தமிழ் விளையாட்டு -14 : ஆளும் கட்சியில் அறிஞர்கள் எங்கே?

சட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.

இரா.குமார்

எதிரியை தன் பேச்சால் அதளபாதாளத்துக்கு விமர்சிப்பார் திமுக பொதுச் செயலாளர் அன்ப்ழகன். ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது. அவருடைய பேச்சின் உட்பொருளை ஆழ்ந்து பார்த்தால்தான் அது புரியும்.

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு இருப்பது போல தமிழ்நாட்டிலும் சட்டப் பேரவை, சட்ட மேலவை என இரண்டு இருந்தது. பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் தனித்தனியாக வாக்களித்து, தங்கள் பிரதிநிதிகளை மேலவைக்க்கு அனுப்புவர்கள். நியமன உறுப்பினர்களும் உண்டு. மேலவையில் பெரும்பாலும் படித்தவர்களும் அறிஞர்களும் மட்டுமே இடம் பெறுவார்கள். எனவே, இதை அறிஞர்கள் சபை என்றும் சொல்வார்கள்.

”கப் அண்ட் சாசரில் கப் போன்றது சட்டப் பேரவை; சாசர் போன்றது மேலவை. கப்பில் இருக்கும் சூடான காபியை சாசரில் ஊற்றி ஆற வைத்து குடிக்கிறோம். அதுபோல சட்டப் பேரவையில் விவாதம் சூடாக இருக்கும். மேலவையில், விவாதம் சூடாக இருக்காது. அறிவு பூர்வமாக இருக்கும்” என்று அண்ணா சொல்வார்.

எம்ஜிஆர் காலத்தில் மேலவை ஒழிக்கப்பட்டது. கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனதும், சட்ட மேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார். ஒப்புதல் கிடைக்கும் முன் 1990ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1991ல் ஜெயலலிதா முதல்வர் ஆனதும் மேலவை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். 1996ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் மேலவை அமைக்க தீர்மானம் நிறைவேற்றினார். ஆட்சி முடியும் வரை மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. 2001 ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதும் மேலவை வேண்டாம் என்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் அன்பழகன் பேசும்போது, “மேலவை என்பது அறிஞர்கள் நிறைந்த சபையாக இருக்கும். அறிவார்ந்த விவாதம் நடக்கும். அது நல்லது. எனவே, மேலவை தேவை என்பதே திமுகவின் நிலை” என்றார்.

முதல்வர் ஜெயலலிதா எழுந்து, “மேலவையில் அறிஞர்கள் இருப்பார்கள் என்று பேராசிரியர் அன்பழகன் சொல்கிறார். இந்த அவையில் அறிஞர்கள் இல்லையா? பேராசிரியர் இருக்கிறார். எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் இருக்கிறார். லத்தீப் இருக்கிறார். குமாரதாஸ் இருக்கிறார். இவர்களெல்லாம் அறிஞர்கள்தானே” என்றார். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள்.

அன்பழகன் உடனே எழுந்து, “ஆளுங்கட்சியில் இருக்கும் முதல்வருக்கோ, அமைச்சர் பொன்னையன் போன்றவர்களுக்கோ, அங்கிருந்து பார்க்கும்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்கள் கண்ணில்படுகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பார்க்கும் எங்களுக்கு ஆளுங்கட்சி வரிசையில் இருப்பவர்கள்தான் கண்ணில்படுகிறார்கள்” என்றார்.

எதிர்க்கட்சி வரிசையில் அறிஞர்கள் இருக்கிறோம். ஆனால், ஆளுங்கட்சியில் அறிஞர்களே இல்லை என்பதை வார்த்தை விளையாட்டின் மூலம் நாசூக்காக சொன்னார் அன்பழகன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close