/indian-express-tamil/media/media_files/2025/03/09/YQRZnKmfNtYgilZ6IQcz.jpg)
சாகித்ய அகாடமி விருதுபெற்ற விமலா (புகைப்படம் – முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கம்)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரத்தைச் சேர்ந்த ப. விமலா, நளினி ஜமீலா எழுதிய என்டே ஆணுங்கள் (சுயசரிதை) என்ற மலையாளப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார்.
விமலா அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயின்றார். பின்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி படித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரண்டு மொழிப் பாடங்களில் ஒன்றாக மலையாளம் படித்தார். அப்போது மொழிபெயர்ப்பு மீதான தனது ஆர்வத்தைக் கண்டுபிடித்தார்.
விமலா தற்போது திருநெல்வேலியில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதேநேரம் விமலா மொழிபெயர்ப்பிலும் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அந்த வகையில் எஸ். சுஜாதன் எழுதிய மலையாள நாவலான விவேகானந்தத்தை தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் இரண்டாவது மொழிப்பெயர்ப்பாக நளினி ஜமீலாவின் ’என்டே ஆணுங்கள்’ என்ற புத்தகத்தை ’எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் படைத்தார். இது நாகர்கோவிலில் உள்ள கலைச்சுவடு வெளியீடுகளால் வெளியிடப்பட்டது. இந்த படைப்பு விமலாவுக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
நளினி ஜமீலாவின் ’என்டே ஆணுங்கள்’, முதன்முதலில் வெளியிடப்பட்டபோது கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தப் புத்தகம் ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவம் குறித்த வடிகட்டப்படாத கண்ணோட்டத்தை வழங்குகிறது, மேலும் சமூக விதிமுறைகளை கேள்வி எழுப்புகிறது.
தற்போது விமலா மலையாளத்திலிருந்து தமிழுக்கு மலையாள மொழி தொல்காப்பியத்தில், தமிழிலிருந்து மலையாளத்திற்கு குறுந்தொகை மற்றும் கம்ப ராமாயணத்திலிருந்து யுத்த காண்டம் உள்ளிட்ட பல மொழிபெயர்ப்பு பணிகளில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ”'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.