திருப்பாவை நோன்பும் பொங்கல் விழாவும்

மார்கழி மாத பனிக்காலத்தில் பாடப்படும் திருப்பாவையில் பொங்கல் பற்றிய என்னென்ன குறிப்புகள் இருக்கின்றன என்பதை விவரிக்கிறது.

By: January 17, 2018, 2:13:11 PM

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பொங்கல் விழாவுக்கும் பாவை நோன்பிற்கும் தொடர்புண்டு. பாவை நோன்பு மார்கழி மாதம் தொடங்கி தை மாதப் பிறப்பன்று முடிவது. ஏழாம் நூற்றாண்டில் பாவை நோன்பு கொண்டாடப்பட்ட விதத்தினை திருப்பாவையினின்று நாம் அறியலாம்.

வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள்
கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட் காலே நீராடி
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும்
ஆந்தளையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி
உகந்தேல் ஓரெம்பாவாய்!

மார்கழி மாதம் முழுவதும் கன்னியர்கள் மேற்கண்ட முறையில் நோன்பு நோற்கிறார்கள்.

இந்நோன்பு யாரை மகிழ்விக்க? கண்ணனை மகிழ்விக்கவா? இல்லை. அவன் ஆடிப்பாடி அவர்கள் நோன்பு நோற்றாலும் நோன்பு பாவை நோன்பே; பாவை மகிழ்விக்கவே. பாவை யார்? பாவை மண்ணாலோ, சாணத்தாலோ மணலாலோ செய்த படிமம். இது பூமியையேக் குறிக்கும். இந்நோன்பு பூமியை மகிழ்விக்கவே நோற்கப்படுகிறது. பூமி மகிழ்ந்தால் செழிப்பைத் தருவாள். ஆண்டாள் ஆயர் மகளிர் கொண்டாடும் பாவை நோன்பை வருணிக்கிறாள். ஆகையால் அவர்களுக்குச் செல்வச் செழிப்பு எதுவோ, அதனை பாவை அருளும் என்று பாடுகிறாள்.

ஓங்கி உலகளந்த
உத்தமன் வேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச்
சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல்
ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேல் ஓர் எம்பாவாய்

ஆயர் மகளிர் விரும்பும் செல்வம் எதுவென்று ஆண்டாள் மேற்கண்ட செய்யுளில் குறிப்பிடுகிறாள். இச்செல்வத்தைப் பாவை தருவாள். அவள் தருவதற்கு, ஆயர் மகளிர் தங்கள் உடல் வருந்த நோன்பு நோற்கிறார்கள். பூமி செழிப்பைத் தருவதற்கு இவர்கள் ஏன் உடலை வருத்துவானேன்? இவ்வினாவிற்கு விடைகாண தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் இயக்க விதிகளைத் தொல்குடி மக்கள் அறிந்தவர்களல்லர். கூட்டுழைப்பினால் அவர்கள் இயற்கையோடு போராடினார்கள். அந்த போராட்டத்தின் முதல் வெற்றியே புன்செய் பயிர்த்தொழில். அதற்கடுத்த வெற்றி ஆடுமாடுகளைப் பழக்கியது. மனிதன் தனது செயலால் இயற்கையினின்று தனக்குத் தேவையானவற்றைப் பெற முடியுமென்று கண்ட தொல்குடி மக்கள் இயற்கை விதிகளோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத தங்களது செயல்களால் இயற்கையை வசப்படுத்த முடியுமென்று நம்பினார்கள். இடி முழக்கம் போன்ற ஓசைகளை எழுப்பிக் கூத்தாடினால், தங்களைப் பார்த்து இயற்கையும் மழையைப் பொழியும் என்று எண்ணினார்கள். அதற்காக ஒரு கூத்தும் வகுத்துக் கொண்டார்கள். காற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்க காற்றில் அசைந்தாடுவது போல் நடனமாடி அதைப்போலவே பயிரையும் ஆடும்படி கேட்டுக் கொண்டார்கள். அசைந்தாடினால் காற்று பயிரை வேரோடு பிடுங்கி எறியாது என்பது அவர்கள் நம்பிக்கை. உலகம் முழுவதிலும் இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தொல்குடி மக்களினத்தவர் பலரிடம் இத்தகைய வழக்கங்களைக் காணலாம். இதனை நாம் மந்திரம் என்றழைக்கிறோம். இம்மந்திரம் தான் மனிதனுக்கும் இயற்கைக்கும்ஏற்பட்ட முதல் தொடர்பு. மனிதன் மந்திர முறைகளால் இயற்கையை வசப்படுத்த முயன்றான். இயற்கையை அறிய புறவய முறைகள் தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்றுவிட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது. இம்மந்திரத்தின் எச்சமே பாவை நோன்பு. தங்கள் உடலை வருத்தித் தூய்மையாக இருந்தால் பாவையும் வரந்தரும் என்ற ஆயர் மகளிரது நம்பிக்கையை திருப்பாவையில் கவிதா ரூபத்தில் வெளிப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த ஒரேயொரு சான்று காட்டுவோம். மந்திர முறையில் இயற்கைச் சக்திகளை அழைத்து மனிதன் கட்டளையிடுவது போல் சொற்களை மறுபடி உச்சரிப்பது வழக்கம். தெய்வத்தை வேண்டிக் கொள்வது என்பது மனிதன் தன் உடலில் சக்தியை வரவழைக்கவே சக்தி பெற்றதாக அவனுக்குத் தோன்றியதும் இயற்கைச் சக்திகளை நோக்கி மனிதன் கட்டளைகளைப் பிறப்பிப்பான். இவ்வாறு ஆயர் மகளிர் மழையைப் பார்த்து கூறுவதைக் கேளுங்கள்.

தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழை போல்
வாழ உலகினில்
பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்

நாங்கள் வாழ நீ பெய் என்ற மந்திர மொழியாக அவர்கள் கட்டளை இடுகிறார்கள்.

மழை பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் பாவைக்கும் அவர்கள் செய்யப்போகும் விழாச் சிறப்புகளைப் பற்றியும் முன்கூட்டியே ஆயர் மகளிர் சொல்லுகிறார்கள். அதுதான் அறுவடைத் தினத்தன்று அவர்கள் பாவைக்குச் செய்யப் போகும் சிறப்பான விழா.

கூடாரை வெல்லும் சீர்க்
கோவிந்தா உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு
யாம்பெறும் சம்மானம்
நாடும் புகழும்
பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே
தோடே, செவிப் பூவே
பாடகமே என்று அனைய
பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு
முடநெய் பெய்து
முழங்கை வழிவாரக்
கூடி இருந்து
குளிர்ந்தேல் ஓர் எம்பாவாய்

——-

கறவைகள் பின் சென்று
கானம் சேர்ந்துண்போம்.

அறுவடையின் பயனை அவர்கள் அனுபவிவக்கும் மகிழ்ச்சியே பாவைக்குச் செய்யும் விழா.

இவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் பெண்கள். ஆரம்பத்தில் உழவுத் தொழிலைக் கண்டுபிடித்தவர்கள் பெண்களாதலால் அவர்களே அவ்விழாவிற்குத் உரியவர்களாகிறார்கள். பாவையும் பெண் தெய்வம். அது பூமியின் படிமம். அவளை மந்திர மூலமும் பாட்டின் மூலமும் மகளிர் மகிழ்விக்கிறார்கள். மகளிர் கண்ணனை வழிபடுகிறார்கள் என்றும் கண்ணனிடம் பறை மட்டுமே கேட்கின்றார்கள். பறை எதற்கு? குரவைக் கூத்தாடப் பறையை முழக்க வேண்டி பறையைக் கண்ணனிடம் பெற்று அவர்கள் பாவைப் படிமம் செய்து அதன் முன் குரவையிடுவார்கள். அவர்கள் ‘சம்மானம்’ பெறுவது கண்ணனிடமல்ல, பாவையிடமே. இன்றும் பொங்கல் பொங்கும் போது பெண்கள் குரவையிடுவார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்.

