Tho Paramasivan Death: தொ.ப என அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவு ஏற்படுத்தியிருக்கும் அதிர்வு ஒன்றே அவரது ஆழமான பணிகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவரை அறிந்த ஆட்சிப் பணி, போலீஸ் பணி அதிகாரிகளும் இரங்கலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பேராசிரியர், இலக்கியவாதி, பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர், பெரியாரியவாதி என பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமை, தொ.பரமசிவன். திருநெல்வேலியின் ஒரு பகுதியான பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் வசித்து வந்த தொ.ப., தனது 70-வதாவது வயதில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கி பல்வேறு இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தொ.ப மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இதில் சற்றே தனித்து தெரிவது, திருநெல்வேலியில் உயர் அதிகாரிகளாக இருந்து தொ.ப.வின் அறிமுகம் பெற்ற இருவரின் இரங்கல் செய்தி!
அவர்களில் ஒருவர் திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெல்லையின் பெருமை தொ.பரமசிவன் மறைவு. தமிழ்பண்பாட்டின் வேர்களை கண்டறிந்து, எளிய தமிழால் அனைவரும் அறியச்செய்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய இயலாதது.
ஒரு மணி நேர உரையாடலில் 1000 புதிய செய்திகளை அறிய முடியுமெனில் அவரது உழைப்பு எவ்வளவு உயரியது என்பது புலனாகும்.’ என கூறியிருக்கிறார்.
இதேபோல திருநெல்வேலியில் துணை ஆட்சியராக பணிபுரிந்தவரும், தற்போது கொடைக்கானலில் பணியாற்றி வருபவருமான ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், ‘நெல்லை புத்தக திருவிழாவில் ஐயாவை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரது உரை நெல்லை சார்ந்த தமிழ் பண்பாட்டினை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. பேரிழப்பு.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
தொ.ப மறைவு ஏற்படுத்தி இருக்கும் ஆறாத் துயர்களுக்கு மத்தியில், ஒரு பண்பாட்டு ஆய்வு ஆளுமைக்கு அந்த வட்டத்தைத் தாண்டி சமூகத்தின் அத்தனை கூறுகளும் இரங்கல் தெரிவிப்பது ஆறுதல்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"