தமிழில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழையுடன் எழுதுபவர்கள் சரியான எழுத்தை தவறு என்று கூறுவது குறித்து பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து கிண்டலாக எழுதிய பதிவுக்கு கவிஞர் மகுடேசுவரன் எதிர்வினையாற்றியுள்ளார்.
திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதி, “வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலாக வெளியிட்டார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தமிழில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழையுடன் எழுதுபவர்கள் சரியான எழுத்தை தவறு என்று கூறுவது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார்.
அவர் தனது பதிவில் எழுதியிருப்பதாவது: “சமூக ஊடகங்களில் நல்ல நகைச்சுவைகளைப்
பார்க்கிறேன்.
தப்பும் தவறுமாய்த் தமிழ் எழுதுகிறவர்கள் சரியான எழுத்தைத் தவறென்கிறார்கள்.
‘ட’ண்ணகரம் ‘ற’ன்னகரம் பொது ‘ள’கரம் வகர ‘ல’கரம்
எங்கே ஆளப்பட வேண்டும் என்று அறியாதவர்கள் தேவையில்லாத திருத்தம் சொல்கிறார்கள்
வினைத்தொகையில் வல்லெழுத்து மிகாது என்று
அறியாதவர்கள் ‘ஊறுக்காய்’ என்று எழுதித் தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்.
‘நினைவுகூறுதல்’ என்றே எழுதிப் பழக்கப்பட்டவர்கள் ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லாட்சியைத் தவறென்று சொல்லித் தமிழின் கற்பைச் சந்தேகப்படுகிறார்கள்.
‘எலும்புவில் தேய்மானம்’ என்று எழுதுவது தவறென்று அறிந்தவர்கள் கூடக் ‘கொழும்புவில் குண்டுவெடிப்பு’
என்று எழுதுகிறார்கள்.
வருமொழி வடமொழியாகவோ மெல்லொலியாகவோ இருப்பின் வல்லெழுத்து மிகத்தேவையில்லை என்ற பொதுவிதி அறியாதவர்கள் எனது தண்ணீர் தேசம் நாவலில் ‘த்’ எங்கே என்று குத்துகிறார்கள்.
திருநிறைசெல்வியே சரி என்று தெரியாதவர்கள் திருநிறைச்செல்வி என்று எழுதிப் பிழையே சரியென்கிறார்கள்.
இவர்களோடு மல்லுக்கட்டுவதை நான் அழகான சண்டை என்றே கருதுகிறேன்.
எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன்.
நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள்.
சரியானதைப் பழிப்பதன் மூலம் தப்புக்குத் தங்க முலாம் பூசாதீர்கள்.
தமிழ் வளர்ச்சித்துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சிக் கழகம், உலகத் தமிழ்ச் சங்கம் முதலிய அமைப்புகள்
தமிழர்களின் அன்றாடத் தமிழோடு இயங்க வேண்டும்.” என்று கவிஞர் வைரமுத்து கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்தப் பதிவுக்கு கவிஞர் மகுடேசுவரன் தனது முகநூல் பக்கத்தில், “வைரமுத்து எழுதும் உரையிலும் கவிதையிலும் பிழைகள் பல உண்டு. அவை தமிழாய்ந்த பெருமக்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.” என்று எதிர்வினையாற்றியுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/31/maugeshwaran-3-2025-07-31-07-02-47.png)
அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “தமிழில் பிழையாக எழுதுகின்றோரைப் பற்றி வைரமுத்து தம் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலேயே அன்னார் சில பிழைகளைச் செய்திருக்கிறார் என்பது அவர்க்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வைரமுத்து எழுதும் உரையிலும் கவிதையிலும் பிழைகள் பல உண்டு. அவை தமிழாய்ந்த பெருமக்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.
அ). ‘ஊறுகாய் என்பதனை ஊறுக்காய் என்றெழுதுகிறார்கள்’ என்கிறார். வினைத்தொகையில் வல்லெழுத்து தோன்றல் இல்லை என்பதனை அனைவரும் அறிவர். ஆனால், வினைத்தொகையில் பிழைபட எழுதுமிடங்கள் அவர்க்குத் தெரியவில்லை. ஊறுகாயை யாரும் ஊறுக்காய் என்று எழுதுவதில்லை. இவ்வெடுத்துக்காட்டே தவறு. புனைபெயர் என்பதனைப் புனைப்பெயர் என்று எழுதுகிறார்கள். புனைபெயர் என்பதுதான் வினைத்தொகை. புனைப்பெயர் என்று பிழையாக எழுதப்படுகிறது.
