திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் அதிஷா எழுதிய 'பொய் சொல்லும் கலை' நூலை இந்த வாட்ஸ்-அப் யுகத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக பதவியேற்றபின் அரசியலிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில், அவ்வப்போது, தான் படித்த புத்தகங்கள் பற்றியும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நடித்தபின் அப்படத்தின் புரோமோவுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அப்படத்தில் தன்னுடன் நடித்த எழுத்தாளர் பவா செல்லதுரையுடன் பேசுவதற்காக அவரது கதைகளைப் படித்துவிட்டு சென்று பேசியதைக் குறிப்பிட்டார்.
அதற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின், எஸ்.கே.பி. கருணா எழுதிய கவர்னரின் ஹெலிகாப்டர் சிறுகதை நூலைப் பற்றி பாராட்டி எழுதி இருந்தார்.
இந்த நிலையில், உதயநிதி, பத்திரிகையாளர் அதிஷா எழுதிய ‘பொய் சொல்லும் கலை’ என்ற நூலைப் படித்துவிட்டு பாஜகவின் பின்புலத்தை அம்பலப்படுத்தும் இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர் அதிஷாவின் 'பொய் சொல்லும் கலை' நூலினை கிண்டிலில் வாசித்தேன். ஹிட்லரின் பொய்கள் ஏற்படுத்திய பேரழிவுகளைப் போல பாஜக உற்பத்தி செய்து பரப்பும் பொய்கள் இந்தியாவுக்கு எத்தனை ஆபத்தானவை என்பதை விவரிக்கும் முக்கியமான நூலாக வந்துள்ளது.” என்று குறிப்பிடுள்ளார்.
உதயநிதி மற்றொரு ட்விட்டில், “பாஜகவும்-பரிவாரங்களும் பொய்களை நிறுவனமயமாக்கி எளிய மனிதர்களிடம் பரப்பும்போது தடுத்தாடுவதை விட அவற்றின் பின்புலத்தை அம்பலப்படுத்துவதே சிறப்பு என்கிறது இந்நூல். இந்த வாட்ஸ்-அப் யுகத்தில் 'பொய் சொல்லும் கலை'அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்று ட்வீட் செய்ததற்கு பத்திரிகையாளர் அதிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"