/indian-express-tamil/media/media_files/2025/09/09/ramesh-predhan-2-2025-09-09-23-18-30.jpg)
ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர். Photograph: (Image Source: Jeyamohan.in)
விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழில் முதன்மை இலக்கியப் பங்களிப்பாற்றிய மூத்த படைப்பாளிகள் விருதுகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2010 ல் நிறுவப்பட்டது விஷ்ணுபுரம் விருது. குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெறாத படைப்பாளிகளுக்குரிய விருதாக இது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் பலர் ஏற்றுக்கொண்ட பெருமைக்குரியது இவ்விருது.
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.
ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர்.
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இந்த விழா வழக்கம்போல கோவையில் நிகழும். முதல்நாள் படைப்பாளிகள் அரங்கு. இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் ஆகியோருடன் வாசகர்கள் உரையாடலாம். இரண்டாம் நாள் விருதுவிழா. தமிழின் முதன்மையான இலக்கிய விழாவாக இன்று மாறிவிட்டிருக்கும் இந்த இலக்கிய ஒருங்கிணைவுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ரமேஷ் நீண்டநாட்களாக உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அவரை புதுச்சேரியில் இருந்து கோவை கொண்டுவர முயல்கிறோம். அவரும் ஆர்வமாகவே உள்ளார். இதற்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொண்ட நிகழ்வு பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழாதான்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் ரமேஷ் படைப்பாளிக்குரிய அக ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரமேஷுக்கு இவ்விருதை அளிப்பதன் வழியாக விஷ்ணுபுரம் நண்பர்குழு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் ரமேஷ் பிரேதன் எழுத்துகள் குறித்து, “தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தி ஒரு விவாதத்தை உருவாக்கியதில் முக்கியமானவர்கள் பிரேம் -ரமேஷ். ஒருங்கிணைந்த இறுக்கமான வடிவமும், உணர்ச்சியற்ற தன்னிலைக்குரலும், வரலாறற்ற தனிநபர் நோக்கும் கொண்ட நவீனத்துவ எழுத்துக்கள் நிறைந்திருந்த தமிழ்ச்சூழலை நிலைகுலையச்செய்யவும் புதிய தளங்களை நோக்கிக் கொண்டுசெல்லவும் அவர்களின் முயற்சி வழிகோலியது." என்றும்; "தனிமையின் துயர், கட்டற்ற பித்துநிலை, குரூரங்கள், அபத்தங்கள், உணர்ச்சிக்கொந்தளிப்புகள் என பின்நவீனத்துவ நாவல்களை உருவாக்கும் அனைத்து அடிப்படைக்கூறுகளாலும் அமைந்த படைப்பு’அவன் பெயர் சொல்’. ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கும் இந்நாவலை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என வகைப்படுத்தலாம்" என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
முதலில் பிரேம் உடன் இணைந்து எழுதிய ரமேஷ் பிரேதன் பின்னர், தனியாக எழுதத் தொடங்கினார். கவிஞர் ரமேஷ் பிரேதன் எழுதிய, “இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும், கருப்பு வெள்ளைக் கவிதை, பேரழகிகளின் தேசம், சக்கரவாளக்கோட்டம், கொலை மற்றும் தற்கொலை பற்றி, உப்பு, நாவற்கொம்பு, அதீதனின் இதிகாசம் (காவியம்), காந்தியைக் கொன்றது தவறுதான், சாராயக்கடை, பன்றிக்குட்டி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.
மேலும், நல்லபாம்பு: நீல அணங்கின் கதை, ஐந்தவித்தான், அவன் பெயர் சொல், சொல் என்றொரு சொல் உள்ளிட்ட நாவல்களையும் ரமேஷ் பிரேதன் எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.