தமிழ் சிறுகதைகளில் முக்கியமான இடத்தை ’எஸ்தர்’ சிறுகதை பிடித்துள்ளது. உலக இலக்கியத்திக்கு சமமான ஒரு படைப்பு இது என்று கருதப்படுகிறது. நமது கிராமஙக்ளின் வேர்களை அதன் கதைகளை பதிவு செய்வதில் வண்ணநிலவன் அசத்திவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவரது கடல் புரத்தில், ரெயினீஸ் ஐயர் தெரு, இரண்டு உலகங்கள், வண்ணநிலவன் எண்ணமும் எழுத்தும், பின்நகர்ந்த காலம், மறக்க முடியாத மனிதர்கள், சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள், ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் உள்ளிட்ட படைப்புகள் முக்கியமானவை. மேலும் இவர் பல சிறுகதைகளை எழுதி உள்ளார்.
இதில் எஸ்தர் கதை முக்கியத்துவம் வாய்ந்தது அந்த கிராமத்தை விட்டு அனைத்து குடும்பங்களும் சென்று விடுவார்கள். அந்த கிராமத்தில் கடைசியாக வாழும் குடும்பமாக எஸ்தார் குடும்பம் மட்டுமே இருக்கும். கிராமத்தை விட்டு செல்வது என்ற முடிவுக்கு வந்தபின்பு வயதான பாட்டியை இங்கேயே விட்டு விட்டு செல்லலாம் என்ற விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போதுதான் கதை தொடங்கும். கதையில் அனைவரின் கதாபாத்திரமும் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யப்படும். இதில் நம்மை கவருபவராக இருப்பவர் எஸ்தார். அவர்தான் அந்த குடும்பத்தின் சித்தி. மூத்த மனிஷி. அவர்தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொடர்ந்து வழி நடத்தி வருபவர். கடும் பஞ்சத்திலும் கிடைப்பதை வைத்து ருசியாக சமைக்க கூடியவர். கணவரை விட்டு எஸ்தர் பிரிந்த கதையை ஊர் முழுவதும் அப்படி பேசியது என்றும் காலப்போக்கில் எல்லாம் மறந்துவிட்டது என்று ஆசிரியர் கூறுவார். அந்த கிராமத்தில் அடிக்கும் வெயில் அனைவருக்கும் ஒரு வித எரிச்சலை கொடுக்கும் வகையில் இருக்கிறது என்றும் இரவு மேலும் பயத்தை கொடுத்தது என்றும் ஆசிரியர் விரிப்பார். இந்த வெப்ப காற்று எப்போதும் ஈரமாக மாறாது, சீக்கிரம் இங்கிருந்து கிளம்புங்கள் என்று எஸ்தரிடம் இரவின் இருட்டு பேசியது என்று எழுத்தாளர் விவரிப்பார்.
இறுதியாக பாட்டியின் மரணத்தின்போது, யாருமே அழவில்லை என்று எழுத்தாளர் கூறியிருப்பார். இந்த கதையை படித்து முடிக்கும்போது, நமது மனம் பாரமாக இருக்கும்.