ஆ). நினைவுகூறுதல், நினைவுகூர்தல் ஆகிய இரண்டும் சரியே. இவ்விரண்டு தொடர்களில் ஒன்றினை ‘ஊறுக்காய் தவறு’ என்றது போலக் கருத இயலாது. இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு மட்டுமே உண்டு. நினைவினைக் கூறுதல் என்ற பொருளில் வருவது நினைவு கூறுதல். அவன் தன்னுடைய நினைவினைக் கூறுகிறான். அது நினைவு கூறுதல். நினைவிலிருந்து ஆழ்ந்து மீட்டுச் சொல்லுதல் நினைவுகூர்தல். அவன் நினைவுகூர்கிறான்.
இ). ‘கொழும்புவில்’ என்று எழுதக்கூடாதுதான். கொழும்பில் என்றே எழுதவேண்டும். ஆமாம், சரிதான். ஆனால், இவ்வகைப் பிழையை ‘முத்து’ என்னும் தம் பெயர்க்கும் பொருத்திப் பார்த்தே ஆண்டுள்ளாரா என்று அவர் உறுதிப்படுத்தலாம். வைரமுத்து என்கின்ற தம் பெயரோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கும்போது வைரமுத்தை, வைரமுத்தால், வைரமுத்துக்கு, வைரமுத்தின், வைரமுத்தினது, வைரமுத்துக்கண் என்று எழுதி வந்தாரா? அவ்வாறே எழுதியிருப்பின் சரி. ஆனால், வைரமுத்துவை, வைரமுத்துவுக்கு என்று அவரும் எழுதியிருந்தாலும் பிழை.
ஈ). தண்ணீர் தேசம்’ என்ற தொடரில் த் தோன்றினால்தான் தமிழ்மொழித் தொடர். நீர், தேசம் ஆகிய இருசொற்களும் வடமொழியிலும் உள்ளன. நீர் தேசம் என்று வல்லொற்று மிகாமல் பயன்படுத்தினால் அங்கே வடமொழித் தொடரைத்தான் ஆள்வதாகப் பொருள். நீர்த்தேயம்/நீர்த்தேசம் என்று ஆண்டால்தான் தமிழ்த்தொடரை ஆள்வதாகப் பொருள். தண்ணீர்த் தேசம் என்று வல்லொற்று மிகுந்து வருவதே சரி. ‘தண்ணீர் தேசம்’ என்று ஆண்டமையால் அது வடமொழித் தொடரோடு இணக்கமுற்றுவிட்டது. இரண்டும் வடமொழிச் சொற்களேயாயினும் இயன்றவரைக்கும் தமிழ்மொழிப் பண்புகளைப் புகுத்தி எழுதுவதுதான் கொள்கையாக இருக்கவேண்டும்.
உ). எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன் - என்கிறார். எமக்கு என்று தன்மைப் பன்மையில் இத்தொடர் தொடங்குவதால் ‘யாம் கோபம் கொள்வதில்லை, கும்பிட்டுச் சிரிக்கிறோம்’ என்று எழுதவேண்டும். இல்லையேல் தொடக்கமே ‘எனக்கு’ என்றிருக்கவேண்டும்.
ஒப்பீட்டளவில் வைரமுத்தின் எழுத்துகளில் பிழைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எழுதுவதிலும் உறுதியாகப் பிழைகள் உள்ளன. எழுபது, எண்பதுகளின் பிழையாட்சிகள் பல இன்னும் அவரிடம் உதிராமல் ஒட்டியிருக்கின்றன. அவற்றைக் களையவேண்டும். தம் உரையிலும் கவிதையிலும் எண்ணற்ற வடசொற்களைக் கூச்சமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர். அவற்றைத் தவிர்க்க முயன்றதில்லை. வடசொற்கள் தவிர்த்து எழுதுக என்றால் இவர்கள் தவித்துப்போய்விடுவார்கள். கடைசியாகக் கூறியதற்கு வைரமுத்து மட்டுமே இலக்காக முடியாது, அக்குறைபாடு இன்றெழுதுகின்ற தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினர்க்கும் பொருந்தும்.
வைரமுத்து முகநூலைக் கையாண்டு பழகிவிட்டார். அதற்காக வாழ்த்துவோம்” என்று கவிஞர் மகுடேசுவரன் குறிப்பிட்டுள்ளார்.