இவ்விழா புறநாநூற்று காலத்தில் கொண்டாடப்பட்டது. நெல் களத்தைப் போர்களத்துக்கு உவமை கூறுவது பண்டைப் புலவர் மரபு. குறுங்கோழியூர் கிழாரென்னும் புலவர் நெல் களத்தை வருணித்து அதனைப் போர்க் களத்துக்கு உவமை கூறுகிறார். அன்று அறுவடை விழா ‘சாறு கொண்ட களம்’ என்று புலவர் கூறுகிறார். சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச் செய்யுளில் இருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது.

‘வலங்க செந்நெல் கதிர் வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண்’

நெற்கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள்.

இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வல்ளைக் கூத்து நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து, கைக் கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டு இருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது.

அறுவடை விழா, அறுவடையன்று தான் நிகழும். அன்று உழவர் மனமகிழ்ச்சி கொள்வார்கள். அன்று போல் என்றும் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டினையுடையவன் எங்கள் அரசனி என்று பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனைப் புகழ்ந்து பாடுகிறார். ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது, என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாகவும் வெளியிடுகிறார்.

நுங்கோ யாரென வினவின் எங்கோ
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
வராற் கொழுஞ் சூடங் கவுளடாஅ
வைகு தொழின் மடியு மடியா விழுவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகி
கோழியானே கொப்பெருஞ் சோழன்

உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்கள் மகிழ்விக்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினற்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும் என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்தரிக்கிறது.

பொங்கல் விழாவிலே பூமியை வாழ்த்தியது போலவே, மகளிர் நீர் தரும் ஆற்றையும் வாழ்த்தினார்கள். ஆறு பெண்பாலாகக் கருதப்பட்டது. தை நீராடல் என்பது பண்டைய வழக்கமாகும். அதனை பரிபாடல் வருணிக்கிறது. வைகை நதிக்குப் பொங்கலிட்டுப் பூசனை புரிகின்றனர் மதுரை நகர மகளிர்; நாட்டுக்கு வளம் தர வேண்டுமென வைகை நதியை வேண்டுகிறார்கள். பின்பு தங்கள் தாய்மாரருகில் நின்று நீராடுகிறார்கள். நீராடும்போது வைகையை நோக்கிப் பாடுகிறார்கள்.

வையை, நினக்கு மடைவாய்த் தன்று
டையாடல் ஆடல் மழபுலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பில் அவர், அவர்
தீ எரிப்பாலும் செறிதவர் முன்பற்றியோ,
தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்
*உரைத்தி வையை நதி (பரிபாடல் – 11) *

அவர்கள் வைகையை வாழ்த்தும்போது தங்கள் வேண்டுகோள்களையும் வைகையிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

நீ தக்காய், தைந்நீர் நிறம் தெளித்
தாய் என்மாரும்,
கழுத்து அமை கை வாங்காக்
காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக என
வேண்டுதும் என்மாரும்,
கிழவர் கிழவியர் என்னாது
ஏழ் காறும்
மழ ஈன்று மல்லற் கேள்
மன்னுக என்மாரும், (பரிபாடல் – 11)

சிறந்த கணவனைப் பெறவேண்டுமென தை நீராடும் மகளிரின் வேண்டுகோள் வைகையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

எனவே, பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவர்கள் வாழ்க்கை, விழாவன்று மட்டும் வளம் பெற்று விளங்காமல் என்றும் வளம்பெற வேண்டும் என்பதே அவர்கள் ஆர்வம். மந்திர மொழியின் மூலமும், வணக்கத்தின் மூலமும் இயற்கையை வசப்படுத்த அவர்கள் செய்த முயற்சி இன்று வேறு வழியில் நிறைவேறி வருகிறது. மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று வருகிறான். இயற்கையளிக்கும் சக்தியைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உழவர்களை அடிமைப்படுத்தும் சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்துத் திரளும் உழவர் பெருமக்கள் நாள்தோறும் பொங்கல் விழாக் கொண்டாடும் காலத்தை நோக்கி முன்னேறுகிறார்கள்.

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக, செய்தித் தொடர்பாளர், இணையாசிரியர், கதைசொல்லி, நிறுவனர், பொதிகை – பொருநை கரிசல். தொடர்புக்கு : rkkurunji@gmail.com)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Thiruppavai and pongal festival

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X