திருக்குறளை இளைஞர்கள் வரவேற்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தவர் மு.ராசாராம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், திருக்குறளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாக கொண்ட நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து அவரிடம் பேசிய போது, ‘‘நாடு எப்படி இருக்க வேண்டும். நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும். நாட்டை ஆளுபவர்கள் எப்படி இருக்க வேண்டும். அவருக்கு உதவி செய்யும் அமைச்சர்கள், ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும். வேளாண்மை, மருத்துவம், உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்து அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருக்குறளைப் பின் பற்றி எப்படி முன்னேற்ற முடியும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயிரத்தில் ஒருவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நாடகத்துக்கான கருத்தாக்கத்தை நான் வழங்கி இருக்கிறேன். நாடகத்துக்கான ஆடற்கலை பயிற்சி மற்றும் இயக்கத்தை கே.ஆர்.சுவர்ணலட்சுமி மேற்கொண்டுள்ளார். நாடகத்துக்கு முரளி சுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார்.
இதில் காதல், மர்மம், நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்தில் அசல் குறள்கள், அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான விளக்கங்கள் ஆகியவை பொருத்தமான பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடனங்களை கலந்து கலவையாகவும், இதுவரையில் மேடையில் கண்டிறாத அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும்.
இந்த நாடகம் வரும் ஜனவரி 24ம் தேதி சென்னை நாரத கான சபாவில் முதல் முறையாக அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு மு.ராசாராம் தெரிவித்தார்.