ஜெயமோகன்
தமிழிலக்கியத்தில் அதற்கு முன் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர்களில் எவருமே தங்கள் இனக்குழு அடையாளத்தை படைப்புகளில் வெளிப்படையாக வைக்கவில்லை. ஜெயகாந்தன் எந்த சாதி என்று பெரும்பாலான அவரது வாசகர்களுக்கு தெரியாது. சுந்தர ராமசாமிக்கும் ஜி. நாகராஜனுக்கும் அவர்கள் சாதியடையாளம் பிறரால் ஓயாது நினைவூட்டப்படுவதன் வழியாகவே தங்கி நிற்கிறது. நேர்மாறாக கி.ராஜநாராயணன் தன் தனித்த சாதி அடையாளத்துடன் தான் எழுத்துக்கு வந்தார் . அவரது முதல்கதையான மாயமான் அவ்வடையாளத்தை துல்லியமாக பதிவு செய்கிறது. பிற்காலக் கதைகளில் மிக விரிவாக பதிவான தெலுங்கு நாயக்கர் சாதியின் வாழ்க்கையை கதைகளில் காண முடிகிறது.
நாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர்தான் கி.ராஜநாராயணன். அவரது மொழியும் கூறும் முறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன. அதை மீறிச்சென்று அவரை நவீனக் கதைசொல்லியாக ஆக்கும் அம்சங்கள் பலவும் அவரிடம் உண்டு.
நாட்டார் கதைசொல்லிகள் ஒரு சமூகத்தின் வம்ச கதை பாடகர்களைப்போன்றவர்கள். எல்லா பழங்குடி சமூகங்களிலும் இவர்கள் இன்றியமையாதவர்கள். அவர்களே அச்சமூகத்தின் வரலாற்றை தொடர்ச்சியாக்குபவர்கள். அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் மூதாதையர் வரிசை நினைவில் நிறுத்தப்படுகிறது. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகின்றன. வாழ்க்கைமுறையின் அடிப்படைக்கூறுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த கதைசொல்லியிலிருந்து நவீன இலக்கியவாதியாக உருவெடுத்தவர் கி.ராஜநாராயணன்.
தமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல. தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். மோதல்களற்றவனாகவும் தேடல்கள் அற்றவனாகவும் அதனாலேயே வடிவ சோதனை போன்றவற்றில் மிதமிஞ்சிய நாட்டம் கொண்டவனாகவும் இருப்பான்.
கி.ராஜநாராயணன் துவங்குவது அவரது இனக்குழு அடையாள்த்தில் இருந்தே. தெலுங்கு நாயக்கர்களின் சமூக, வரலாற்று, அன்றாட வாழ்க்கைப் பின்புலம் அவரது ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவரது கதைக்கருக்கள் பல அச்சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பதுவயதுக்குமேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்டபிறகுதான் எழுத ஆரம்பித்தார் என்ற செய்தி நம் முன் உள்ளது. அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது . மார்க்ஸிய அரசியல் கருத்துக்களும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். அவரது முதல்கதையான ‘மாயமான் ‘ இவ்விரு இழைகளும் கலந்து உருவானது. அதன் தலைப்பையே நாம் ஒரு குறியீட்டு ஆய்வுக்காக பயன்படுத்தலாம்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு குறித்தும் அதன் இலட்சியவாதங்கள் குறித்தும் உருவாகி வந்த ஆழமான அவநம்பிக்கையை இக்கதை சொல்கிறது. ‘சோஷலிச ‘ அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நடைமுறையில் மோசடிகளாக ஆவதைப்பற்றிய கதை இது. அதற்கு அவரது ‘வைணவ ‘ கரிசல் மண்ணில் வேரூன்றிய ராமாயணத்திலிருந்து படிமத்தை எடுத்துக் கொள்கிறார்.
தன் கதைகள் முழுக்க கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலை ‘கரிசல்படுத்த ‘ முயன்றார் . மார்க்ஸிய அழகியலின் முக்கியமான குறை அது கோட்பாட்டுக்கு உதாரணமாகத்தான் வாழ்கையைக் காண்கிறது என்பதே. இந்தியச்சூழலில் ‘சப்பையான ‘ மார்க்ஸியர்களில் கோட்பாட்டிலிருந்து துவங்கும் தன்மையைக் காண்கிறோம். உதாரணம் டி.செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்கள். சிறந்த எழுத்தாளர்களில் வாழ்க்கையிலிருந்து துவங்கி கோட்பாட்டை எட்ட முயலும் தன்மையைக் காணலாம். உதாரணம் தகழி சிவசங்கரப் பிள்ளை. கி.ராஜநாராயணன் இரண்டாம் வகைக்கு இந்திய முற்போக்கு இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமான முன்னுதாரணம். இப்படி வாழ்விலிருந்து தொடங்கி கோட்பாட்டுக்கு வரும்போது பொதுவாக ‘கச்சிதமாக ‘ கோட்பாட்டுக்கு வந்துவிட முடிவது இல்லை . குறி கொஞ்சம் தவறிவிடுகிறது . அப்போது தி.க.சிவசங்கரனைப்போனற ‘அட்டை பரிசோதகர்கள் ‘ இதனால் குழம்பிப்போய் இவர்களை வாசலிலேயே நிற்கச்செய்துவிடுகிறார்கள். தகழி இப்படி ‘விசாரணைக்கு ‘ உட்படுத்தப்பட்டதுண்டு. ஆனால் அங்கே ஜோசப் முண்டசேரி போல அழகியல் அறிந்த மார்க்ஸிய விமரிச்கர்கள் இருந்தனர். இங்கே தி.க.சிக்கள்.
இப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்ல வேண்டியதில்லை. மார்க்ஸியக் கோட்பாடு ‘உலகு தழுவிய ‘மானுடம் பற்றிய கனவை முன்வைப்பது. மனிதனை அவனது ஒட்டுமொத்தம் சார்ந்து பேசமுற்படுவது, அந்த ஒட்டுமொத்தத்தின் அடிப்படையாக அவனை ‘ உற்பத்தி அலகு ‘ மட்டுமாக சுருக்கும் தன்மை கொண்டது. அவனது கலாச்சாரத்தின் ஒட்டுமொத்தத்தை பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானம் மட்டுமாக பார்ப்பது. மார்க்ஸியம் மனித வரலாறு கண்ட மாபெரும் குறுக்கல்வாதம். மகத்தான குறுக்கல்வாதமும் கூட! மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு. கி.ராஜநாராயணனின் கோணம் முதலில் அவனை அவன் சார்ந்துள்ள இனக்குழு கலாச்சாரத்தின் ஓர் அலகாக பார்க்கிறது. அங்கிருந்து தொடங்கி உற்பத்தியை அடித்தளமாக கொண்ட பொருளியல் /சமூக/ அரசியல் அமைப்பின் அடிப்படை அலகாகப் பார்க்க முயல்கிறது.
தமிழினியில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் சுருக்கம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.