவாகவே இருக்கிறது. மீண்டும் கதவைத் திறந்து தெருவைப் பார்க்கிறாள். அவன் வரவில்லை. கதவைத் தாழிடுகிறாள். இப்படி விடியும் வரை, கதவைத் திறப்பதும் தாழிடுவதுமாக இருக்கிறாள். அவள் திறந்து, திறந்து மூடியதில் கதவில் இருந்த குமிழ் வடிவ திருகுத் தாழ்ப்பாள் தேய்ந்துவிட்டதே, அத்தகைய கதவைத் திறவுங்கள் என்று சொல்கிறார் செயங்கொண்டான்.
அந்தக் காலத்திலேயே குமிழ் வடிவ தாழ்ப்பாள் அமைத்த தமிழனின் தொழில் நுட்ப அறிவைப் பறை சாற்றுகின்றன் இந்த இரண்டு பாடல்களும்.